‘ஞண்டுகளூடே நாட்டில் ஓரிடவேளா! – விமர்சனம்

1980-களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் சாந்தி கிருஷ்ணா. சிவப்பு மல்லி படத்தில் விஜயகாந்த் ஜோடியாக அறிமுகமானவர். அதன் பிறகு சில படங்களில் நடித்தாலும் பாரதி-வாசு ஜோடி இயக்கிய பன்னீர் புஷ்பங்கள் படத்தின் மூலம் புகழ்பெற்றார். அதில் அவர் சுரேஷ் ஜோடியாக நடித்தார். சின்ன முள் பெரிய முள், மணல் கயிறு, சிம்லா ஸ்பெஷல், அன்புள்ள மலரே, நேருக்கு நேர் உள்பட பல படங்களில் நடித்தார். 50க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களில் நடித்தார். கொஞ்சம் பிசியாகவே இருந்த சாந்தி கிருஷ்ணா சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். அவரை அழைத்து வந்திருக்கிறார் மலையாள நடிகர் நிவின் பாலி. அவர் தயாரித்து, நடிக்கும் ஞண்டுகளூடே நாட்டில் ஓரிடவேளா படத்தில் நடிக்க வைத்திருக்கிறார்.

பெரும் வெற்றி பெற்ற ஆக்ஷன் பிஜு படத்திற்கு பிறகு அவர் தயாரிக்கும் இரண்டாவது படம் இது தான். இப்படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக புதுமுக கதாநாயகி ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்துள்ளார். இப்படத்தில் நடிகை சாந்தி கிருஷ்ணா பள்ளி ஆசிரியராக பணியாற்றுகிறார். அவரது கணவரான சாக்கோ தொழிலதிபராக உள்ளார். அவர்களுக்கு நிவின் பாலி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகளுக்கு திருமணம் முடிந்துள்ளது. வெளிநாட்டில் நிவின் பாலி வேலை செய்து வருகிறார். ஒரு நாள் சாந்திகிருஷ்ணா தனது கணவரான சாக்கோவிடம் தனக்கு மார்பக புற்றுநோய் இருப்பதாக சந்தேகப்படுவதாக கூறுகிறார். உடனே பயந்து போன சாக்கோ தனது நண்பர் உதவியுடன் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து அதை உறுதி படுத்துகிறார்.

அதன் பிறகு ஹீமோ சிகிச்சை செய்ய தொடங்குமுன் குடும்பத்தாரிடம் எப்படி அதை சொல்கின்றனர், அவர்கள் எப்படி அதை எடுத்துக் கொண்டனர், இறுதியில் சாந்திகிருஷ்ணாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின் முடிவு என்ன என்பது தான் கதை. ஏற்கனவே பிரேமம் படத்தில் நண்பர்களோடு வாழ்ந்த நிவின் பாலியும், அல்தாப் சலீமும் இணைந்து இந்த படத்தை கொடுத்துள்ளனர். தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நிவின் பாலி கச்சிதமாக நடித்துள்ளார்.

நீண்ட இடைவேளைக்கு பின்னர் நடிக்க வந்துள்ள சாந்தி கிருஷ்ணாவும் கதைக்கு வலு சேர்த்துள்ளார். சாக்கோ உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர். நிவின் பாலிக்கு ஜோடியாக வரும் புதுமுக நடிகை ஐஸ்வர்யா லட்சுமியின் நடிப்பும் சூப்பர். தமிழில் கோடிக்கணக்கில் செலவு செய்து படங்கள் எடுக்கப்படும் வேளையில் குறைந்த செலவில் 15 கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு இரண்டரை மணி நேரத்தை சுவாரஸ்யமாக்க முடியும் என்பதை இயக்குனர் அல்தாப் சலீம் நிரூபித்துள்ளார்.

ஜஸ்டின் வர்கீசின் இசையில் இரண்டு பாடல்களும் பின்னணி இசையும் ரசிக்கும் படி உள்ளது. முகேஷ் முரளீதரன் ஒளிப்பதிவில் காட்சிகள் பளிச்சிடுகின்றன. நிவின் பாலிக்கு தமிழிலும் ரசிகர்கள் உள்ளதால் தமிழகத்தில் ஆங்கில சப்டைட்டிலோடு படம் வெளியிடப்பட்டு உள்ளது.