எப்படி இருக்கிறது தமிழ் ராக்கர்ஸ்?

தமிழ் ராக்கர்ஸ், ருத்ரா என்ற காவல்துறை அலுவலரின் கதையைப் பற்றியது, அவர் கட்டுக்கடங்காத ரசிகர்கள் கொண்ட அதிரடி ஸ்டார் ஆதித்யா உடைய புதிய படமான கருடா தமிழ்ராக்கர்ஸ் எனும் இணைய திருடர்களினால் இணையத்தில் வெளியிடப்படுவதை எதிர்த்து போராடுகிறார். அதன் பின்னணியை கண்டுபிடிக்க முயல்கிறார். இந்த தொடரில் அருண்விஜய் வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன், அழகம் பெருமாள், வினோதினி வைத்தியநாதன் மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அறிவழகன் இயக்கும் இந்த நிகழ்ச்சியை மனோஜ் குமார் கலைவாணன் எழுதி ஏவிஎம் புரடக்சன்ஸ் தயாரித்துள்ளது.

அதிக பொருட்செலவில் உருவான ஒரு படத்தை திருட்டுதனமாக வெளியிட போவதாக அறிவிக்கும் ஒரு கும்பலை, காவல்துறை எப்படி கண்டுபிடிக்கிறது என்பதே கதை.

தமிழ் ராக்கர்ஸ் எனும் சட்டவிரோதமான வலைதளம் தமிழ் சினிமாவில் செய்துவந்த குற்றங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட ஒரு வலைதொடர் தான் இந்த தமிழ் ராக்கர்ஸ்.

தமிழ் ரசிகர்கள் பார்த்து பழக்கபட்ட சினிமாவின் பார்க்காத முகத்தை காட்ட முயற்சித்து இருக்கும் படக்குழுவிற்கு வாழ்த்துகள் தான் கூற வேண்டும். தமிழ்ராக்கர்ஸ் எப்படி இயங்குகிறது, அதில் யார் இருக்கிறார்கள், எதன் மூலம் படங்களை அவர்கள் எடுக்கிறார்கள், அவர்களுடைய கூட்டாளிகள் யார் என்ற பல கேள்விக்கு கற்பனையான பதில்களை கொடுக்க முயற்சித்து இருக்கிறார்கள் படக்குழு.

இந்தியா முழுவதும் சட்டவிரோதமாக படங்களை வெளியிடும் குற்றங்கள் நிகழ்ந்து கொண்டு இருந்தாலும், அது ஒரு சவாலாக இருப்பது தமிழ் சினிமாவில் தான். அதில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள மக்களுக்கு ஆர்வம் இருக்கும் அதை மனதில் வைத்து கொண்டு படக்குழு திரைக்கதை அமைத்து இருக்கிறார்கள்.

வலைதொடருக்கே உண்டான பல கிளைக்கதைகளை உருவாக்க திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. தயாரிப்பாளர் பக்கம், இயக்குனர் பக்கம், ஹிரோ பக்கம் ஹீரோவின் ரசிகர்கள் பக்கம், ரசிகர்களின் குடும்பங்கள் பக்கம், குற்றவாளிகள் பக்கம், காவல்துறை பக்கம் என அனைத்து வகையில் திரைக்கதை அமைக்க எழுத்தாளர்கள் முயற்சித்து இருக்கிறார்கள், அதற்கு பாராட்டுகளை கூற வேண்டும்.

சில இடங்களில் ஆச்சர்யங்களையும், பல இடங்களில் சோர்வையும் தருகிறது திரைக்கதை. இன்னும் ஆழமான எழுத்து இந்த திரைக்கதைக்கு தேவை. பல இடங்கள் இன்னும் முடிக்கபடாமல், தெளிவாக கூறப்படாமல் இருக்கிறது, இரண்டாம் பாகம் வருகிறது என்று அவர்கள் கூறினாலும், முதல் பாகத்தை நாம் ஒத்துகொள்வதற்கான காரணங்கள் திரைக்கதையில் தேவை, அது பல இடங்களில் காணாமல் போகிறது.

அருண் விஜய்க்கு போலீஸ் கதாபாத்திரம் பக்கவாக பொருந்துகிறது. பல நடிகர்கள் இருக்கிறார்கள், அவரவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட காட்சிகளுக்கு இயக்குனர் கூறியதை அப்படியே வழங்கி இருக்கிறார்கள். ஆனால் ஒரு வெப்சீரிஸ்ல் ரசிகர்கள் ஒன்ற வேண்டும் என்றால், அவர்களுடைய வாழ்கையே நமக்கு பரிட்சிய படவேண்டும், இது தமிழ் வெப்சீரிஸ்-ல் சுத்தமாக இருப்பதில்லை. கதாபாத்திரங்களுக்கான ஆழமான எழுத்து இல்லாத காரணத்தால், அவர்களுடன் ஒன்ற முடியவில்லை.

மொத்தத்தில் ஒரு டீசண்டான வெப் தொடராக தமிழ் ராக்கர்ஸ் வந்துள்ளது.