மாநாடு படத்தின் மீது வெறுப்பை உமிழாதீங் கப்பூ!- சுரேஷ் காமாட்சி வேண்டுகோள்!

கோலிவுட்டில் பல தயாரிப்பளர்களை அழ வைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நாயகன் சிம்பு நடிப்பில் சுரேஷ் காமாட்சி  தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் தொடங்கப்பட்டுள்ள படம் ‘மாநாடு’. முன்னர் இதே சிம்பு பண்ணிய வம்பால் ட்ராப் என்று செய்தியை தயாரிப்பாளரே ஓப்பனாகச் சொல்லி அதனால் பாதிக்கப்பட்ட சிம்புவின் நய்னா டி.ஆர். தலையிட்டு சத்தியம் எல்லாம் பண்ண வைத்து சென்னையில் அமர்களமாக (எல்லா பத்திரிகை யாளர்களுக்கு அழைப்பில்லாமல்) பூஜை போட்டு முதற்கட்டப் படப்பிடிப்பை முடித்து, ஹைதராபாத்துக்குச் செல்ல ஆயத்தமாகியுள்ளது படக்குழு. இந்தப் படத்தில் சிம்பு மட்டும் இல்லாமல் பாரதிராஜா, எஸ்.ஏ.சி, கல்யாணி ப்ரியதர்ஷன், கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் சிம்புவுடன் நடிக்கவுள்ளனர். இதனிடையே, இந்த ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்புக்கு சிம்பு தாமதமாக வருகிறார் என்றும், ஹைதராபாத் படப்பிடிப்புக்கு வர முடியாது என்று அவர் சொல்லி விட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.இந்தச் செய்திக்கு மறுப்பு தெரிவித்து அப்செட்டான தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் சுரேஷ் காமாட்சி கூறியிருப்பது இதுதான்

அனைத்து பத்திரிகை நண்பர்களிடமும் ரொம்ப நெருக்கமாக எனது குடும்பம் போலவுமே பழகி வருகிறேன். யாருடைய அழைப்பையும் தவிர்த்ததில்லை. மற்றவர்கள் தன் படம் பற்றி ஒளித்து வைக்கும் செய்திகளைக் கூட நான் ஒளித்து வைப்பதில்லை. அழைத்துக் கேட்டால் ஆமா, இல்லை… என்பதை உள்ளபடியே சொல்லி விடுவேன். அதனால் என் மாநாடு படத்திற்கு சாதகமான விசயங்களே நடந்திருக்கின்றன. எனது பி ஆர் ஓ வும் அப்படியே. செய்தியாளர்களின் முக்கியத்துவத்தை தவிர்த்ததே இல்லை.

பெரிய படங்கள் செய்வது சாதாரணமல்ல. ஒருங்கிணைப்பு வேலைகள் அதிகம் இருக்கும். இதில் ஒரு சில சக நண்பர்களின் பொறாமைப் பார்வையும் இருக்கும். அப்படியான யாரோ ஒரு இன்ஃப்ளூ யண்ஸ்ட் பெர்ஸன் நம் மாநாடு படத்தின் மீது வெறுப்பை உமிழ பத்திரிகைகளில் அவருக்கு இருக்கும் பலத்தைப் பயன்படுத்தி அவதூறு பரப்பி வருகிறார்.

ஒரு பத்திரிகையில் சிம்பு படப்பிடிப்பிற்கு 16வது நாளிலிருந்து தாமதமாக வருகிறார் என்ற செய்தியை வெளியிடுகிறது. என்ன ஒரு அபத்தம். அந்த செய்தி வெளியான அன்று படப்பிடிப்பே ஆறு நாட்கள்தான் நடந்து முடிந்திருந்தது. ஒருநாள் கூட சிம்பு தாமதமாக வரவில்லை. ஷுட்டிங் வராமல் தவிர்க்கவும் இல்லை. காட்சி படமாக்கி முடியும் வரை கேரவேனுக்கும் செல்வதில்லை. அங்கேயே குடையைப் பிடித்து நின்றுகொண்டு நடித்துக் கொடுக்கிறார். அப்படியிருக்கும்போது ரெண்டு கேரவேன் கேட்கிறார் எனவும் செய்தி வெளியிடுகிறார்கள்.

இன்னொரு பத்திரிகை சிம்பு ஹைதராபாத்துக்கு வர மறுத்துவிட்டார்னு ஒரு செய்தி போடு கிறார்கள். அப்போ நாளை மறுநாளிலிருந்து ஹைதராபாத்தில்தான் ஷூட்டிங் நடக்கப் போகிறது.. அப்போ சிம்பு இல்லாமலா ஷூட்டிங் எடுக்கப் போகிறோம்? இதெல்லாம் சின்ன செய்திதானே? கடந்து போங்கள் என சொல்லலாம். நாங்கள் சொந்தக் காசை வைத்து படம் பண்ணலை. வட்டிக்கு வாங்கி பண்றோம். ஒவ்வொரு தவறான செய்தியும் பணம் தருபவர்களைப் பதற்றத்திற்குள் ஆக்கும்.Video Player00:0000:001. “cH-hhdKltFma_ZK4”1:11

வேக வேகமான இயக்குநர்… & டீம், காட்சிகளைப் புரிந்து நேரமெடுக்காமல் நேர்த்தியாக நடிக்கும் நடிகர்கள் என அருமையாக வடிவமைக்கப்பட்ட ஒரு குழு திறம்பட இயங்கிக் கொண்டிருக்கிறார் கள். உங்களின் மனதில் இன்னும் சேமிக்கப்பட்டிருக்கும் தவறான கடந்த கால அபிப்ராயங்களாக சிம்பு பற்றியவை இன்னும் இருந்தால் கண்ட்ரோல் ஆல் டெலிட் பட்டனை அமுக்குங்கள். அவரை தன்னியல்பான நடிகராக இயங்க விடுங்கள். தன் ரசிகர்களுக்காக உடல் எடையைக் குறைத்து தன்னை மாற்றிக் கொண்டு சினிமாவை நேசித்துச் செய்யும் மனிதனாக எங்களது படப்பிடிப்பு தளத்திற்கு வந்து செல்பவரைப் பற்றி இனியும் தவறான செய்திகள் வேண்டாம் நண்பர்களே.

யாரையோ திருப்திபடுத்த முறையற்ற செய்திகள் வெளியிட வேண்டாம் என அன்போடு என் நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன். எதுவாக இருந்தாலும் எனக்கு அழையுங்கள். சரியானத் தகவல் தருகிறேன். அல்லது என் பத்திரிகை தொடர்பாளரிடம் கேளுங்கள்.

உங்களால் உயர்த்திவிடப்பட்ட ஒரு தயாரிப்பாளராகவே வலம் வர ஆசைப்படுகிறேன். கைகொடுத்து நில்லுங்கள்.

நன்றியோடு எப்போதும் இருப்பேன்.

-சுரேஷ் காமாட்சி
இயக்குநர், தயாரிப்பாளர்