இன்னியில் இருந்து 70 வருஷங்களுக்கு முன்னாட்டி அதாவது 50 களில் சினிமா ரசிகர்களின் கனவுக் கன்னி அஞ்சலிதேவி- என்ற பேர் கொண்ட ஹீரோயின் இதே நாளில்தான் காலமானார் . அதையொட்டி சினிமா பிரஸ் கிளப் டாட் காம்-மிற்காக கட்டிங் கண்ணையா செகரித்த செய்திகள் இக்குழு உறுப்பினர்களின் பார்வைக்கும்.. அஞ்சலிக்கும்..
அஞ்சலி தேவி அந்தக் காலத்து சூப்பர் ஸ்டார்கள் எம்.கே.டி.தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா ஆகியோருடன் நடித்தார். பின்னர் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினிகணேசன் போன்றவர்களுடன் ஜோடியாக நடித்தார். தமிழில் ஜெமினி கணேசனுடன் அதிக படங்களில் நடித்துள்ளார். எம்.ஜி.ஆரு டன் இவர் இணைந்து நடித்த ‘சர்வாதி காரி’, ‘சக்கரவர்த்தி திருமகள்’, ‘மன்னாதி மன்னன்’ போன்ற படங்கள் பெரும் வெற்றியை கண்டன. ‘அன்னை ஓர் ஆலயம்’ படத்தில் ரஜினிக்கு அம்மாவாக நடித்திருந்தார்.
இப்படியாப்பட்ட அஞ்சலி தேவி நடிகைகளின் பிறப்பிடமான ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி பகுதியில் உள்ள பெத்தாபுரம் -ங்கற வில்லேஜில் பிறந்தவர். ஆரம்ப காலங்களில் நாடகங்களில் நடித்த அஞ்சலி தேவியின் நிஜப்பெயர் அஞ்சனி குமார்.
அப்பாலே சினிமாத்தொழிலில் ஈடுபட சென்னைக்கு 40களில் குடிபெயர்ந்தார்.
1936 ல் வெளியான ராஜா ஹரிச்சந்திரா என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அவரை எல்.வி பிரசாத் தனது ‘கஷ்ட ஜீவி’ என்ற படத்தில் முதன்முறையாக கதாநாயகியாக அறிமுகம் செய்தார். ஆனால் அந்த படம் சில பிரச்னைகளால் முழுமை பெறவில்லை.
அதே சமயம் நாடகங்களில் அவரது நடிப்பை பார்த்து வியந்த பிரபல இயக்குனர் புல்லையா, தன் இயக்கத்தில் வெளியான ‘கொல்ல பாமா’ படத்தில் கதாநாயகியாக வாய்ப்பு தந்தார். அவரே அஞ்சலி தேவிக்கு அந்தப்பெயரை சூட்டினார். அந்த படத்தின் புகழால் தொடர்ந்து பல படங்களில் நடித்த அஞ்சலிதேவி 50களில் திரையுலகின் தவிர்க்க முடியாத நாயகியானார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அஞ்சலி தேவி, தெலுங்கில் மட்டுமே 350 படங்கள் நடித்திருக்கிறார். குறும்பு, உணர்ச்சிவயமான நடிப்பு, நடனம், வீரமங்கை…-இதுதான் ரசிகர்களை கட்டிப்போட காரணமான அஞ்சலிதேவியின் பன்முக சிறப்பு அம்சங்கள்.
1940 ஆம் ஆண்டு தெலுங்கு திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் பி. ஆதிநாராயணராவை காதலித்து திருமணம் செய்துகொண்ட அஞ்சலிதேவிக்கு, 2 மகன்கள். தன் கணவருடன் இணைந்து அஞ்சலி தேவி பிக்சர்ஸ் என்ற பெயரில் பல வெற்றிகரமான தெலுங்கு படங்களை தயாரித்தார். ‘பராசக்தி’ படத்துக்கு முன்பே முதன்முதலில் சிவாஜி கணேசன் அறிமுக நாயகனாக நடித்த படம் ‘பூங்கோதை’. ஆனால், பராசக்தி முதலில் வெளிவந்துவிட்டது. அதன் பிறகுதான் பூங்கோதை ரிலீஸ் ஆனது. இந்தப் படத்தை அஞ்சலி பிக்ஸர்ஸ் சார்பில் அஞ்சலி தேவிதான் தயாரித்தார். ‘கணவனே கண்கண்ட தெய்வம்’, ‘அடுத்த வீட்டுப்பெண்’ போன்ற படங்களையும் தயாரித்து நடித்தார். இந்தப் படங்களுக்கு அவரது கணவர் ஆதிநாராயண ராவ் இசையமைத்திருந்தார்.
தெலுங்கு திரையுலகின் முதல் கலர் படமான ‘லவகுசா’வில் நடித்த பெருமைக்குரியவர் அஞ்சலிதேவி.
குறிப்பா சொல்லணுமுன்னா 50 களில் நளிமான நடனம், நடிப்பு, நாகரிகமான உடையலங்காரம் என பன்முக திறைமையுடன் கலக்கிய அஞ்சலி தேவி, ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தார். அடுத்த வீட்டுப்பெண், கனணே கண்கண்ட தெய்வம் உள்ளிட்ட இவரது தமிழ்ப்படங்களில் இவரது நடிப்பு அந்த கால இளைஞர்களை அதிகம் கவர்ந்தது.
அவர் தன் வாழ்நாளில் சிறந்த படங்களாக குறிப்பிட்டவை ‘ஸவர்ண சுந்தரி’ மற்றும் ‘அனார்கலி’ போன்றவை. இதில் ‘அனார்கலி’ அவரது சொந்தப்படம். அதில் ஏ. நாகேஸ்வரராவுடன் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த 2 திரைப்படங்களும் அஞ்சலிதேவிக்கு ரசிகர்களிடம் நிலையான இடத்தை கொடுத்த படங்கள்.
இது எல்லாவற்றையும் விட முக்கியமா சொல்ல வேண்டிய ஒரு விஷயம் -அஞ்சலி தேவி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். இந்தப் பதவியை வகித்த ஒரே நடிகை என்ற பெருமை அஞ்சலி தேவியையே சாரும். அதிலும் நடிகர் சங்கத் தலைவராக இருந்தபோது சங்கத்துக்கு தனி ‘லோகோ’வை இவர்தான் வடிவமைத்தார். அதை, முந்தைய தலைவராக இருந்த எம்.ஜி.ஆருடன் ஆலோசித்து சங்க லோகோவாக அறிவிச்சாராக்கும்.
இப்படி பேர் போனவர் கடைசி காலத்தில் சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் வசித்து வந்த நிலையில் சுவாசக் கோளாறு பிரச்சினையால் அவதிப்பட்டு இதே ஜனவரி 13ம் தேதி (2014) காலமானார். அப்ப(வும்) பொங்கல் பண்டிகை நேரம் என்பதால் அவரது உடல் 3 நாட்களுக்கு மருத்துவ மனையிலேயே வைக்கப்பட்டு, பிறகு வீட்டுக்கு எடுத்து வரப்பட்டு முறைப்படி சடங்கு செஞ்சாங்க என்பதுதான் ஹைலைட்.
அஞ்சலி தேவி நினைவஞ்சலி குறிப்பு