எப்படி இருக்கிறது டியர் திரைப்படம் ?

ஆயிரம் பொன் படத்தை இயக்கிய ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவான ‘டியர்’ திரைப்படம் ஏப்ரல் 11ம் தேதி ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

ஐஸ்வர்யா ராஜேஷ் ஜிவி பிரகாஷ் கூட்டணியே மிக வித்தியாசமான கூட்டணி, இவர்கள் இருவர் ஜோடியில், குறட்டை பிரச்சனையை மையமாக வைத்து வந்திருக்கும் திரைப்படம் தான் டியர்.

சில மாதங்கள் முன்பாக குறட்டைப் பிரச்சனையை மையமாக வைத்து குட் நைட் என்ற படம் வந்தது. மணிகண்டன் நடிப்பில் வந்திருந்த அந்த திரைப்படம், குறட்டை பிரச்சனையும், அது குடும்பத்தில் ஏற்படுத்தும் குழப்பங்களையும் விரிவாக அலசி இருந்தது. கிட்டத்தட்ட டியர் படத்தின் கதையும் அதேதான். ஆனால் இந்த படத்தில் குறட்டை பிரச்சனை இருப்பது கதாநாயகிக்கு!!

நம் தினசரி வாழ்வில் சந்திக்கும் ஒரு சிறு பிரச்சனை எப்படி பூதாகரமாக மாறுகிறது என்பதை திரைக்கதை ஆக்கும் பாடங்கள் பெரும்பாலும் ஜெயித்து விடும். அந்த வகையில் இந்த படமும் ஓரளவு ஈர்க்கும் படியான திரைக்கதையில் குடும்பத்து உறவுகளின் உணர்வுகளைச் சொல்லி திருப்தியான படமாக அமைந்துள்ளது.

கதை மிக எளிதானது, ஒரு அழகான குடும்பம். அம்மா, அண்ணன், அண்ணி என வாழும் ஜீவி பிரகாஷ், ஒரு பெரிய சேனலில் சேர ஆசைப்படுகிறார். ஆனால் பெண் பார்த்து கல்யாணம் செய்து கொள்கிறார் கல்யாணம் செய்து வைக்க குடும்பம் முடிவு செய்கிறது. பெண் அவருக்கு பிடிக்கும் போது அவரும் ஒத்துக் கொள்கிறார். ஆனால் மண்மகளுக்கு குறட்டை பிரச்சனை, அது இவரது வாழ்வில் எவ்வளவு பெரிய பிரச்சனை ஆகிறது என்பதுதான் இந்த திரைப்படம்

பொதுவாக ஹீரோயின்கள் இப்படி ஒரு கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடிக்க மாட்டார்கள். ஆனால் அது போன்ற கதைகளையும் கதாபாத்திரங்களின் தேடித்தேடி போய் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். ஜீவி பிரகாஷ் அவருக்கு ஈடு கொடுத்து நடித்திருக்கிறார்.


கொஞ்சம் விட்டால் ஜிவி பிரகாஷ் மேல் அதிகமாக ரசிகர்களுக்கு கோபம் வரும் படியான ஒரு கதாபாத்திரம், ஆனால் அதை உணர்ந்தும் அந்த கதாபாத்திரத்தை சரியாக பிரதிபலித்திருக்கிறார் அதற்காக ஜீவியை பாராட்டலாம்.

ரோகினி, தலைவாசல் விஜய், காளி வெங்கட், நந்தினி எல்லோருமே கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருப்பது அழகு. கிடைக்கும் சின்ன சின்ன இடங்களில் தான் நல்ல நடிகன் என்பதை நிரூபிக்கிறார் காளி வெங்கட்.

கலகலப்பாக ஆரம்பிக்கும் திரைப்படம் இடைவேளை வரை சிரிக்க வைத்து, இடைவேளையில் அதிர்ச்சி தந்த பிறகு, கிளைமாக்ஸ் வரை பெரும் எமோஷனலாக நகர்ந்து முடிகிறது.

கிட்டத்தட்ட இடைவேளைக்கு முன்பாக ஒரு கதையும், இடைவேளைக்கு பின்பாக குடும்பத்தை சேர்க்கும் வகையில் வேறொரு கதையும் சொல்லி இருக்கிறார்கள். குறட்டை பிரச்சினையை மையமாக எடுத்துவிட்டு, பாதியில் அதை விட்டு விட்டார்களோ என்று தோன்றுகிறது.

குட்நைட் படம் இவர்களுக்கு எதிரியாக அமைந்திருக்கிறது. ஏற்கனவே ஒரு படம் அதே மாதிரி வந்து விட்டதால் அதிலிருந்து மாறுபட்டு தெரிய வேண்டும் என கதையை கொஞ்சம் குழப்பி எடுத்து இருப்பது அப்பட்டமாக தெரிகிறது.

நடித்த அனைவரின் நடிப்பும் நன்றாக இருக்கிறது மீயூசிக், ஒளிப்பதிவு, எடிட்டிங் எல்லாமே நன்றாக இருக்கிறது இயக்கமும் நன்றாகவே இருக்கிறது. எல்லாம் இருந்தும் ஏதோ மிஸ் ஆகிறது என்கிற உணர்வை தவிர்க்க முடியவில்லை.

திரைக்கதை ஒழுங்காக வடிவமைத்து இருந்தால், டியர் இன்னும் சிறப்பான படமாக அமைந்திருக்கும்

டியர் ஒரு முறை ரசித்து வரலாம்.