ஜனாதிபதி மடியில் அமர்ந்து ‘டா’ போட்டு பேசிய சந்திரபாபு!

தூத்துக்குடியில் சுதந்திரப் போராட்ட வீரரான ஜோசப் ராட்சிக் என்பவரின் மகன் தான் சந்திரபாபு. அவர் (இதே ஆகஸ்ட் 5ம் தேதி) பிறந்து சில நாட்களிலேயே விஷக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். குழந்தை தப்புமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. தாயும் தகப்பனும், “ஏசுவே இந்தக் குழந்தை நீர் எமக்குக் கொடுத்த பிச்சை, குழந்தையை உயிர் பிழைக்கச் செய்தருளும், குழந்தைக்குப் பிச்சை எனப் பெயரிடுகிறோம்’ என்று முழந்தாளிட்டு இயேசுவிடம் மன்றாடினர். அந்த மன்றாட்டத்தினால் தப்பிப் பிழைத்த குழந்தைக்கு ஜோசப்பிச்சை எனப் பெயரிட்டனர். சந்திர பாபுவுக்கு முன்னால் ஜோசப் பிச்சையின் முதல் எழுத்துக்கள் ஒட்டிக் கொண்டதால் ஜே.பி. சந்திரபாபு ஆனார்.

திரைப்படத்தில் நடிக்கவேண்டும் என்ற ஆர்வத்தில் சினிமா கம்பனிகளில் ஏறி இறங்கிய இளைஞர்களில் ஜே.பி. சந்திரபாபுவும் ஒருவர். ஓர் இடத்தில் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்றால் அடுத்த ஸ்ரூடியோவை நோக்கிச் சென்று தமது சந்தர்ப்பத்தைத் தேடிக் கொள்ளாமல். விதி விலக்காக தற்கொலைக்கு முயன்றார் ஜே.பி. சந்திரபாபு. 1947 ஆம் ஆண்டு மணிக்கொடி எழுத்தாளர் பி.எஸ். ராமையா இயக்கிய தன அமராவதியில் அறிமுகமானார் ஜே.பி. சந்திரபாபு. அந்தப்படத்தில் மாணிக்கம் செட்டியாராக புளி மூட்டை ராம சாமி ரத்தினம் செட்டியாராக ஜே.பி. சந்திரபாபுவும் நடித்தார்கள். ஜே.பி. சந்திரபாபு அறிமுகமான படம் என்பதைத் தவிர வேறு விஷேசம் அந்தப் படத்துக்கில்லை. ஜெமினி ஸ்டூடியோ தயாரிக்கும் படத்தில் தனக்கு ஒரு சந்தர்ப்பம் தரும்படி அதிபர் எஸ். எஸ். வாசனிடம் ஜே.பி. சந்திரபாபு வேண்டுகோள் விடுத்தார். சந்திர பாபுவின் வேண்டுகோளை எஸ்.எஸ். வாசன் நிராகரித்ததால் மனம் வெதும்பி யெமினி ஸ்டூடியோ வாசலில் நஞ்சருந்தினார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஜே.பி. சந்திரபாபுவை ஜெமினி ஸ்டூடியோ வின் உதவியாளராக வேலை செய்த ஜெமினி கணேசன் வைத்தியசாலையில் சேர்த்தார். அவரின் கையில் இருந்த கடிதத்தை ஜெமினி ஸ்டூடியோ அதிபர் எஸ்.எஸ். வாசனிடம் சேர்த்தார்.

”திரு..வாசன் அவர்களுக்கு நான் ஒரு சான்ஸ் கேட்டேன். நீங்கள் முடியாதுன்னு சொல்லி விட்டீர்கள். என்னை மாதிரி நல்லா நடிக்கத் தெரிந்தவனுக்கு நீங்க சான்ஸ் கொடுக்காதது ரொம்ப தப்பு. இத்தனை பெரிய ஸ்டூடியோவிலே எனக்கு சான்ஸ் கிடைக்கல நான் ஒழிந்து போறேன், செத்துப்போறேன்” என எழுதி இருந்தது. சந்திரபாபுவின் கடிதத்தைக் கண்டு கலங்கிய ஏ.வி. மெய்ப்பச் செட்டியார் “ராஜி என் கண்மணி’ என்ற படத்தில் நடிப்பதற்கு சந்தர்ப்பம் கொடுத்தார்.

1965ஆம் ஆண்டு இந்திய பாகிஸ்தான் யுத்தத்தின் போது இந்திய இராணுவ வீரர்களுக்கு உற்சாகமூட்டுவதற்காக தமிழ்த் திரைப்படக் கலைஞர்கள் எல்லைப் பகுதிக்குச் சென்று இசை நிகழ்ச்சி நடத்தினார்கள். சிவாஜி, பத்மினி, சாவித்திரி, ஜெயலலிதா, கண்ணதாசன், எம்.எஸ். விஸ்வநாதன் ஆகியோருடன் சந்திரபாபுவும் சென்றிருந்தார். அவர்கள் சென்னை திரும்பும் வழியில் இந்திய ஜனாதிபதி மாளிகைக்குச் சென்று ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணனைச் சந்தித்தனர்.

அப்போது “”பிறக்கும்போதும் அழுகின்றான் இறக்கும் போதும் அழுகின்றான்” என்ற பாடலை சந்திர பாபு பாடினார். அப்பாடலில் மெய் மறந்த ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் “”அடடா என்ன அர்த்தம் என்ன அர்த்தம்” என்று பாராட்டினார். அவரின் பாராட்டுதலினால் உற்சாகமடைந்த சந்திரபாபு ஜனாதிபதியின் மடியில் உட்கார்ந்து தோளில் கைபோட்டு தாடையைப் பிடித்து “”நீ ரசிகன்டா கண்ணு” என்று பாராட்டினார்.

கவிஞர் கண்ணதாசன் “கவலை இல்லாத மனிதன்’ என்ற படத்தைத் தயாரித்தபோது அதில் நாயகனாக நடித்த சந்திரபாபு கொடுத்த தொல்லைகள் அதிகம். அதனை மனதில் வைத்துத்தான் “”புத்தி உள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை. வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை” என்ற பாடலை கவிஞர் எழுதினார் என்ற ஊகம் திரை உலகில் உள்ளது. கண்ணதாசனின் அந்த பாடலுக்கு “”என்னைத் தெரியலையா இன்னும் புரியலையா” என்ற பாடலை மருதகாசி மூலம் சந்திரபாபு பதிலளித்தார் என்றும் சிலர் கருதுகிறார்கள்.

சில வருடங்களின் பின்னர் “”சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்கச் சிரிப்பு வருது சின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயலைப் பார்க்க சிரிப்பு வருது” என்ற கண்ணதாசனின் பாடலை ஜே.பி. சந்திரபாபு பாடினார். சிவாஜி சந்திரபாபு ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த படம் “சபாஷ் மீனா’. இப்படத்தில் சந்திரபாபு இரட்டை வேடத்தில் நடித்தார். ரிக்ஷாக்காரனாக சந்திரபாபு மெட்ராஸ் பாஷையில் பேசி ரசிர்களைக் கவர்ந்தார்.

“சபாஷ் மீனா’ படத்துக்காக சந்திரபாபு பாடிய பாடல்தான் “”குங்குமப்பூவே கொஞ்சும் புறாவே” பி.ஆர். பந்துலுவுடன் சந்திரபாபுவுக்கு ஏற்பட்ட பிரச்சிசனை காரணமாக அவருக்குத் தெரியாமலே அப்பாடலை “மரகதம்’ படத்தில் பாடிவிட்டார் சந்திரபாபு. திறமையான கலைஞர் சந்திரபாபு அவரது பிடிவாதமும் தலக்கணமும் வாழ்வில் ஏற்பட்ட விரக்தியாலும் மதுவிடம் சரணடைய வைத்தது.