பிஸ்கோத் என்ற பெயரில் தீபாவளி சரவெடி!

உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு 5,43,11,615 என்றும், கொரோனாவால் மரணங்கள் எண்ணிக்கை 13,17,396 என்றும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 3,78,61,884 என்றும் உலக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.இதில் அதிர்ச்சி என்னவெனில் இது வரை இல்லாத அளவிற்கு கொரோனா பாதிப்பு புதிய உச்சமாக ஒரே நாளில் பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கையாக 6,57,000 பதிவாகி இருப்பதுதான். இந்த புள்ளி விபரங்களால் கவலைப்படுவர்கள் பட்டியலில் நீங்களும் உண்டா?

இப்படியான ”கவலைப்படுதலே கடுநரகு, அம்மா கவலையற்றிருத்தலே முக்தி” என்று பாரதி கூறியுள்ளார். நாம் சிரிப்பை மறந்து கவலைப்படும் போது நம்மை அறியாமலே நமக்கு பல விதமான நோய்கள் ஏற்படுகின்றது.

கவலையால் தோன்றும் நோய்கள்

நரம்பு தளர்ச்சியை உண்டாக்கும்
பலத்தை இழக்கச் செய்யும்
பலவகை ஏக்கங்களை உண்டாக்கும்
மூளைக்கோளாறு
இரத்த அழுத்தம்
இருதய நோய்
மொத்தத்தில் சிரிப்பை மறந்து கவலைப்படுவதால்தான் இவை போன்ற பலவகை நோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமாக காணப்படுகின்றன.  இந்த திடீர் தோன்றல் கொரோனா உள்ளிட்ட எல்லா இடையூறுகளையும் போக்கச் சிரிப்பு மட்டுமே பெரும் அளவில் உதவி செய்யும். அப்படியான சிரிப்பு என்பதை இந்த கொரோனாக் காலக் கட்டத்தில் பலரும் மறந்து போன சூழலில் ‘பிஸ்கோத்’ படத்தின் மூலம் காமெடி சரவெடி கொளுத்தி போட்டிருக்கிறார்கள் ஆர் கண்ணன் & சந்தானம் ஜோடி.

கதை ரொம்ப சிம்பிள் -ஆடு களம் நரேனும் ஆனந்த்ராஜும் மேஜிக் பிஸ்கட்ஸ் என்ற  பெயரில் ஒரு கம்பெனியை  தொடங்குகின்றனர். இதில் நரேன் தன் மகன் ராஜா (சந்தானம்), இந்த பிஸ்கட் கம்பெனியின் நிர்வாகி ஆகி விடுவான் என்ற ஆசைப்பட்ட நிலையில் இறந்து போய் விடுகிறார் . இதை அடுத்து ஆனந்தராஜ் கம்பெனியை கபளீகரம் செய்து  ராஜா-வாகிய சந்தானத்தை  அந்த பிஸ்கெட் கம்பெனியின் கடை நிலை ஊழியன் ரேஞ்சில் ஆக்கி விடுகிறார். அதனால் விரக்தி  மன நிலையில் இருந்த சந்தானத்தை ஒரு அநாதை இல்லப் பாட்டி ஜானகி (செளகார்ஜானகி) உசுப்பேத்தி, உசுப்பேத்தி அதே பிஸ்கெட் கம்பெனி நிர்வாகி  ஆக்கி விடுகிறார் என்பதே கதை.

இந்த பிஸ்கோத் கம்பெனியைச் சுற்றி நடக்கும் கதையில் நாயகனாக நடித்திருக்கும் சந்தானம்.  தனக்கே உரிய நக்கலான பேச்சு,  அதிரடி கவுண்டர்கள் என பர்பெக்டாக செய்திருக்கிறார்.    சீனியர் மோஸ்ட்  நடிகை சௌகார் ஜானகி வரும் காட்சிகளில் எல்லாம், கதை சொல்லும் பாட்டியாகவே மாறி அசத்துகிறார். அதிலும் இந்த பாட்டி மூலம் சொல்லும் எல்லா கதைகளும் சுவையாக இருப்பதுடன் ஒவ்வொரு கதையிலும் சந்தானம் தலைமையிலான லொள்ளுசபா டீம்  கேரக்டர்களை ஏற்று  சொல்வது போன்ற பாணி ரசிக்க முடிகிறது. அதே சமயம் 400வது படமாகிய இந்த பிஸ்கோத் படத்தில் வரும்  செளகார் காட்டும் சின்ன சின்ன குழந்தைத்தன மான முகபாவனைகள் அம்புட்டும் இப்போதும் புன்னகைக்க வைக்கிறது. ஹீரோயின் தாரா அலிஷா வந்தார் சென்றார்.  அதே சமயம் தன் காமெடி ஸ்கிரிப்ட்டுக்கு தேவையான  மொட்ட ராஜேந்திரன், மனோகர், ஆனந்த்ராஜ் என அனைவரையும் வைத்து முடிந்தளவு ரிலாக்ஸாக சிரிக்கும் பணியை அடிக்கடி கொடுக்கிறார் இயக்குநர் கண்ணன்

ரதன் மியூசிக்கில் பாடல்களோ ,பின்னணி இசையோ கொஞ்சமும் ஒட்டவில்லை. எடிட்டிங்  அபாரம். அதிலும் முதல் பாதி படம் போனதே தெரியவில்லை. அதை விட ஆர்ட் டைரக்‌டர்  இந்தக் கதைக்கு என்னெவெல்லாம் தேவையோ அனைத்தையும்  பக்காவாக கொடுத்து ரசிகரை திருப்திபடுத்துகிறார்.

மொத்தத்தில் ஆரம்பத்தில் சொன்னது போல் எட்டு மாதமாக முடங்கி, மூடப்பட்டிருந்த  சினிமா தியேட்டரில் அடுத்தடுத்து சிரிப்பலையை கிளப்பும் இந்த பிஸ்கோத் படத்தை குடும்பத்தோடு ஒரு முறை பார்த்து வந்தாலே உடலுக்கும், மனதுக்கு நல்லது

மொத்தத்தில் பிஸ்கோத் என்ற பெயரில் தீபாவளி சரவெடி!

மார்க் 3 / 5

நன்றி : ஆந்தை ரிப்போர்ட்டர்