’வட்டார வழக்கு’ – கிராமத்து கொண்டாட்டம் !

கிராம வாழ்வியலை சொல்லும் படங்கள் எதுவும் இப்போது வருவதில்லை. அந்த வகையில் கிராமத்துக்குள் வாழும் மனிதர்கள் அவர்களின் பழக்க வழக்கம் எல்லாவற்றையும் இரத்தமும் சதையுமாக கண்முன் நிறுத்தும்படியாக உருவாகியுள்ளது வட்டார வழக்கு.

1980 கால கட்டத்தில்  மதுரையில் உள்ள ஒரு கிராமத்தில் நடக்கும் கதை.
இரு பங்காளி குடும்பங்களிடையே பல வருடமாக நிலவும் நிலப்பிரச்சனை, இது தான் படத்தின் மையம். ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நாயகன் சந்தோஷ  மற்றொரு குடும்பத்தைச் சேர்ந்த சிலரை கொலை செய்து விடுகிறார். அந்த குடும்பம் அவரை கொலை செய்ய முயல்கிறது.

பங்காளி சண்டை ஒருபுறம்.இருந்தாலும் காதலில் விழும் சந்தோஷ் ரவீனா மீது காதல் கொள்கிறார். பகை தீர்ந்ததா? சந்தோஷின் காதல் நிறைவேறியதா என்பதே   ’வட்டார வழக்கு’  படத்தின் கதை.

டூலெட் படத்தில்  நாயகனாக அறிமுகமான  சந்தோஷ் நம்பீராஜன் இப்படத்தில் முரட்டு கிராமத்து வேடமேற்றுள்ளார். எதற்கெடுத்தாலும் கோபத்தோடு அருவா தூக்குவதும், காதலில் உருகுவதும் என அச்சு அசலாக கிராமத்து இளைஞனை கண்முன் கொண்டு வந்துள்ளார்.

நாயகி  ரவீனா ரவி  அறிவொளி இயக்கத்தில் முதியோர்களுக்கு  எழுதப் படிக்கச் சொல்லிக் கொடுக்கும் துறுதுறுப்பான கதாபாத்திரத்தில்  வருகிறார்.தோற்றத்தில் நடிப்பில் நம் கிராமத்துப் பெண்ணாகவே மாறி இருக்கிறார்.

படத்தில் மற்ற கதாபாத்திரத்தில் நிறைய கிராமத்து மனிதர்கள்  நடிதிருக்கிறார்கள் ஆனாலும் செயற்கைத்தனம் இல்லாமல் அற்புதமான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

படத்தின் மிகப்பெரிய பலம் இளையராஜாவின் இசை.  1987 ம் காலக்கட்டத்தில் கதை நடப்பதால், அப்போதைய இளையராஜாவின் பாடல்களை பின்னணியில் ஒலிக்க விட்டிருக்கிறார் இயக்குநர் அது காட்சிகளுக்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

படத்தின் மற்றொரு பலம் வசனங்கள் சாராசரி மக்கள் அறிந்திராத வட்டார வழக்கு படம் முழுக்க வருகிறது. ஒரு பதிவாகவே இது நம் கிராமத்து வாழ்வியலின் அடையாளம் எனலாம்

1980 காலகட்டத்தில் கிராமத்து வாழ்க்கையில் நம்மையும்  சேர்த்து பயணிக்க வைக்கிறார் இயக்குனர் கண்ணுசாமி ராமசந்திரன். அதற்காக கண்டிப்பாக பாராட்டலாம்.

படத்தின் மைனஸ் படம் முழுக்க இருக்கும் வன்முறை. கிராமம் என்றாலே வன்முறை தானா ?. படம் எந்த வழியில் செல்கிறது என்றே தெரியவில்லை தடதடவென புரியாமல் ஓடுகிறது. இருந்தாலும் ஒரு கிராமத்து பதிவாக
பார்க்க வேண்டிய அழகான கிராமத்துப்படம்.