தமிழ்நாட்டுல மாட்டை வைத்து, ஒரு அரசியல் படம்- இராமே ஆண்டாலும் இராவண ஆண்டாலும் விமர்சனம்

இராமே ஆண்டாலும் இராவண ஆண்டாலும் விமர்சனம்

இயக்கம் – அரிசில் மூர்த்தி

நடிகர்கள் – மிதுன் மாணிக்கம் , வடிவேல், ரம்யா பாண்டியன், வாணி போஜன்

கதை கரு : எந்த வசதியும் இல்லாத ஒரு குக்கிராமத்தில், ஒரு ஏழை விவசாயி அன்பாக குழந்தை போல் வளர்க்கும் மாடுகள் திடீரென காணமல் போகிறது. அதனை தேடப்போக அது மீடியா, அரசியல் பிரச்சனை என மாறி, அந்த குக்கிராமமே தமிழ்நாட்டின் கவனத்திற்கு உள்ளாகிறது. இறுதியில் அந்த ஏழைக்கு மாடு கிடைத்ததா என்பதே கதை.

ஒரு கிராமம், ஒரு ஏழை விவசாயி அவனது மாடு அதன் பின்னணியில் ஒரு அரசியலையும் தமிழ்நாட்டின் பிரச்சனைகளையும் நையாண்டி வகையில் சாட திட்டமிட்டு உருவாக்கப்பட்ட கதை. அமீர்கானின் peepli live, தமிழில் வந்த ‘காக்கா முட்டை’ போல வந்திருக்க வேண்டிய படம். ஆனால் எந்த ஓர் ஈர்ப்பும் இல்லாத திரைக்கதையாக மாறியதோடல்லாமல், அமெச்சூர்தனமான மேக்கிங்கில் பாதியில் கவிழ்ந்த கப்பலாகி விடுகிறது.

படம் ஆரம்பிக்கும் இடம் வெகு சுவாரஸ்யமாக இருக்கிறது. ஆனால் தொடர்ந்து கதை சொல்லும் போக்கு எந்த வித நோக்கமும் இல்லாமல் பயணிப்பதோடு, நமக்கு படம் எதைப்பற்றி என்ற குழப்பத்தையே தருகிறது. மாடு காணாமல் போவது தான் கதையின் முக்கிய பிரச்சனை எனும் போது அது எப்படி கடத்தப்பட்டது அதன் பின்னணி காட்சிகள் என எதுவுமே படத்தில் இல்லை. திடீரென ஒரு கிராமத்தில் மீடியா நுழைவது இதை சர்வதேச பிரச்சனையாக மாற்றுவது, YouTube முதல் இதைப்பற்றியே பேசுவது என்பதெல்லாம் நம்பமுடியாத லாஜிக் ஓட்டை. எந்த மாட்டை கறிக்கு விற்பார்கள் என்கிற அடிப்படை விசாரணை கூட படத்திற்காக செய்யவில்லை. படம் முழுக்கவே எடிட்டிங் சொதப்பல். ஒரு காட்சி முழுமையாக உணர்வை கடத்தாமல் அமெச்சூர்தனமாகவே இருக்கிறது.
படத்தின் ஆரம்ப காட்சிகளில் நாயகன் நாயகி வடிவேல் கிழவி தவிர கிராமத்தில் யாருமே இருப்பதில்லை. ஒரு கட்டத்தில் மாடு பற்றிய படம் கிராமத்தின் பிரச்சனையை பேச ஆரம்பிக்கிறது, கதை ஒரு நேர்கோட்டில் இல்லாமல் எங்கெங்கோ அலை பாய்கிறது.

நாயகன் நாயகியை பார்க்கும் காட்சிகள், நடிகர் வடிவேல் அடிக்கும் பஞ்ச்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது ஆனால் அதற்கடுத்த காட்சிகளில் படம் தடுமாற ஆரம்பித்துவிடுகிறது. பேட்டி கொடுக்கும் காட்சியில் சீமானை வைத்து செய்துள்ளார்கள் மொத்த படத்திலும் அந்த ஒரு காட்சியில் தான் மொத்த தியேட்டரும் கலகலத்து சிரிக்கிறது. இந்தி திணிப்பு, ஜாதிப்பிரச்சனை, அரசியல் ஊழல் என அனைத்திற்கும் வாண்ட்டடாக கருத்து சொல்கிறார்கள். அது காட்சிகளோடு ஒட்டவில்லை. இசை பல இடங்களில் இரைச்சலாகவே மிஞ்சுகிறது. ஒளிப்பதிவு படத்திற்கு வேண்டியதை மட்டும் செய்திருக்கிறது. இருவர் நின்று கொண்டே டிராமா போல் பல காட்சிகளில் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். குளத்தில் ஒரு கிழவர் தனியே தூர்வார மூவர் தனியே போஸ் கொடுத்து கேமராவை பார்த்து நிற்கிறார்கள். இந்த அமெச்சூர்தனத்தை குறைத்து
திரைக்கதையிலும் காட்சி உருவாக்கத்திலும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் தமிழில் ஒரு நல்ல முயற்சியாக மிளிர்ந்திருக்கும்.

இராமே ஆண்டாலும் இராவண ஆண்டாலும் படம் பார்ப்பவர்களுக்கு கவலையை மட்டுமே தருகிறது.