இதுவொரு கோலாகல பண்டிகை வாரம் – விவேகம் ரிலீஸ் குறித்து சிவா!

சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் நாளை (ஆகஸ்ட் 24) வெளியாகும் படம் ‘விவேகம்’. இப்படத்துக்கு திரையரங்குகள் டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டு, முதல் வாரத்துக்கான டிக்கெட்களில் சுமார் 80% வரை விற்றுத் தீர்ந்துவிட்டன. சென்னையில் முக்கியமான திரையரங்கமான மாயாஜால் திரையரங்கில் முதல் வாரத்தில் மட்டும் சுமார் 330 காட்சிகள் திரையிடப்பட உள்ளன. இதற்காக டிக்கெட் முன்பதிவில் 75% முடிந்துவிட்டதாகவும், விரைவில் அனைத்துக் காட்சிகளின் டிக்கெட் விற்பனையும் முடிந்துவிடும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சென்னையின் முக்கியமான மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் 2 முதல் 3 திரையரங்குகள் வரை ‘விவேகம்’ திரையிட்டுள்ளார்கள்.

தமிழகத்தில் முதலில் 700 வரை திரையரங்குகள் ஒப்பந்தமிருக்கும் என்று தயாரிப்பு நிறுவனம் எதிர்பார்த்தது. தற்போது 720 திரையரங்குகளைத் தாண்டி ஒப்பந்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அஜித் நடிப்பில் தயாரான படங்களில், பெரும் பொருட்செலவில் ‘விவேகம்’ தயாராகி இருப்பதால் திரையரங்குகள் ஒப்பந்தம் மற்றும் டிக்கெட் முன்பதிவால் தயாரிப்பு நிறுவனம் மகிழ்ச்சியில் இருக்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அஜித்தின் குடும்பத்தினர், தயாரிப்பாளர் குடும்பத்தினர் மற்றும் இயக்குநர் சிவா ஆகியோர் மட்டும் சென்னையில் உள்ள NFDC திரையரங்கில் ‘விவேகம்’ படத்தை பார்த்துள்ளனர். படம் முடிந்தவுடன் இயக்குநர் சிவாவை அஜித் மற்றும் தயாரிப்பு நிறுவனம் இருவருமே வெகுவாக பாராட்டியிருக்கிறார்கள்.

இந்நிலையில் விவேகம்’ படம் பற்றி மகிழ்ச்சி பொங்க பேசிய இயக்குநர் சிவா, “இதற்கு முன்பு நான் இயக்கிய கிராமப்புற பின்னணியில் ‘வீரம்’, நகர பின்னணியில் ‘வேதாளம்’ படங்களுக்கு பிறகு சர்வதேச பின்னணியில் படம் பண்ணலாம் என்ற யோசனையை அஜித் சார்தான் முதலில் என்னிடத்தில் சொன்னார். அவர் சொன்ன உடனேயே நான்கு மாதங்களில் இந்தக் கதையை தயார் செய்தோம். தமிழ் சினிமாவின் முதல் சர்வதேச உளவு திரில்லர் டைப் திரைப்படம் ‘விவேகம்’தான். ‘விவேகம்’ படத்தில் ஆக்சனுடன் சேர்ந்து சரியான கலவையில் எமோஷன்களும் உள்ளன. பல்கெரியா, சைபீரியா, குரோஷியா, ஸ்லோவேனியா மற்றும் ஆஸ்திரியா போன்ற நாடுகளில் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம்.

அஜித் சார் மாபெரும் மனிதர் என்பது மட்டுமில்லாமல் அசுர உழைப்பாளி. இந்தப் படத்துக்காக அஜித் சார் ஜிம்மூக்கு மாதக் கணக்கில் சென்று கடும் உழைப்புடன் தன் உடலை செதுக்கியுள்ளார். அவர் தன் வாழ்வில் கடைப்பிடிக்கும் வாழ்க்கை தத்துவமான ‘Never Say Die’-வை மையமாக வைத்தே, இப்படத்தில் ‘Never ever give up’ என்ற வசனத்தையும் எழுதியிருக்கிறோம்.

இந்தப் படத்தில் மூன்று பெரிய ஆக்சன் காட்சிகள் உள்ளன. இவை அனைத்தும் அஜித் சார் ரசிகர்களுக்கு மிகப் பெரிய படையலாக இருக்கும்.சண்டை காட்சிகளுக்கு ‘டூப்’ வைப்பதை அஜித் சார் எப்போதுமே தவிர்ப்பவர். இந்தப் படத்தில் அஜித் சார் செய்த ஒரு அசுர பைக் சண்டை காட்சியை பார்த்த ஹாலிவுட் சண்டை இயக்குநரான காலோயன் வொடெனிசரோவ் [Kaloyan Vodenicharov] ஸ்பாட்டிலேயே அசந்து போய் எழுந்து நின்று கை தட்டி பாராட்டினார். ஏனென்றால் படப்பிடிப்பு நடத்தப்பட்ட அந்த சாலை முழுவதுமே பனியிலும், மழை நீரிலும் ஊறி வழுக்கிக் கொண்டு, அபாயகரமாகவும் இருந்தது. இந்த நிலைமையிலும் அந்த சாலையில் அஜித் ஸார் செய்த சண்டைகள் படக் குழுவினரை மெய் சிலிர்க்க வைத்தது.

உண்மையான உழைப்பு தரும் பெயரையும், வெற்றியையும் வேறு ஏதுவாலும் தர முடியாது. எங்கள் முழு அணியும் இரவு பகல் பார்க்காமல் கடும் உழைப்பையும், அர்ப்பணிப்பையும் இந்தப் படத்திற்காக செய்துள்ளது. இதனால் இந்தப் படம் மிக அற்புதமாக வந்திருப்பதில் எங்களுக்கு  ஆச்சரியம் இல்லை. அஜித்தின் ரசிகர்களை போலவே நாங்களும் படம் வெளியாகும் ஆகஸ்ட் 24-ம் தேதியை ஆர்வத்தோடு எதிர்நோக்கியுள்ளோம். இதுவொரு கோலாகல பண்டிகை வாரமாக இருக்கும் என நம்புகிறோம்…” என்றார்