சர்ப்ரைஸ் தரும் அதோ முகம் !!

 

புது முகங்களின் உருவாக்கத்தில் வந்திருக்கும் திரில்லர் திரைப்படம்

ரீல் பெட்டி தயாரிப்பில் தயாரித்து சித்தார்த் கதாநாயகனாக நடிக்க, சைதன்யா பிரதாப், அனந்த நாக், கவுரவத் தோற்றம் அருண் பாண்டியன் நடிப்பில் சுனில் தேவ் எழுதி இயக்கி இருக்கும் படம்.

தமிழில் தெளிவான திரைக்கதை உடன் திரில்லர் திரைப்படங்கள் வருவதில்லை என்ற ஏக்கத்தை போக்குவதற்காகவே வந்திருக்கும் படம் அதோ முகம்.

மிக சிம்பிளான ஒரு கதையை எடுத்துக்கொண்டு, அதற்கு மிக அட்டகாசமான ஒரு திரைக்கதை வடிவத்தை தந்து, இறுதிவரை நம்மை பரபரப்புக்கு உள்ளாக்கி, சுவாரசியமாக சீட்டு நுனியில் உட்கார வைத்து, ஒரு அழகான படைப்பை தந்திருக்கிறார்கள் இந்த புதுமுகங்கள்.

கதை மிகச் சின்ன கதை
காதலால் ஒன்று சேர்ந்து வாழும் ஒரு தம்பதி. தன் மனைவியை சர்ப்ரைஸ் செய்வதற்காக போராடுகிறான் கணவன். அவளுக்கு சர்ப்ரைஸ் தர வேண்டி, அவளது ஃபோனில் அவளுக்கே தெரியாமல் கேமரா ஆப் இன்ஸ்டால் செய்து அவளை கண்காணிக்க ஆரம்பிக்கிறான். ஆனால் அவன் வீட்டுக்கு அவனுக்கே தெரியாத வேறொருவன் வருவது, அந்த கேமரா மூலம் கணவனுக்கு தெரிய வருகிறது. தன் மனைவியா இப்படி என அதிர்ச்சிக் கொள்ளாகிறான். மனைவியின் ரகசியங்களை தெரிந்து கொள்ள அவன் விசாரணையில் இறங்குகிறான். ஆனால் அந்த விசாரணை அவனை மிகப் பெரிய சிக்கலில் கொண்டு போய் விடுகிறது.

படத்தின் மிகப்பெரிய பலம் திரைக்கதை தான். மிக சின்ன கதையாக தான் இந்த படம் ஆரம்பிக்கிறது. மனைவி மீது சந்தேகப்படும் கணவன், உண்மையிலேயே மனைவி தப்பானவள் தானா ? இவ்வளவுதான் படம், என்று நினைத்துப் பார்க்க ஆரம்பித்தால், அதை உடைத்து, ஒவ்வொரு நொடியும் பரபரப்பு தரும் வகையில் திரைக்கதையை எழுதி இருப்பது சிறப்பு. இடைவேளை வரை சின்னதாக நகரும் படம், இடைவேளைக்கு அப்புறம் ஜெட் வேகத்தில் பறக்கிறது

இடைவேளைக்குப் பின்னால் வரும் அத்தனை டிவிஸ்ட்களுக்கும் இறுதிக்கட்டத்தில் விளக்கங்கள் சொல்லி, அதை நாம் நம்பும்படி ஆக்கி இருப்பது படத்திற்கு சிறப்பு

படத்தின் லொகேஷன் படத்திற்கு ஒரு மிகப்பெரிய பலம். ஊட்டியில் நடைபெறும் கதை அந்த இடத்திற்கே நம்மை அழைத்துச் செல்கிறது. மேலும் படத்தில் கம்மியான கதாபாத்திரங்கள் என்பதை படத்தின் லொகேஷன் நம்மை மறக்கடிக்க செய்து விடுகிறது

தயாரித்து நடித்திருக்கும் சித்தார்த்திற்கு இந்த படம் மிகச்சிறந்த அறிமுகமாக ஆகியிருக்கிறது. நம் வீட்டு பையன் தோற்றத்தில் இருக்கும் நாயகன். தன் மனைவி மீது சந்தேகம், வாழ்வின் மீதான வெறுப்பு, ஏமாற்றப்பட்ட வலி, என அனைத்தையும் தன் முகத்தில் அட்டகாசமாக கொண்டு வந்து நடித்திருக்கிறார். கிட்டத்தட்ட படத்தின் மொத்த கதையையும் சுமந்து இருக்கிறார். அதை அழகாகவும் செய்திருக்கிறார்.

துரோகம் செய்யும் மனைவி வேடத்தில் சைதன்யா பிரதாப் மிக அழகாக நடித்திருக்கிறார் இடைவேளையில் வரும் டிவிஸ்ட் நம்மை நிமிர்ந்து பார்க்க வைக்கிறது.

இது ஒரு திரில்லர் படம் என்பதில் தெளிவாக இருந்து, சரியான திருப்பங்களுடன் நம்மை இறுதிவரை கூட்டிச் சென்றது சிறப்பு. படத்தின் பின்னணி இசை, ஒளிப்பதிவு எல்லாம் படத்திற்கு இன்னும் பலம் கூட்டி இருக்கிறது.

இறுதிக்காட்சியில் வரும் அருண்பாண்டியன் சர்ப்ரைஸ் தருகிறார்.

பொதுவாக புதுமுகங்களின் படம் எந்த ஒரு மெனக்கெடலும் இல்லாமல், நம் பொறுமை சோதிப்பதாகவே வந்து செல்கிறது. ஆனால் இந்த படம் அதிலிருந்து மாறுபட்டு நமக்கு ஆச்சரியம் தருகிறது

படத்தின் பட்ஜெட் சிறிதாக இருந்தாலும், திரைக்கதை, மேக்கிங், நடிப்பு, என அத்தனையிலும் கொஞ்சம் கூடுதலான உழைப்பை தந்து நம்மை பாராட்ட வைத்திருக்கிறார்கள் பட குழுவினர்.

அதோ முகம் தமிழில் ஒரு மிகச்சிறந்த திரில்லர் சினிமா