மாமன்னன் -என் பார்வை!

பரியேறும் பெருமாள் மாரி செல்வராஜின் உட்சம் மீண்டும் அதை அடைவது என்பது கடினம். மிக சுமாரான படம். பல நல்ல தருணங்களும் மிகச்சிறந்த மேக்கிங்கும், அட்டகாசமான இசையும் படத்தின் பலம். பலவீனமான கதை இரண்டாம் பாதியின் திரைக்கதை இந்தப்படத்தின் பெரும் பிரச்சனை. மாரி செல்வராஜுக்கு திரைமொழி மிக அழகாக வருகிறது. மிகப்பெரும் உணர்வுகளை மிக சில மாண்டேஜ் மூலமாக காட்டிவிடுகிறார். உதாரணம் உதயநிதி கீர்த்தி சுரேஷ் காதல் எபிஸோட் 4 நிமிட பாடல், மாண்டேஜ் மூலம் அது நம் மனதில் மிக ஆழமாக பதிகிறது.

விடுதலை படத்தில் வெற்றி மிஸ் செய்தது இது தான்.ஆனால் அதே மாண்டேஜ் பிரச்சனையாகவும் இருக்கிறது மாமன்னன் யார் அவர் அவருடைய இனத்திற்கு என்ன செய்தார் எல்லாம் கரையிலேயே இல்லை வடிவேலுவை வைத்து வரும் மாண்டேஜ்கள் எதுவும் எடுபடவில்லை. 48 ஃப்ரேம் சில காட்சிகளில் கதாபாத்திரத்தின் உணர்வை நாம் நெருக்கமாக உணர காட்டப்படும் திரை மொழி ஆனால் அதை எல்லா காட்சிகளிலும் வைக்கும் போது காட்சி நேரம் மட்டுமே கூடும்.

Zack synder அனைத்து படங்களிலும் பயன்படுத்துவார் ஆனால் அது கதை யோடு சரியாக பொருந்திப் போகும். தமிழில் சொல்ல வேண்டுமானால் சூர்யா ராம் கோபால் வர்மா கூட்டணியில் வந்த ரத்த சரித்திரம். இந்தப் படமும் ஓடவில்லை ஆனால் கச்சிதமாக அந்த டெக்னிக்கை பயன்படுத்திய படம். இந்தப்படத்தில் ஏன் அது ஒத்துப்போகவில்லை.

முதல் காட்சியில் வடிவேலு, உதயநிதி, பகத் பாசில் காட்சிகள் இந்த 48 ஃப்ரேம் டெகினிக்கில் காட்டப்படுகின்றன. ஆனால் அதில் கதை,உணர்வு, எதற்காக அந்த 10 நிமிட இழுவை காட்சிகள் என்பது கடைசி வரை புரியவே இல்லை. படத்தில் இதே போல பல காட்சிகள் வருகிறது. மொத்தப்படத்தில் சம்பவமும், எதிர்வினையும் தான் இருக்கிறது. தீவிரமான பின்னணி கதையோ, கதாப்பாத்திரத்தின் பயணமோ முதிர்ச்சியோ, மாறுபாடோ எதுவும் இல்லை.

மாரி செல்வராஜ் ஒரு நேர் கோட்டு திரைக்கதையில் எப்போதும் கதை சொல்வதில்லை. கதையில் நடக்கும் சமபவங்களை விவரிப்பதில் எடிட்டிங் முதலான தொழில் நுட்பங்களை கச்சிதமாக பயன்படுத்தி கொண்டு, சிறப்பாக அந்த உணர்வை நமக்கு கடத்துகிறார். பரியேறும் பெருமாளில் நாயகனுக்கு ஒரு லட்சியம் இருக்கிறது, அதை அவன் அடையும் வழியில் நடக்கும் சம்பவங்கள், ஜாதியால் அவனுக்கு ஏற்படும் அவமானங்கள், இழப்புகள் இறுதியில் அவன் எந்த புள்ளியை வந்தடைகிறான், என ஒரு முழுக்கதை இருந்தது ஆனால் அது இப்படத்தில் இல்லை.

இப்படத்தின் கதை இடைவேளை காட்சியில் தான் ஆரம்பிக்கிறது அது நாயகனுக்கும் வில்லனுக்கும் ஏற்படும் முரண்பாடாக இருக்கிறது. வடிவேலுவை உட்காரவைக்கவில்லை என்பதில் ஏற்படும் பிரச்சனை இறுதியில் அவர் எங்கே அமர்கிறார் என்பதில் முடிகிறது. படத்தின் நடிகர்கள் படத்திற்கு பெரும் பலம். இயலாமையை வெளிப்படுத்தும் வடிவேலுவின் அனுபவமிக்க முக பாவங்கள் அற்புதம் அதே நேரம் ஆரம்ப சில காட்சிகள், காரிலிருந்து பகத்தை இறங்குடா என சொல்லும் காட்சியில், காமெடி வடிவேலு வந்து விடுகிறார். உதயநிதி இரண்டு மான்ஸ்டர்களுக் கிடையில் தப்பித்ததே மிகப்பெரிய விசயம். பன்னி இறந்து போகும் காட்சியில் அவர் நடிப்பு உண்மையில் அட்டகாசமாக இருந்தது. கீர்த்தியை உண்மையில் இந்தப்படத்தில் பிடித்திருந்தது. உண்மையில் பகத் தான் நடிப்பு ராட்சசன். மிரட்டியிருக்கிறார்.

பத்திரிக்கையில் நாம் கடந்து போகும் சாதாரண செய்திகளுக்கு பின் இருக்கும் உண்மைகளை நமக்கு காட்ட ஆசைப்படுகிறார் மாரி. சுவர் இடிந்து விழுந்து மூன்று சிறுவர்கள் மரணம். தலித்திய எம் எல் ஏ தனபால் அவைத்தலைவர் என்ற இரண்டு செய்திகளின் பின்னணி தான் இந்தப்படம். இதை சொல்ல முயல்வதில் கதையை முழு படைப்பை இழந்து விடுகிறார்.

இரண்டாம் பாதி முழுக்க லாஜிக் பிரச்சனைகள். ஊருக்குள்ளேயே போக முடியாத வடிவேலு எந்த வழியில் ஜெயிக்கிறார். வில்லனை எப்படி அவர்கள் எப்படி ஜெயிக்கிறார்கள். எதுவுமே இல்லை.

இதில் ஜாதிப்பிரச்சனையை ஆழமாக சொல்லியிருக்கிறார் என்பதால் மட்டும் சுமாரான படம் என்பதை ஒப்புக்கொள்ள முடியாதல்லவா ? நான் யார் தெரியுமா என் ஜாதிப்பெருமையை தூக்கிப்பிடிக்கும், இன்னும் மனங்களில் அழுக்கு படிந்திருக்கும் நம் நாட்டில் ஜாதிப்பிரச்சனையை பேச
இன்னும் ஆயிரம் படங்கள் வரட்டும்.. ஆனால் அது முழுமையான படைப்பாக இருக்கட்டும்.