‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் ரஜினி அறிமுகமானபோதே, அவருக்கு, ‘கவர்ச்சி வில்லன் ரஜினி ரசிகர் மன்றம்’ தொடங்கிய மதுரை முத்துமணி காலமானார்.
ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் பாண்ட் சீன் கேனரி முதல் நடிகர் முரளி, ஸ்ரீகாந்த் போன்ற தமிழ் நடிகர்கள் வரையில் பெரும்பாலான நட்சத்திரங்களுக்குத் தமிழகத்தின் முதல் ரசிகர் மன்றத்தைத் தொடங்கிய ஊர் மதுரை. ரஜினிகாந்த்துக்கும் கூட முதல் ரசிகர் மன்றம் மதுரையில்தான் தொடங்கப்பட்டது. இன்று அது மிகப்பெரிய ஆலமரமாகி விட்டாலும், முதல் மன்றத்தைத் தொடங்கிய முத்துமணி மீது ரஜினிக்கு எப்போதுமே தனிப் ப்ரியம் உண்டு.
மன்றத்தைத் தொடங்கிய முத்துமணியிடம் முன்பொரு முறை பேசிய போது. “மதுரை அலங்கார் தியேட்டர்ல 1975ல ‘அபூர்வராகங்கள்’ படம் ரிலீஸ் ஆச்சு. அதில் ரஜினி மொத்தமே 20 நிமிசங்கதான் வருவார். அதுவும் ப்ளட் கேன்சர் பேஷண்டா, சாவோடு போராடும் ரோல்ம். ஆனால் அவர் கேட்டைத் திறந்துகிட்டு அறிமுகமாகும் அந்த ஸ்டைலும், அவரது பார்வையும் அப்பவே என்னை என்னவோ பண்ணிச்சு. அதுலேயே ஓரிரு நிமிசம் மட்டுமே வருகிற அவரது இளமைக்கால காட்சியில் ஸ்டைல் காட்டுவார். அதற்காகவே அந்தப் படத்தைத் திரும்பத் திரும்பப் பார்த்தோம்.
அவரது இரண்டாவது தமிழ்ப்படமான மூன்று முடிச்சி 22.10.1976ல் தான் வெளி வந்தது. ஆனால், பிப்ரவரியிலேயே (10.2.1976) ‘கவர்ச்சி வில்லன் ரஜினிகாந்த் ரசிகர்’ மன்றத்தைத் தொடங்கிவிட்டோம். நாங்கள் மன்றம் ஆரம்பித்த விஷயத்தை அவருக்கு கடிதம் எழுதிட்டுத்தான் தொடங்கினோம். சில மாசங்கள் கழிச்சு அவரை நேரில் சந்திச்சபோ, ரொம்ப சங்கடப்பட்டார். “எம்ஜிஆர், சிவாஜி மாதிரியான பெரிய ஆட்கள் எல்லாம் இருக்காங்க. நான் சின்ன நடிகன். முதல்ல ஸ்டேன்ட் பண்ணணும். மன்றம் எல்லாம் வேண்டாம்” -ன்னுதான் சொன்னார். ஆனா அதை கண்டுக்காம எங்கள் ஆக்டிவிட்டியை தொடர்ந்தோம் .அடுத்து அவர் பைரவி படித்தில் ஹீரோ வானதும், ஸ்டைல் ஹீரோ ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தைத் தொடங்கினோம்
20 வயதிலேயே தாய், தந்தையை இழந்த முத்துமணிக்கு தன் வீட்டில் தன்னுடைய செலவிலேயே திருமணம் செய்துவைத்தார் ரஜினி. அவரே தாலியெடுத்துக் கொடுத்து ஆசியும் வழங்கினார். இதனால் ஒவ்வொரு ஆண்டும் தனது திருமண நாளன்று ரஜினியை சந்திப்பதை முத்துமணி தம்பதியர் வழக்கமாக வைத்திருந்தார்கள்.
கடந்த 2020 செப்டம்பர் மாதம் முத்துமணி திடீர் உடல்நலக்குறைவால் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர நுரையீரல் தொற்று காரணமாக சிகிச்சை பெற்ற அவருக்கு ரஜினிகாந்த் போன் செய்து தைரியம் அளித்ததுடன், அவரது மனைவி, மகளுடனும் போனில் உரையாடினார். தனது பிஆர்ஓ மூலம் சில உதவிகளையும் செய்தார்.
ரஜினி கட்சி தொடங்குவதாக அறிவித்தபோதுகூட, கட்சியில் எந்தப் பொறுப்பும் கேட்காமல் இருந்தவர் முத்துமணி. 62 வயதிலும் ரஜினி ரஜினி என்று சின்னப் பையன் போல பேசிக்கொண்டிருந்தாலும், உடல் நலக்குறைவு காரணமாக அதிகம் வெளியே தலைகாட்டாமல் வீட்டிலேயே இருந்தவர், நேற்றிரவு மரணமடைந்தார். அவருக்கு மதுரை மாவட்ட ரஜினி மன்ற நிர்வாகிகள் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இருந்து ரஜினி ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துவருகிறார்கள்.