கோலிவுட் என்னும் கனவுத் தொழிற்சாலைக்கு அடிக்கல் போட்ட நாகிரெட்டி!

படிக்கும் வழக்கமே குறைந்து போய் விட்ட இந்த நவீனமயமாகிவிட்ட சூழலில் மறந்து விட்ட சாதனையாளர் நாகிரெட்டி காலமான நாளின்று:

சினிமாவுக்கு முன்னால் பத்திரிகை அதிபராக அதுவும் நம் சென்னையில் அச்சடித்து இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 21 மொழிகளில் (அடிசினலாக கண் பார்வையற்றோருக்காக தனி இதழ்) கொண்டு வந்த பெருமையை இது வரை யாரும் முறியடிக்கவில்லை. மேலும் சினிமா-வுக்கென தனி இதழ்கள் பொம்மை, இதழை உருவாக்கி சக்கைப்போட வைத்தவரிவர். இன்னொரு விஷயம் தெரியுமா? மறைந்த முதல்வர் எம்ஜிஆர் ஆட்டோகிராஃப் போடும் போது ‘உழைப்பவரே உயர்ந்தவர்’ என்று எழுதிக் கையெழுத்திடுவார். இப்படி எழுத அவருக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர் பி. நாகி ரெட்டியார்தான்.

அதிலும் நம் தமிழ்த் திரையை இந்திய அளவில் கொண்டு போய் சேர்ந்த ஜாம்பவான்களில் நாகி ரெட்டியார் பங்களிப்பும் பங்கேற்பும் ரொம்பவே அதிகம். இத்தனைக்கும் வெளிநாடுகளுக்கு வெங்காயம் முதலான விவசாய விளைபொருட்களை ஏற்றுமதி செய்து வந்தவர்தான் நாகிரெட்டி. ஒரு முறை, இவரின் வெங்காயம் ஏற்றிச்சென்ற கப்பல் கடலில் மூழ்கியதால் நட்டம் ஏற்பட்டது. இதில் அப்செட்டான நாகிரெட்டி வேறு தொழில் பார்க்கலாம் என்றெண்ணி ‘பி.என்.கே’ என்ற அச்சகத்தை தொடங்கி. ‘ஆந்திரஜோதி’ என்ற தெலுங்கு மாத இதழைத் தொடங்கினார். அது பரவலாக விற்பனையானதும் குழந்தைகளுக்காக தெலுங்கில் ‘சந்தமாமா’ என்ற சிறுவர் இதழைத் தொடங்கினார். இதுதான் பின்னர் ‘அம்புலிமாமா’ என்ற பெயரில் தமிழில் வெளியிடப்பட்டது. அது வெற்றியடையவே, பல்வேறு மொழிகளிலும் வெளியாயிற்று. அப்போது ஆந்திராவைச் சேர்ந்த சக்ரபாணி என்ற எழுத்தாளர். அம்புலிமாமா இதழில் கதை எழுதி வந்தார். அப்போது நாகி ரெட்டியுடன் அறிமுகம் ஏற்பட்டது. இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். தங்கள் படைப்புகளையும், நாட்டு நடப்புகளையும் பற்றி அரட்டை அடித்து கொண்டிருந்த போது சினிமாத்துறையில் ஈடுபட விரும்பி, வடபழனி அருகே நிலம் வாங்கி, வாகினி ஸ்டூடியோவைத் தொடங்கினார்கள்.

இதன் மூலம் தமிழ், இந்தி உள்பட பல மொழிகளில் 50-க்கும் மேற்பட்ட சினிமா படங்களை தயாரித்தார். வாகினி ஸ்டூடியோவின் பெயர், விஜயா -வாகினி ஸ்டூடியோ என்று பிறகு மாறியது.தென்கிழக்கு ஆசியாவிலேயே பெரிய ஸ்டூடியோவாக இது திகழ்ந்தது. இந்த ஸ்டூடியோ விலும், நாகிரெட்டி தயாரித்த படங்களிலும் சக்ரபாணி பங்குதாரராக இருந்தார். சிறந்த நட்புக்கு எடுத்துக் காட்டாக இவர்கள் விளங்கினார்கள். அக்காலத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிப்படங்களும் சென்னையில்தான் தயாரிக்கப்பட்டன. ஸ்டூடியோக் கள் சென்னையில்தான் இருந்தன. ஆந்திராவில் ஒரு ஸ்டூடியோ கூட கிடையாது. ஆந்திராவில் முதல்-மந்திரிகளாக இருந்த சஞ்சீவரெட்டி, பிரமானந்தரெட்டி ஆகியோர், ‘உங்கள் ஸ்டூடியோவை ஆந்திராவுக்கு கொண்டுவந்து விடுங்கள். எல்லா வசதிகளும் செய்து தருகிறோம்’ என்று அழைத்தார்கள். ஆனால், நாகிரெட்டி மறுத்துவிட்டார். ‘தமிழ் மண்தான் என்னை வாழவைத்தது. கடைசி மூச்சு உள்ளவரை தமிழ்நாட்டில்தான் வாழ்வேன்’ என்று கூறிவிட்டார். அவரால் பல நூறு தமிழ் குடும்பங்கள் பிழைத்தன. நூறுக்கும் அதிகமான நட்சத்திரங்கள் புகழேணியின் உச்சியை அடைந்தனர்.

திரைப்படத் தயாரிப்பு முறையில் மாற்றங்கள் ஏற்பட்டு, பட அதிபர்கள் வெளிப்புறக் காட்சிகளை அதிகம் படமாக்கத்தொடங்கவே, ஸ்டூடியோக்களில் வேலை குறைந்தது. இதனால் ஸ்டூடியோக்களை நடத்த முடியாமல், ஒவ்வொரு ஸ்டூடியோவாக மூடப்பட்டு வந்தன. நாகிரெட்டி, தன் ஸ்டூடியோவை மக்களுக்கு பயனுள்ள முறையில் மாற்ற விரும்பினார். அதையொட்டி ஸ்டூடியோ இருந்த இடங்களில் விஜயா ஆஸ்பத்திரி, விஜய சேச மகால் திருமண மண்டபம் ஆகியவற்றைக் கட்டினார். தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபைத் தலைவர், இந்திய திரைப்படக் கழகத் தலைவர் போன்ற பதவிகளை பல முறை வகித்தவர்.

அப்பேர்பட்ட நாகிரெட்டியார் மறைந்த நாளின்று