சந்திரமுகி 2 திரை விமர்சனம்

இயக்கம் – பி.வாசு
நடிகர்கள் – ராகவாலாரன்ஸ் , கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா
இசை – கீரவாணி
தயாரிப்பு – லைகா நிருவனம்

பணக்கார குடும்பம் தொடர்ந்து பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. அந்த குடும்பத்தின் பிரச்சனை தீருவதற்கு குல தெய்வ வழிபாடு ஒன்றே தீர்வு என சாமியார் ஒருவர் கூறுகிறார். இதனால் அந்த குடும்பம் அவர்களின் சொந்த ஊருக்கு செல்ல முடிவெடுக்கிறது. இவர்களுடன் குடும்பத்திற்கு சம்மந்தம் இல்லாத பாண்டியனும் (ராகவா லாரன்ஸ்) உடன் வருகிறார். அவர்கள் அனைவரும் அந்த ஊரில் உள்ள வேட்டையாபுரம் அரண்மனையில் தங்குகின்றனர். அங்கு அவர்கள் செய்யும் சில விஷயங்களால் எதிர்பாராத அமானுஷ்ய நிகழ்வுகள் நடைபெறுகிறது, இதன் பின் என்ன நடந்தது என்பதே மீதிக்கதை!

பொதுவாக பேய் படங்களை பொறுத்துவரை, தனது சொந்த வாழ்க்கையில் பிரச்சினைக்கு உள்ளாகி, இறக்கும் நபர்களே பழிவாங்குவதற்காக பேயாக மாறுவார்கள். ஆனால், சந்திரமுகி படம் இதில் இருந்து வேறுபடுகிறது எந்தவொரு தொடர்பும் இல்லாத நபர்கள் செய்யும் சில விஷயங்களால் அதில் மாட்டிக் கொண்டுள்ளனர் ,

முதல் பாகத்தின் தொடர்ச்சி, இப்படத்தில் காட்டப்படுகிறது. அதில் இருக்கும் முருகேஷன், (வடிவேலு) இந்த பாகத்திலும் அதே கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதை மாந்தர்களான வேட்டையன் மற்றும் சந்திரமுகியை சுற்றியே படக்கதை நகர்கிறது. இதில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா, மஹிமா நம்பியார், லக்‌ஷ்மி மேனன், ஷ்ருஷ்டி டாங்கே, ஒய்.ஜி.மகேந்திரன், மானஸ்வி கொட்டாச்சி, ஆர்.எஸ்.சிவாஜி, மனோ பாலா என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. ராதிகா சரத்குமார் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். வடிவேலுக்கு கொடுக்கப்பட்ட காட்சிகள் சற்று மிகைப்படுத்தி காண்பிக்கப்பட்டதனால், முதல் பாகத்தில் இருக்கும் அளவிற்கு இந்த பாகத்தில் காமெடி காட்சிகள் இல்லை.

ஆனால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கங்கனா ரணாவத்தை சந்திரமுகி கதாபாத்திரத்தில் பொருத்தி பார்க்க முடியவில்லை. இதை பார்க்கும்போது தான் ஜோதிகா சந்திரமுகியாக வாழ்ந்துள்ளார் என்று தெரிகிறது , கங்கனா ரணாவத் மட்டுமில்லை எந்தவொறு கதாபாத்திரமும் மனதில் பெரிதாக ஒட்டவில்லை, முதல் பாகத்தில் வேட்டையனாகவும் சந்திரமுகியாவும் தன்னை தாங்களே நினைத்து கொள்பவர்களாக ரஜினி, ஜோதிகா நடித்திருப்பார்கள். மனநல பிரச்சினை என சொல்லி இந்த நிகழ்விற்கு முதல் பாகத்தில் தீர்வு காணப்பட்டிருக்கும். ஆனால், 2ஆம் பாகத்தில் சந்திரமுகி மற்றும் வேட்டையன் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. இந்த பிளாஷ்பேக் காட்சியில் காட்டப்படும் ட்விஸ்ட் ரசிகர்கள் நிச்சயம் எதிர்பாராத ஒன்றாக இருக்கும்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்கர் புகழ் கீரவாணியின் இசையில் பாடல்கள் இடம் பெற்றிருந்தாலும், முதல் சந்திரமுகியை நினைவூட்டும் வகையில் தான் ஒவ்வொரு பாடலும் உள்ளது. குறிப்பாக படத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட “ரா ரா”பாடல் வரிகள் பயன்படுத்த பாடல் நம் பொறுமையை சோதிக்கும் அளவில் தான் இருந்தது,

18 ஆண்டுகளுக்கு பின் வெளியான இந்த இரண்டாம் பாகம், முழுக்க முழுக்க கமர்ஷியல் பேய் படமாகவே காண்பிக்கப்பட்டுள்ளது. 150 ஆண்டுகளுக்கு முன் என்னதான் நடந்தது என்பதை விவரமாக விளக்கி, பேய் படங்களில் வரும் வழக்கமான க்ளைமாக்ஸுடன் நிறைவு பெறுகிறது.

முதல் பாகத்தை ரசித்தவர்கள் இந்த சந்திரமுகி படத்தை குடும்பத்துடன் சென்று ஒரு முறை பார்க்கலாம்.