நடிகர் திலகம் சிவாஜிக்கே ஸ்பெஷலான படம் ’வியட்நாம் வீடு’ ! ஏன் தெரியுமா?

கவிதையோ, கதையோ அல்லது நகைச்சுவை என்றால் கூட மறக்க முடியாத கேரக்டர் கள் இருப்பது போல் சினிமாவிலும் நிறையவே உண்டு. பல சினிமாக்களில் சம்பந்தப் பட்ட நடிகர் – நடிகைகள், அந்தக் கேரக்டராகவே வாழ்ந்து நம்மை பிரமிக்க வைத்திருப் பார்கள். அப்படி, திரையுலகில் நம் கண்முன்னே ஆதர்ஷ தம்பதியாக வாழ்ந்து காட்டியவர்கள் சிவாஜியும் பத்மினியும். அந்தப் படத்தில் சிவாஜி தெரியமாட்டார். பத்மினியைப் பார்க்கமுடியாது. பிரஸ்டீஜ் பத்மநாபனும் சாவித்திரியும்தான் தெரிவார்கள்; ஒளிர்வார்கள். அந்தப் படம்… ‘வியட்நாம் வீடு’.

சிவாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான இப்படம், நடிகர் திலகத்தின் உணர்ச்சிபூர்வமான நடிப்பைக்கொண்ட படங்களில் கண்டிப்பாக இடம் பெறுவது. ஏற்கெனவே விடிவெள்ளி (பிரபுராம் பிக்சர்ஸ்), பாசமலர், குங்குமம் (ராஜாமணி பிக்சர்ஸ்), புதிய பறவை (சிவாஜி பிலிம்ஸ்), அன்னை இல்லம் (கமலா பிக்சர்ஸ்), தெய்வமகன் (சாந்தி பிலிம்ஸ்) போன்ற படங்கள் சொந்தப்படமாக இருந்தபோதிலும் ‘சிவாஜி புரொடக்ஷன்ஸ்’ என்ற நிறுவனம் தொடங்கப்பட்டு முதல் படமாக தயாரிக்கப் பட்டது. இப்போதும் சிவாஜி புரொடக்ஷன்ஸ் எம்ப்ளமாக நடிகர்திலகமும், ராஜாமணி அம்மையாரும் சாமி படங்களுக்கு பூஜை செய்வதைக் காட்டும்போது அங்கு வியட்நாம் வீடு படத்தின் கிளாப் போர்டு இருப்பதைப் பார்க்கலாம்.

எண்ணற்ற படங்களிலும் கதாபாத்திரங்களும் தன் ஆகச்சிறந்த நடிப்பை வழங்கியவர் சிவாஜி. 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் நடிகர்திலகம். அதில் டாப் டென் என்றொரு பட்டியல் போட்டால், அதில், வியட்நாம் வீடு பிரஸ்டீஜ் பத்மநாபனும் வந்து கம்பீரமாக, கெளரவமாக உட்கார்ந்துகொள்வார். படமாக்கப்படுவதற்கு முன்னர் இது சிவாஜி நாடக மன்றத்தால் பலநூறுமுறை மேடை நாடகமாக நடத்தப்பட்டது. படத்தில் பத்மினி நடித்த ரோலில், நாடகத்தில் (நடிகர்திலகத்தின் ஜோடியாக) நடிகை ஜி.சகுந்தலா நடித்திருந்தார். (சி.ஐ.டி.சகுந்தலா அல்ல, ஜி.சகுந்தலா).

வியட்நாம் வீடு திரைப்படம், 1970-ம் ஆண்டின் சிறந்த திரைப்படமாக (தி.மு.க. தலைமை யிலான) தமிழ்நாடு அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் பரிசு பெற்றது. (‘தி.மு.க.தலமையிலான’ என்ற வாக்கியம் எதற்கு?. “அன்றைக்கு காங்கிரஸ் அரசு இருந்தது, சிவாஜி காங்கிரஸ்காரர் என்பதால் கொடுத்தார்கள்” என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். அதைத் தவிர்க்கத்தான்).

சென்னை சாந்தி கிரௌன், புவனேஸ்வரி, திருச்சி பிரபாத் உட்பட தமிழகத்தில் ஐந்து நகரங்களில் நூறு நாட்களைக்கடந்து ஓடிய இப்படம் நடிகர் திலகத்தின் திறமையின் உரைகல்லாக அமைந்த படங்களில் ஒன்று.

ஒரு வீடு எப்படி இருக்கணும், எப்படி இருக்கக் கூடாது, வீட்டின் தலைவன் எப்படி இருக்கணும், எப்படி வாழணும், வாழ்வதற்கு பொன்னோ பொருளோ தேவையா? கெளரவம் எனப்படும் பிரஸ்டீஜ் அவசியமா? என்பதையெல்லாம் சொல்வதுதான் வியட்நாம் வீடு. குடும்பம் பற்றியும் அதன் குதூகல சோகங்கள் குறித்தும் எத்தனையோ படங்கள் வந்திருக்கலாம். இன்னும் என்னென்னவோ சொல்லி, நம்மை நெகிழப் பண்ணியிருக்கலாம். ஆனால் அத்தனையும் தாண்டி தனித்துவத்துடன் கம்பீரமாகவும் கெளரவமாகவும், அழகுடனும் அடக்கத்துடனும் நிற்கிறது வியட்நாம் வீடு. இது, சிவாஜி ஸ்பெஷல் படம். அதுமட்டுமா? சிவாஜிக்கே ஸ்பெஷல் படம் இது!

சுந்தரம் கதை வசனம். இதன் மூலம்தான் வியட்நாம் வீடு சுந்தரம் என்றானார். அப்படியொரு கதை, அப்படியொரு யதார்த்த வசனம். காட்சிப்படுத்தலில் அப்படியொரு எளிமை. கதை முழுக்க இனிமை. காட்சியை ரசித்து ரசித்து செதுக்கியிருப்பார் வியட்நாம் வீடு சுந்தரம். அதை ரசித்து ரசித்து, ரசிக்க ரசிக்கப் படம் பண்ணியிருப்பார் பி.மாதவன். வசனங்கள் ஒவ்வொன்றும் ஷார்ப்.

‘என்னடீ… சமையக்கட்டு கான்பரன்ஸ் போடுறேளா?’

‘’உம்புள்ளைக்கு பத்துரூபாயோட மதிப்பு தெரியாதுடி. ஏன்னா அவன் சாவித்திரி பெத்தபுள்ள. நான் சமையக்காரி பெத்தபுள்ள’.

‘நீங்க என் பையனை காலேஜ்லேருந்து சஸ்பெண்ட் பண்ணிருக்கப்படாது. டிஸ்மிஸ் பண்ணிருக்கணும்’

‘சிரிக்கச் சிரிக்கப் பேசலாம்டா. அடுத்தவா சிரிக்கறாப்ல நடந்துக்கப்படாது’.

‘ஏண்ணா. கண்ணாடி குத்திட்டு வந்திருக்கேளா. வலிக்கறதா’.
’இல்லடி… குளுகுளுன்னு இருக்கு’

‘படிப்பை விட்டுட்டு தொழிலாளியாகறோமேன்னு பாக்கறியா. தொழிலாளிகள்தாண்டா நம்ம நாட்டின் முதுகெலும்பு’.

‘வாய்ப்பு கிடைக்கறப்போ வாழ்க்கையை சீர்படுத்திக்கோ. ஆடம்பரமா இருக்கறதுக்கு நினைக்காதே’.

இன்கம்டாக்ஸ் அதிகாரிகள் பையனைக் கைது செய்யும்போது, ஜட்ஜ் சம்பந்தியிடம் ‘சம்பந்தி, இங்கே நம்மாத்துல பிரஸ்டீஜ்தான் போயிடுத்துன்னு நெனைச்சேன். ஜஸ்டிஸும் போயிடுத்து’ என்பார்.

‘இந்தாடி பாலிஸி… என் பசங்க மெச்சூர்டு ஆயிட்டாங்களோ இல்லியோ, இது மெச்சூர்டாகும்’ என்று மனைவியிடம் கொடுக்கிற பாலிஸி பத்திரங்கள்.

அத்தை, முன்னாடி ஒரு ஆயிரம் ரூபா கொடுத்தேனோள்யோ. இந்தா… இந்த ஆயிரத்தையும் வைச்சுக்கோ. நீ முந்திண்டா நோக்கு, நான் முந்திண்டா நேக்கு’,

‘தாத்தா தாத்தா, அந்த மண் சட்டியை உடைக்காம பத்திரமா வைச்சுக்கோ தாத்தா. என் அப்பா உனக்கு இப்போ கொடுத்த இந்த சட்டிலதான் அவருக்கு நாளைக்கிக் கொடுக்கணும்னானாம்’

’தராசு முள்ளுக்கு தட்டுகள்கிட்ட பாரபட்சம் இருக்கமுடியாதோண்ணோ’ என்று எத்தனை வசனங்கள். அத்தனை இடங்களிலும் வலிக்க வலிக்க கைத்தட்டினார்கள். மனம் வலிக்க வலிக்க, பார்த்துக்கொண்டே அழுதுகொண்டே கைத்தட்டினார்கள்.

இசை, மாமா என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட கே.வி.மகாதேவன். மைலேடி என்றொரு பாடல் இளசுகளுக்கானது. ரவுசுத்தனமானது. நாகேஷுக்கான பாடல். அந்த பாலக்காட்டுப் பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா’வையும் காட்சியையும் சிவாஜியின் சேஷ்டைகளையும் பத்மினியின் வெட்கம் கலந்த, வெட்கம் மறந்த நளினங்களையும் மறக்கவே முடியாது.
‘உன் கண்ணில் நீர் வழிந்தால்’ பாடல்… சொல்லவா வேண்டும்.

அதுமட்டுமா? ரிடையர்ட் ஆகிவிட்டேன் என்றதும் காட்டுகிற ரியாக்‌ஷன்.

சினிமா- இந்த மூன்றெழுத்து இருக்கும் வரை மறையாத வியட்நாம் வீடு படம் டிஜிட்டல் மயமாகி ரீ ரிலீஸாகப் போகுதாம். கண்டிப்பா குடும்பதோடு போய் பாருங்கோ