நாகரீக மனிதனை பின்னுக்கு இழுக்கு சினிமா ருத்ர தாண்டவம்

0
299

ருத்ர தாண்டவம்

எழுத்து , இயக்கம் – மோகன் ஜி
நடிப்பு – ரிச்சர்டு ரிஷி, தர்ஷா குப்தா, ராதாரவி, கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம்

கதை : தர்மபுரியை சேர்ந்த நல்ல குளத்தை சார்ந்த நல்ல போலீஸ், இளைஞர்களுக்கு போதை பொருளை விற்கும் கும்பலை பிடிக்க முயல்கிறார் அந்த முயற்சியில் ஒருவன் இறந்து விட, இறந்த இளைஞன் தாழ்த்தப்பட்டவன் என்பதால் அவர் மீது நடவடிக்கை பாய்கிறது. அவரது வாழ்க்கை தடம்புரள்கிறது. அந்த வழக்கில் இருந்து எவ்வாறு அவர் வெளிவருகிறார் என்பதே

ஒரு தரப்புக்கான நியாயத்தை மட்டுமே முடிவெடுத்து இயங்கும் மோகன் ஜி மூன்றாவதாக இயக்கியுள்ள படம். எளிய மக்கள் மீது நடக்கும் வன்கொடுமையை தடுக்க உருவான வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது, அச்சட்டம் தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும் என்பன இப்படத்தில் பேசுகிறார்.

வரலாறும் தெரியவில்லை, புவியலும் தெரியவில்லை. ஆதிக்க சாதிகளுக்கு ஆதரவாக இருக்கிறோம், மதங்களை காப்பற்ற நாங்கள் இருப்போம் என்கிற போர்வையில் எந்த விசயத்தையும் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளாமல் வாட்ஸ் ஆப்பில் வரும் தகவல்களை, வெற்று காட்சிகளாக்கி படமாக மாற்றியுள்ளார் இயக்குநர்.

கொஞ்சமேனும் மாற்றங்கள் நிகழ்ந்து தாழ்த்தப்பட்டவர்கள் தங்கள் குரலை சற்றே கூற ஆரம்பித்திருக்கும் இந்த காலகட்டத்தில் அவர்களுக்கு எதிரான வன்மத்தை கக்கும் படமாகவே இப்படம் உள்ளது.

நாயகன் ரிச்சர்ட் நல்லவர் என்பதை காட்ட மட்டுமே முதல் 40 நிமிட ஓடுகிறது. தன் மீது வழக்கு பாய காரணமாக இருந்த இளைஞன் வீட்டுக்கு செல்கிறார் நாயகன் அங்கு தான் படத்தின் திருப்புமுனை உண்மையை கண்டுபிடிக்கிறார். இறந்து போனவர் கிறிஸ்டியனாக மாறியவர் அதனால் இவர் மீதான வழக்கு செல்லாது என இவர் வழக்கு கொடுக்கிறார். என்ன மட்டமான வாதம் இது என்பதே புரியவில்லை.

இறந்த இளைஞன் போதை மருந்தால் இறந்திருந்தால் எளிமையான போஸ்ட்மார்ட்டம் மூலமே தெரிந்து விடும், அல்லது கொலையை கண்டுபிடிப்பது தான் கதையெனில் அதற்கு எத்தனையோ வழிகள் உள்ளன. ஆனால் மதத்தை பற்றி மட்டுமே பேச வேண்டும் பட்டியிலன மக்களை பயப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் மட்டுமே படம் செல்கிறது.

கவுதம் வாசுதேவ் ஓர் அரசியல் கட்சித் தலைவராக படத்தில் வருகிறார். அவர் அலுவலகத்தின் பின்னணியில் சேகுவேராவின் படம், இலங்கை நிலத்தின் வரைபடம், புத்தர் சிலை, சிவப்புக் கொடி என இயக்குனருக்கு எதிர் சிந்தனை, கொள்கை கொண்ட கொண்டவர்கள் வில்லன்களாக காட்டி இயக்குநர் தனது அறிவின் போதாமையை அற்ப சந்தோஷத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

கருத்து சுதந்திரம் அனைவருக்கும் உண்டு. இப்பட இயக்குநருக்கும் பொருந்தும். ஆனால், இப்படியான வலிந்த சித்தரிப்புகளால் வன்மத்தை மட்டுமே மோகன்.ஜி படங்களில் வெளிப்படுவது கடுமையான கண்டனத்திற்குரியது.

ஒரு அறிவார்ந்த சிந்தனைக்கு எதிரான வாதம் இயக்குநரிடம் இல்லை

பட்டியலின இளைஞர்கள் போதைப்பொருள் விற்பதையும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதையும் மட்டுமே தொழிலாகக் கொண்டிருப்பதுபோல காட்சிகள், இளைஞர் பட்டியலினத்தைச் சேர்ந்தவராக இருந்த போதிலும், வன்கொடுமை தடுப்புச் சட்டம் செல்லுபடியாகாது எனும் கருத்து, அமைத்திருப்பது விஷமத்தனமான உள்நோக்கம் கொண்டது என்றே அப்பட்டமாக தெரிகிறது. பட்டியலினத் தாயாக வருகிறவர் பேசும் ஒரு வசனம் ‘நாம எப்படி பிறந்தமோ அப்டியே சாகணும்’ என முழுக்க முழுக்க வன்மத்தின் உருவமாகவே இப்படம் வெளியாகி இருக்கிறது.

ரிச்சர்ட் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி ரியாக்‌ஷனை காட்டுகிறார். தர்ஷா குப்தா கொஞ்சம் கவர்கிறார். கௌதம் மேனன் வரும் இடங்களில் அசத்தியிருக்கிறார். இசை பரவாயில்லை ரகம். ஒளிப்பதிவு படத்தை தாங்குகிறது. மேக்கிங்கில் முந்தைய படங்களில் இருந்து நல்ல முன்னேற்றம் தெரிகிறது.

படம் ஒரளவு மேக்கிங்கில் நன்றாக எடுக்கப்பட்டிருப்பதால் இயக்குநரின் வன்ம கருத்துக்களை ஒப்புக்கொள்ள முடியாது. இது மனித நாகரீகத்திற்கு எதிரான சிந்தனையை விதைக்கும் படமாக வந்திருப்பது அவமானம். ருத்ர தாண்டவம் நிராகரிக்கப்பட வேண்டிய சினிமா.