‘கேர் ஆப் காதல்’ -படம் எப்படி இருக்கு? – விமர்சனம்

நம்மாளு முண்டாசு கவிஞன்  பாரதியார் சொன்னது போல் தேவையே இல்லாத பிரச்சினை & சச்சரவுகளால் உண்டான போர்களால்  இவ்வுலகம் எப்போதோ அழிந்து போயிருக்கும். அந்த அழிவில் இருந்து உலகத்தை இன்றைக்கும் காப்பாற்றிக் கொண்டிருப்பது எது தெரியுமா? காதல் என்ற மூன்றெழுத்து மந்திரச் சொல்தான். ஆனாலுல் குழந்தை கல்வி தொடங்கி  உலக இலக்கியம், நாட்டு நடப்பு, அரசியல் அறிவு, வீர உரை  என பரந்த உலகப் பார்வையுடன் நுட்பமான திறன்களையும் பெற்றிருந்த அந்த பாட்டுத் தலைவன் பாரதி “மூன்று காதல்” என்ற தலைப்பில் ஒரு படைப்பை உருவாக்கி இருந்தார்  அதில்‘சரஸ்வதி காதல்’; ‘லக்ஷ்மி காதல்’; ‘காளி காதல்’ஆகிய மூன்று விதமான காதல்களாக சொன்னதை  சகலரும் உணரும் விதமாக சொல்லி இருக்கும் சினிமாதான் ‘கேர் ஆப் காதல்’.

இந்த ஒரே படத்திற்குள் நான்கு வெவ்வேறு கதைகள், அது மதம் மற்றும் காதல் என்ற ஊடாட்டத்திற்கு நடுவில் ஒரு புள்ளியில் இணைகிறது. அதாவது முதலாவது பள்ளிப்பருவக் காதல், இரண்டாவது இளைய வயதில் யுவன் – யுவதிக்கிடையிலான காதல், அடுத்து 30 வயதுகளைக் கடந்த பின் தான் விரும்பும் பெண் விலைமகளாக இருந்தாலும், ஏற்றுக் கொள்ளும் பக்குவமிக்க காதல், நான்காவது 49 வயது ஆணுக்கும் 42 வயது பெண்ணிற்குமான காதல். இந்த நான்கு கதைகளும் ஒன்று சேரும் புள்ளி, படத்தின் க்ளைமேக்ஸில் விடுவிக்கப் படுகிறது.

தெலுங்கு திரையுலகில் 2018-ஆம் ஆண்டு வெளியான படம் ‘C/O கஞ்சரபாலம்’. அந்த படத்தை இயக்குநர் வெங்கடேஷ் மகா இயக்கியிருந்தார். அதில் சுப்பா ராவ், ராதா பெஸ்ஸி, கேசவா கர்ரி, நித்யஸ்ரீ கோரு, கார்த்திக் ரத்னம், பிரநீதா பட்நாயக், மோகன் பகத், பிரவீனா பருச்சூரி மற்றும் பலர் நடித்திருந்தனர். தெலுங்கில் மெகா ஹிட்டானதன் தமிழ் ரீமேக் தான் இந்த  ‘C/O காதல்’. இந்த படத்தை இயக்குநர் ஹேமம்பார் ஜஸ்டி இயக்கியுள்ளார். தீபன், வெற்றி, மும்தாஜ் சோர்கர், ஆர்யா, கார்த்திக் ரத்னம், சோனியா கிரி, நிஷேஷ், ஸ்வேதா ஆகியோர் நடித்துள்ளார்கள்.

மெயின் கேரக்டரில் வரும் அந்த கால முதல் மரியாதை தீபன், ராதா ரோலில் வரும் சோனியா கிரி, தாடியாக வருகிற ஜிவி புகழ் வெற்றி, சலீமா என்னும் நேமில் வரும் மும்தாஜ் சொர்கர், ஜோசப் என்னும் கார்த்திக் ரத்னம் என்று ஒவ்வொருவரும் ஸ்கோர் செய்திருக்கிறார்கள்.

ஸ்வீகர் அகஸ்தியின் இசையும் நீலன் கே. சேகர் வசனங்களும் படத்துக்கு பலம்.

பொழுது போக்கும் சாதனத்தில் டாப் லிஸ்டில் இருக்கும் சினிமாக்களில் எப்போதாவது சிலவை நம் ஆழ் மனதை கிளறி விடும்.. அப்படியானதொரு விஷயத்தை கொஞ்சம் புதுமையான திரைக் கதை மூலம் விளக்கி இருக்கும் இயக்குநருக்கு ஒரு பூங்கொத்து பார்சல் கொடுத்தே ஆக வேண்டும்

மொத்தத்தில் காதலை விரும்புவர்கள் மட்டுமின்றி சினிமா-வை நேசிப்பவர்களும் பார்த்தே ஆக வேண்டிய படமிது.

நன்றி : ஆந்தை ரிப்போர்ட்டர்