மிகப்பெரிய நடிப்புக் களஞ்சியமான ரகுவரன்!

ரகுவரன்- மிகப்பெரிய, யாரும் எதிர்பார்க்க முடியாத திறமைகளுக்குச் சொந்தக்காரர். சினிமா ரசிகர் ஒவ்வொரு வருக்கும் நன்கு தெரிந்தவரும் கூட.

1980-ல் திரைப்படக் கல்லூரி மாணவராயிருந்த ஹரிஹரன், தனது சக மாணவரான ரகுவரனை வைத்து இயக்கிய படம் ஏழாவது மனிதன். தொழிற்சாலைக் கழிவுகளின் கெடுதலை விளக்கிய அந்தப் படத்துக்கு விருது கிடைத்தது. அடுத்து ஸ்ரீதர் இயக்கிய ‘ஒரு ஓடை நதியாகிறது’ படத்தில் சுமலதாவின் ஜோடியாக நடித்தார். இளையராஜாவின் நல்ல பாடல்கள், ஸ்ரீதரின் திரைக்கதை என எல்லாம் இரும்தும் வணிக ரீதியான வெற்றி கிட்டவில்லை அந்தப் படத்துக்கு. பின்னர் வி.சி.குகநாதன் இயக்கத்தில் இந்திரகுமாரி தயாரித்த ‘நீ தொடும்போது’ எனும் படத்தில் ராஜேஷ் – லட்சுமியுடன் நடித்தார்.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு எஸ்.பி.முத்துராமன் இயக்கிய ‘ஒரு மனிதனின் கதை’ என்ற ஏவிஎம்மின் 13 வார தொடர் ஒன்றில் நடித்தார். தனியார் தொலைக்காட்சிகள் வராத அந்த நாட்களில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான இத்தொடர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.மீண்டும் ஏவிஎம்மின் சம்சாரம் அது மின்சாரம் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். ஆர்.சி. சக்தி இயக்கத்தில் அமலாவுக்கு ஜோடியாக கூட்டுப்புழுக்கள் படத்தில் நடித்தார். அனுராதா ரமணன் எழுதிய கதை இது.

மறுபடியும் ஒரு சின்ன இடைவெளி. பின்னர் பாஸில் இயக்கிய பூவிழி வாசலிலே என்ற படத்தில் சத்யராஜூக்கு வில்லனாக நடித்தார். இது அவரது திரையுலக வாழ்வில் பெரிய திருப்பு முனையை அவருக்கு ஏற்படுத்தியது. தொடர்ந்து ரஜினியின் மனிதன், ஊர்க்காவலன் போன்ற படங்களில் நடித்தார்.

சத்யராஜுடன் அண்ணாநகர் முதல் தெரு, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு படங்களில் நடித்தார். இவையும் பெரும் வரவேற்பைப் பெற்றன. தொடர்ந்து 30 படங்களில் வில்லனாக கொடிகட்டிப் பறந்தார். ஆனால் ஏனோ கமல் படங்களில் மட்டும் அவர் நடிக்கவே இல்லை.

அதன் பின்னர் மீண்டும் கதாநாயகனாக ‘மைக்கேல் ராஜ்’ எனும் படத்தில் வி.சி குகநாதன் இயக்கத்தில் நடித்தார். டி.ராமாநாயுடு தயாரித்தது இப்படம். காக்கி சட்டை, கசங்கிய லுங்கியுடன் அவர் நடித்த இப்படம் 100 நாள் ஓடியது. அதன் பிறகு கைநாட்டு, என் வழி தனி வழி, தூள் பறக்குது படங்களில் நாயகனாக நடித்தார்.

மீண்டும் ஒரு இடைவெளி…

அடுத்து மணிரத்னம் தனது ‘அஞ்சலி’ படத்தில் குணச்சித்திர வேடத்தில் ரகுவரனை நடிக்க வைத்தார். அதில் அவருக்கு பிரமாதமான பெயர்.

பின்னர் கே.எஸ்.ரவிக்குமார் தனது புரியாத புதிர் படத்தில் மனைவியைச் சந்தேகப்படும் சைக்கோ வில்லன் வேடத்தில் நடிக்க வைத்தார். இது அவருக்கு பெரிய பெயர் தேடித் தந்தது.

பின்னர் கவிதாலயாவின் சிவா படத்தில் ரஜினிக்கு இணையான நாயகனாக நடித்திருந்தார்.ராம்கோபால் வர்மாவின் உதயம் படத்தில் (தெலுங்கில் சிவா) ரகுவரன் ஏற்ற பவானி எனும் வேடம், அவருக்கு பெரிய பெயரைப் பெற்றுத் தந்தது.

பின்னர் வந்த படம்தான் பாட்ஷா. பாட்ஷாவுக்கு இணையான ஆண்டனி வேடத்தில் ரஜினியுடன் கலக்கியிருந்தார் ரகுவரன். ரஜினியின் முத்து படத்திலும் திவான் வேடத்தில் நடித்தார்.தனக்கும் இப்படி ஒரு அப்பா கிடைக்கமாட்டாரா என இளைஞர்களை ஏங்க வைக்கும் வகையில் லவ்டுடே படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடித்திருந்தார்.ஒரு நல்ல அண்ணனாக ஆஹா, முகவரி, நேருக்கு நேர் படங்களில் தோன்றி உருக வைத்தார்.

இடையில் ரோகினியுடன் திருமணம், விவாகரத்து, போலீஸ் ஸ்டேஷன் என அலைந்ததில் அப்செப்டாகி இருந்தார் ரகுவரன். அப்போதுதான் ‘ஆஹா எத்தனை அழகு’ படத்தில் நடிக்க அட்வான்ஸ் வாங்கியிருந்தார். ஆனால் குடும்பப் பிரச்சினைகளால் மிகவும் அப்செட் ஆகியிருந்த அவர், அந்தப் படத்தில் நடிக்க முடியாதென வாங்கிய அட்வான்ஸை திருப்பிக் கொடுத்தார்.

பின்னர் 2 ஆண்டுகள் படமே நடிக்காமலிருந்தார். அவரைச் சமாதானப்படுத்தி தனது சிவப்பதிகாரம் படத்தில் நடிக்க அழைத்து வந்தவர் கரு பழனியப்பன். அதன் பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் வெளியான பீமா அவருக்கு நல்ல பெயர் பெற்றுத் தந்தது.

ஆஹா எத்தனை அழகு படத்தில் நடிக்காமல் போனாலும், அடடா எத்தனை அழகு படத்தில் ஜெய் ஆகாஷூடன் நடித்து முடித்துவிட்டார்!

தொடக்கம் படத்தில் ஜெரோம் புஷ்பராஜ் இசையில் தனது சொந்தக் குரலில் ஒரு பாடலையும் பாடியிருந்தார் ரகுவரன்.இதுவரை தமிழ் தெலுங்கு, மலாயாளம் கன்னடம், ஹிந்தி என நான்கு மொழிகளில் அதுவும் சொந்தக் குரலில் பேசி நடித்துள்ளார். ஒரு ஹிந்திப் படத்தில் திலீப் குமாருக்கு மகனாக நடித்துள்ளார்.

படிக்கும் காலத்திலேயே கிடார் வாசிப்பதில் ரகுவரனுக்கு அலாதி ஆர்வம். இசை மீது மிகுந்த காதலிருந்தது அவருக்கு. ஆனால் நடிக்க வந்தபிறகு இசையை மறந்துவிட்டார். மனைவியைப் பிரிந்த பிறகு மீண்டும் இசையில் கவனம் செலுத்தினார். அவ்வப்போது மனதில் தோன்றியதை பாடி பதிவு செய்து வைத்திருந்தார். தன் அனுபவங்களை புத்தகமாக எழுதிக் கொண்டிருப்பதாகவும் நண்பர்களிடம் சொன்னார்.

இவ்வளவு திற்மை வாய்ந்த ரகுவரனிடம் போதைப் பழக்கம் இருந்தது. கடைசிவரை அது அவரை விடவே இல்லை. குடும்ப வாழ்க்கையையும் சினிமா வாழ்க்கையையும் அது ரொம்பவே பாதித்தது. இத்தனைக்கும் அவர் சாய்பாபாவின் தீவிர பக்தர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் ஒரு கார் பறக்கிறதென்றால் அது ரகுவரன் கார்தான் என சொல்லும் அளவுக்கு வேகமாக கார் ஓட்டுவார். ஆனால் கடைசி நாட்களில் படப்பிடிப்புக்கு மட்டுமல்ல, டப்பிங்குக்கூட கேரவனில்தான் படுத்துக்கொண்டே சென்றார்.

நடிகனுக்கு உடம்பும் மனசும் ரொம்ப முக்கியம் என்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும், சூப்பர்ஸ்டார் ரஜினியும் அடிக்கடி கூறுவார்கள். அதை உணரவில்லை ரகுவரன்.

ஒரு மிகப்பெரிய நடிப்புக் களஞ்சியமான அவரை போதைக்குப் பறிகொடுத்து விட்டது தமிழ் திரையுலகம்.

-சங்கநாதன்

ரகுவரன் காலமான நாளையொட்டிய பதிவு