எம்.ஜி.ஆரையே அசர வைத்த ‘அன்பே வா’ தயாரான சுவையான கதை!

வெள்ளித்திரையில் கொடிகட்டிப் பறந்தவர்களை வைத்துப் படமெடுத்த பிரமாண்ட நிறுவனம் ஏவிஎம் தயாரிச்ச படம் ‘அன்பே வா’. பொதுவாக இந்த நிறுவனத்தில் நடித்தாலே, அவர்கள் கொடி இன்னும் உயர ஆரம்பித்துவிடும். சிவாஜியை வைத்தும் ஜெமினியை வைத்தும் ஜெய்சங்கரை வைத்தும் எஸ்.எஸ்.ஆரை வைத்தும் ரவிச்சந்திரனை வைத்தும் என படங்கள் எடுத்த ஏவிஎம்… முதன் முறையாக எம்ஜிஆரைக் கொண்டு எடுத்த படம்தான் அன்பே வா.

இதன் கதை உருவானதே அலாதியாக்கும்.. அதாவ்து 1961 ஆம் வருசம் வெளியான அமெரிக்க காதல் நகைச்சுவைத் திரைப்படமான கம் செப்டம்பர் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் குறிப்பாக மெட்ராஸில் சூப்பர் ஹிட் ஆனது. இதன் உள்ளாக்கத்தை ஏ.வி.எம் புரொடக்ஷன்ஸில் இருந்த ஏ.சி.திருலோக்சந்தர், தழுவி தனி ஒரு கதை பிடித்தார், ஆனால் ஏ.வி.எம் அப்படத்தைத் தழுவுவதற்கான உரிமையை வாங்கவில்லை என்பது தனிக் கதை.

இந்த படத்துக்காக திருலோக்சந்தரின் சம்பளம் 70,000 ஆகும்.

ஆரூர் தாஸ் படத்தின் வசனங்களை எழுதினார், மற்றும் எஸ்.பி.முத்துராமன் உதவி இயக்குநராக பணியாற்றினார். எஸ்.மாருதி ராவ், ஆர்.ஜி.கோப் மற்றும் ஏ.கே.சேகர் ஆகியோர் முறையே ஒளிப்பதிவு, எடிட்டிங் மற்றும் கலை இயக்கம் ஆகியவற்றின் பொறுப்பில் இருந்தனர். ஏ.கே.சோப்ரா படத்தின் நடனப் பொறுப்பாளராக இருந்தார், பின்னர் இந்திய சினிமாவில் வெற்றிகரமான நடன இயக்குனராக மாறிய ரகுராம் அவருக்கு உதவி நடன இயக்குனராக பணியாற்றினார்.

இதனிடையே இப்படம் உருவான கதை குறித்து ஏ வி எம் சரவணன், “நான் சினிமா பார்க்கத் தொடங்கிய காலம் முதல், எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளியாகும் படங்களை மட்டும் தவற விட்டதே கிடையாது. அவரது படங்களை, வெளியாகும் முதல் நாளே பார்த்து விட வேண்டும் என்ற ஆசை எனக்கு உண்டு. அப்போதெல்லாம் எம்.ஜி.ஆர். படங்கள், தாம்பரத்தில்தான் முதலில் ரிலீசாகும். அதன்பிறகுதான் சென்னை நகரில் வெளியிடுவார்கள்.

‘இங்கே சிட்டியில் ரிலீசாகாமலா போய்விடும்? அப்போ போய் பாருங்களேன்’ என்பார் அப்பச்சி. ஆனால் எங்களுக்கு எம்.ஜி.ஆரின் படத்தை முதல் நாள் பார்த்தால்தான், படம் பார்த்த திருப்தி கிடைக்கும். ‘நாடோடி மன்னன்’ படம் வெளியானபோது, நானும், எனது சகோதரர்கள் முருகன், குமரன் ஆகியோரும், தாம்பரம் எம்.ஜி.ஆர். தியேட்டரில்போய், முதல் நாளே படம் பார்த்த திரில் அனுபவம் இன்னும் நினைவில் இருக்கிறது.

எம்.ஜி.ஆர். கத்திச் சண்டை போடும் பாவனைக்கு ரசிகன் நான். சண்டை போடும்போது ஒரு பறவையைப் பிடிப்பதுபோல, லாவகமாக கத்தியைப் பிடிக்க வேண்டும் என்பார்கள். மிகவும் லேசாகப் பிடித்தால் பறவை தப்பிவிடும். அதே நேரம் அழுத்திப் பிடித்துவிட்டால் இறந்து விடும். அதுபோலத்தான் கத்தியும். ஒரு குறிப்பிட்ட அளவு அழுத்தம் தந்து பிடித்தால்தான், கத்தியை அழகாகச் சுழற்றி சண்டை போட முடியும். அந்த லாவகம் எம்.ஜி. ஆருக்கு கை வந்த கலை.

இப்படிச் சின்ன வயதில் இருந்தே எம்.ஜி.ஆரை மிகவும் பிடித்துப் போனதாலோ.. என்னவோ, அவரை வைத்து ஒரு படம் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்குள் வளர்ந்துகொண்டே இருந்தது. நான் சொன்னதன் பேரில் ஏ.சி.திருலோகசந்தர், எம்.ஜி.ஆருக்காக ஒரு கதையைக் கூட தயார் செய்து விட்டார். அப்போது மிகவும் பிரபலமாக ஓடிய ‘கம் செப்டம்பர்’ என்ற ஆங்கிலப் படத்தின் கதையை அடிப்படையாகக் கொண்டு, அந்தக் கதையை திருலோகசந்தர் எழுதியிருந்தார். இவ்வளவும் முடிந்த பிறகும் கூட, எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுக்கப் போகிறோம் என்று அப்பச்சியிடம் சொல்ல எங்களுக்கு தயக்கமாகவும், பயமாகவும் இருந்தது.

ஏனென்றால் எங்கள் நிறுவனத்தைப் பொறுத்தவரை, ஹீரோவுக்கு ஏற்றபடி கதை தயார் செய்யும் வழக்கம் கிடையாது. ஒரு கதையை தேர்வு செய்து, அதற்கு நன்றாக திரைக்கதை அமைத்து முடித்த பிறகுதான் ஹீரோவைப் பற்றிய பேச்சே வரும். ஆனால் திருலோகசந்தரோ, எம்.ஜி.ஆருக்காகவே அந்தக் கதையை எழுதியிருந்தார். எம்.ஜி.ஆருக்காக கதை தயார் செய்திருக்கிறோம் என்று சொன்னால் அப்பச்சி ஒப்புக் கொள்ள மாட்டார். இது தெரிந்தும் அவரிடம் போய் சொல்லி எதற்காக வீணாக திட்டு வாங்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு.

அந்த நேரத்தில் எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளியான ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படம் அமோக வெற்றி பெற்றிருந்தது. ஆகையால் எங்களது வினியோகஸ்தர்கள் அனைவரும் ‘எம்.ஜி.ஆரை வைத்து ஒரு படம் எடுங்க’ என்று அழுத்தம் கொடுத்துக் கொண்டிருந்தனர். என் நண்பர் எஸ்.ஏ.அசோகனும் கூட, ‘நீங்க எம்.ஜி.ஆரைக் கேட்டால் உடனே ஒப்புக்கொள்வார். அவருக்கும் உங்க கம்பெனியில நடிக்க வேண்டும்னு ஆசை இருக்கு’ என்று வற்புறுத்தினார்.

எனவே ‘அப்பச்சியிடம் போய் கேட்டு விடலாம்’ என்று, தைரியத்தை வரவழைத்துக் கொண்டு போனேன். அவருடன் பேசிக்கொண்டிருக்கும்போதே சாதாரணமாக இந்த வி‌ஷயத்தைக் காதில் போட்டேன்.அதைக் கேட்டவர், ‘ஏம்பா.. ஏன் இதை முன்னாடியே சொல்லலே?’ என்றார். எனக்கு இன்ப அதிர்ச்சி.

அப்பச்சியின் ஒப்புதல் கிடைத்து விட்டது. அடுத்து எம்.ஜி.ஆர். ஒப்புக்கொள்ள வேண்டுமே. நானும், என் சகோதரர்களும் ராமாவரம் தோட்டத்திற்குப் போனோம். வி‌ஷயத்தைச் சொன்னதும், ‘அதுக்கென்ன.. பண்ணிடுவோம்’ என்று ஒப்புக்கொண்டார் எம்.ஜி.ஆர். படத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்தபோதே, 3 லட்சம் ரூபாய் சம்பளம் வேண்டும் என்று எம்.ஜி.ஆர். கேட்டார். அதற்கு நான் ஒப்புக்கொண்டேன்.

அப்பா (ஏவி.மெய்யப்பச் செட்டியார்) எப்போதுமே முதல்ல கதையைத்தான் ரெடி பண்ணுவார். கதைக்கான டிஸ்கஷன் போயிக்கிட்டே இருக்கும். கதைல எந்தக் குழப்பமும் இல்ல, எல்லாருக்கும் திருப்தியா வந்திருக்குன்னு முடிவான பிறகுதான் ‘சரி, யார்யாரையெல்லாம் நடிக்கவைக்கலாம்’னு பேச்சு வரும். அப்படித்தான் ரொம்ப வருஷமாவே படம் பண்ணிட்டிருந்தோம்.

ஒருநாள் அப்பா கூப்பிட்டார். ‘என்னப்பா, டிஸ்டிரிபியூட்டர்கள் எல்லாரும் ஏவிஎம் இன்னும் எம்ஜிஆரை வைச்சுப் படமே பண்ணலியேனு கேக்கறாங்க’ன்னு சொன்னார். ‘எங்களுக்கும் அந்த எண்ணம்தான். ஆனா உங்ககிட்ட சொல்றதுக்கு தயக்கமா இருந்துச்சு. டைரக்டர் திருலோகசந்தர் (ஏ.சி.திருலோகசந்தர்) ஒரு கதைப் பண்ணிவைச்சிருக்கார். கேட்டுட்டுச் சொல்லுங்கப்பா’ன்னு சொன்னேன்.

இதுக்கு நடுவுல, நடிகர் அசோகன், எப்பப் பாத்தாலும் ‘எம்ஜிஆரை வைச்சு ஒரு படம் பண்ணுங்கன்னு சொல்லிக்கிட்டே இருந்தார். அதேபோல எம்ஜிஆர்கிட்ட, ‘ஏவிஎம்க்கு ஒரு படம் பண்ணுங்களேன்’ன்னும் சொல்லிக்கிட்டே இருந்தார் அசோகன்.

அப்பா கதையைக் கேட்டாரு. ‘சரி, சின்னவர்கிட்ட (எம்ஜிஆர்) கதையைச் சொல்லுங்க’ன்னாரு அப்பா.

நான், திருலோகசந்தர், ஆரூர்தாஸ் எல்லாரும் போய், கதையைச் சொன்னோம். முழுக்கதையையும் கேட்ட எம்ஜிஆர், ’இது என் படம் இல்ல. என் பார்முலா எதுவுமே இந்தப் படத்துல இல்ல. அம்மா கேரக்டர் இல்ல. தங்கச்சி இல்ல. சண்டைக்காட்சிகள் கிடையாது. இது ஏ.சி.திருலோகசந்தர் படம்’னு சொன்னார். ஆனா நடிக்கிறேன்னு ஒத்துக்கிட்டார்.

ஆனா, இதுவரைக்கும் எந்தவொரு நடிகருக்காகவும் ஏவிஎம் கதை பண்ணினது இல்ல. கதை பண்ணுவோம்; அதுக்கு யாரு பொருத்தமோ, அவரை ஹீரோவாப் போடுவோம். இத்தனைக்கும் ‘அன்பே வா’ படத்து கதையை எம்ஜிஆருக்காகத்தான் யோசிச்சோம். ‘ஒருவேளை எம்ஜிஆருக்கு கதை பிடிக்கலேன்னா, ஜெய்சங்கரையும் ஜெயலலிதாவையும் வைச்சு எடுக்கறதா முடிவு பண்ணிருந்தோம். ஆனா, எம்ஜிஆர் நடிக்க சம்மதிச்சாரு.

ஏவிஎம் தயாரிப்புலயும் சரி, எம்ஜிஆரோட கேரியர்லயும் சரி… ‘அன்பே வா’ திரைப்படம், வித்தியாசமான வெற்றிப்படம்” என்றார்.

எக்ஸ்ட்ரா ரிப்போர்ட்:

8.12.1965 காலையில் ‘‘அன்பே வா’’ படத்தின் ஆரம்ப பூஜை வழக்கம்போல வாழைச்சருகு தொன்னையில் சுவையான சர்க்கரைப் பொங்கல் மற்றும் சூடான சுதேசிக் கொண்டைக்கடலைச் சுண்டலுடன் தொடங்கியது. முதல் நாள் படப்பிடிப்பிற்கு வந்த எம்.ஜி.ஆர். தளத்தின் உள்ளே நுழைந்த மாத்திரத்தில் அங்கு அமைக்கப் பெற்றிருந்த அந்த அழகிய மாளிகையைப் பார்த்து மலைத்துத் திகைத்துப் போய்விட்டார்.

இதென்ன சினிமாப்பட செட்டா? அல்லது உண்மையாகக் கட்டப்பட்ட மாளிகைதானா என்று சந்தேகம் கொண்டு அங்கிருந்த ஒரு கருப்பு வண்ணக் கிரில்லை விரலால் சுண்டித் தட்டிப் பார்த்தார். அது ‘டிங் டிங்’ என்று ஓசை எழுப்பியது. ஆமாம். அது அசல் ஸ்டீலால் ஆன ஒரிஜினல் கிரில்தான் என்று அறிந்து கொண்டார்.

தளத்தை விட்டுத் தனது புதிய தனி மேக்–அப் அறைக்குள் அடி எடுத்து வைத்த ‘மக்கள் திலகம்’ மயக்கம் போட்டு விழாத ஒரு குறைதான்! குளிர்சாதன (ஏர்கண்டிஷன்) பெட்டியிலிருந்து தவழ்ந்து வந்த இளங்காற்று, நறுமணங்கமழும் இனிய ‘ஜேஸ்மின்’ ஸ்பிரேயுடன் கலந்து எம்.ஜி.ஆரின் மனதை மகிழ்வித்தது. ஒப்பனை இட்டுக் கொள்வதற்காக உட்காரும் சுழல் நாற்காலி. (‘ரிவால்விங் சேர்’) அதன் எதிரே இருக்கும் பெரிய பெல்ஜியம் முகம் பார்க்கும் கண்ணாடி! ஏனைய ஒப்பனைக்குரிய சாதனங்கள் அத்தனையுமே புத்தம் புதியது.

இந்திய உடம்பில் அமெரிக்க தலையையும், அதனுள்ளே பிரிட்டிஷ் மூளையையும் கொண்டிருந்த காரைக்குடி ஆவிச்சி செட்டியாரின் ஏகமகன் ஆன மெய்யப்ப செட்டியார் என்ற பிறவி மேதை – மருதூர் கோபாலமேனனின் நான்காவது புதல்வரான – பூதலம் புகழ் ராமச்சந்திரன் என்னும் எம்.ஜி.ஆரை மயங்க வைப்பதற்காக அல்ல – அவருக்கு மதிப்பும் மரியாதையும் அளிப்பதற்காகச் செய்த இனிய ஏற்பாடுகள் இவை என்பதை ஒப்பனை அறையில் எம்.ஜி.ஆருக்கு புரிந்த நிலையில்.அவருடைய செவ்விதழ்களில் ஒரு சிறு பெருமிதப் புன்னகை நெளிந்தது.

இந்த கதை சிம்லாவில் அமைக்கப்பட்டிருந்தாலும், படத்தின் பெரும்பகுதி ஊட்டியில் படமாக்கப்பட்டது. சிம்லாவில் படப்பிடிப்பு ஐந்து நாட்கள் மட்டுமே நடந்தது. சிம்லாவில் படமாக்கப்பட்ட காட்சிகளுக்கு, பி.என்.சுந்தரம் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தமானார், ஏனெனில் மாருதி ராவ் அப்போது உடல்நிலை சரியில்லாமல் இருந்தார்.

சிம்லாவிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள குஃப்ரியின் சிறிய மலை பகுதியிலும், சிம்லாவின் மால் சாலையிலும் “புதியா வானம்” பாடல் படமாக்கப்பட்டது. படத்தின் பகுதிகள் வால்பாறையில் 15 ஏக்கர் பரப்பளவில் 200 ஆண்டுகள் பழமையான பங்களாவில் படமாக்கப்பட்டன.

மேலும் அப்போது பிரபல தமிழ் பத்திரிகை இருந்த ஆனந்த விகடனில் பணியாற்றிய ஆசிரியர் சாவி, இப்பட்க் குழுவுடன் சிமலா எல்லாம் போய் உடனிருந்து படம் தயாரிப்பது குறித்த கட்டுரையை வெளியிட்டாராக்கும்.