ஹாட் ஸ்பாட் படம் வில்லங்கமா ?

 

இயக்கம்: விக்னேஷ் கார்த்திக்

நடிப்பு : கலையரசன், சோபியா, சாண்டி, அம்மு அபிராமி, ஜனனி, சுபாஷ், கௌரி ஜி கிஷன், ஆதித்ய பாஸ்கர்,

இசை: சதீஷ் ரகுநாதன், வான்

தயாரிப்பு: பாலாமணிமார்பன் கே ஜே, சுரேஷ் குமார், கோகுல் பெனாய்

அடியே, திட்டம் இரண்டு படங்களின் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஆந்தாலஜி வகையில் 4 வில்லங்கமான கதைகளின் தொகுப்பாக வந்துள்ள படம் ஹாட் ஸ்பாட்

ஒரு தயாரிப்பாளரிடம் உதவி இயக்குநர் ஒருவர் கதை சொல்லப் போகிறார். கதை கேட்கும் மூடில் இல்லாத தயாரிப்பாளரிடம் அவர் 4 தனித்தனி கதைகளை சொல்கிறார். அந்த நான்கு தனித்தனி கதைகளும் தான் இந்த படம்

விக்னேஷ் கார்த்திக் இயக்குனராகவே வருகிறார் அவர் சொல்லும் நான்கு கதைகளும் படத்தில் திரைப்படமாக வருகிறது.

அடியே, திட்டம் இரண்டு என தனது படங்களின் கான்செப்ட் , ஐடியா எல்லாவற்றிலும் வித்தியாசமாக யோசிக்கும் விக்னேஷ் கார்த்திக் இந்த படத்தில் சமூகத்தில் அதிகம் பேசப்படாத வில்லங்கமான விஷயங்களை தொட்டிருக்கிறார்.

முதல் கதையான கெளரி கிஷன் – ஆதித்யா பாஸ்கர் நடித்திருக்கும் திருமண கதை பெண்ணியத்தை போற்றும் வகையில் இருப்பதோடு, ஆண்களுக்கு நிகராக பெண்கள் சாதிக்கும் தற்போதைய காலக்கட்டத்திலும் திருமணம் என்ற பெயரில் பெண்கள் இன்னமும் ஆணதிக்கத்திற்கு உற்பட்டு இருப்பதை சாட்டையடியாக சொல்லி சபாஷ் சொல்ல வைக்கிறது.

விலங்குகளில் இருக்கும் செக்ஸுவல் சுதந்திரம் ஏன் மனிதனிடத்தில் இல்லை. யார் சட்டம் வைத்தார்கள் போன்ற கத்தி மேல் நடக்கும் கதை தான் இரண்டாவதாக சொல்லப்படும் சாண்டி – அம்மு அபிராமி நடித்திருக்கும் காதல் கதை. மிகவும் விவகாரமான இந்த கதைக்கு கதையில் சொல்லப்படும் பிரச்சனைக்கு எந்தவித தீர்வும் சொல்லாமல், அதற்கான கேள்வியை ரசிகர்களிடமே விட்டுவிடுகிறார் இயக்குநர்.

பாலியல் சுதந்திரம் என்பது ஆண் பெண் இருவருக்கும் ஒன்று தான் என்பதை அழுத்தமாக பேசுகிறது மூன்றாவது கதை. “உங்களுக்கு வந்தால் இரத்தம், எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா? என்று பெண்கள் ஆண்களை பார்த்து கேட்கும் கேள்வியை மையப்படுத்திய வரும் இந்த கதையில் சுபாஷ் – ஜனனி நடித்திருக்கிறார்கள். சமூகத்தில் தற்போது நிலவும் ஆண் விபச்சாரத்தையும் இந்தப்படம் பேசுகிறது.

குழந்தைகளை நாம் குழந்தைகளாக நடத்துகிறோமா என்கிற அழுத்தமான கேள்வியை முன்வைக்கிறது கலையரசன் நடித்திருக்கும் நான்காவது கதை.

ஒவ்வொரு கதையுமே மிக வில்லங்கமானது, சமூகத்தில் மிகவும் சென்சிடிவான விஷயம் என்றாலும் இயக்குனர் அதை மிக கவனத்துடன் கையாண்டு இருக்கிறார். அதை அட்டகாசமான சினிமாவாகவும் ரசிகனுக்கு கடத்தி இருக்கிறார்.
இயக்குநருக்கு நான்கு படங்கள் மூலமாக நல்ல அனுபவம் கிடைத்திருக்கிறது திரையில் ஒரு கதையை எப்படி சொல்ல வேண்டும் என்று தெளிவு கிடைத்திருக்கிறது அந்த தெளிவு இந்த படத்தில் அழுத்தமாக வெளிப்பட்டிருக்கிறது

கோகுல் பினாயின் ஒளிப்பதிவில் நான்கு கதைகளும் நான்கு விதமான காட்சியமைப்புகளில் கவனம் ஈர்ர்கிறது.

இசையமைப்பாளர்கள் சதீஷ் ரகுநாதன் மற்றும் வான் இசையில் கதையை சுற்றி வரும் பின்னணி பாடலும், பின்னணி பீஜியமும் மிக அட்டகாசமாக பொருந்திப் போகிறது.

சமூகத்தில் எது நல்லது எது கெட்டது எது பாரம்பரியம் எது பழக்க வழக்கம் எனும் அழுத்தமான கேள்வியை முன்வைக்கிறது இந்த ‘ஹாட் ஸ்பாட்’ .