நடிகை செளகார் ஜானகிக்கு பத்மஸ்ரீ விருது கிடைச்சிடுச்சு – வீடியோ!

ஜஸ்ட் நைண்டீன் ஏஜி வயதில் கையில் மூன்று மாத கைக்குழந்தையோடு தனது முதல் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் சௌகார். இன்றும் நட்சத்திர அந்தஸ்தை தக்க வைத்துக் கொண்டிருக்கும் தாரகை. 80+ ல் படு பிசியான நடிகை என்பதற்காக மட்டுமல்ல. வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்து மகிழ்ந்து, வாழ்ந்து கொண்டிருக்கும், பாஸிடிவ் எண்ணங்கள் கொண்ட லிவிங் லெஜண்ட் என்பதும் உண்மை. 1931-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் பிறந்த சவுகார் ஜானகி, தன்னுடைய 19-வது வயதில் என்.டி.ராமராவ் நடித்த சவுகார் என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். 70 வருடங்கள் சினிமாவில் நடித்துள்ள சவுகார் ஜானகி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஏறக்குறைய 400 திரைப்படங்களில் நடித்துள்ளார். 1950-ம் ஆண்டு முதல் 1980-ம் ஆண்டு வரை அவர் மிகவும் பிரபலமாக விளங்கினார். கதாநாயகி, வில்லி, குணசித்திர கதாபாத்திரம், என தனது நடிப்பு ஆளுமையை அழுத்தமாக திரை உலகில் பதிய வைத்தவர் சௌகார் ஜானகி. திருமணம் முடிந்துவிட்டால் கதாநாயகி வேடத்துக்கு லாயக்கில்லை என ஒதுக்கும் இந்திய சினிமாவில் திருமணமாகி குழந்தை பிறந்தபின் வறுமை காரணமாக சினிமாவில் வாய்ப்பு தேடி வந்தவராக்கும் இந்த நடிகை சௌகார் ஜானகி.

கடந்த மாதம் 12 ஆம் தேதி தனது 92 வது பிறந்தநாளை கொண்டாடினார். 1931 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தின் கோதாவரி மாவட்டத்தில் பிறந்த அவர் தனது 15 வயதில் ஆல் இந்தியா ரேடியோவில் அறிவிப்பாளராக பணியாற்றினார். அவரது குரலைக்கேட்டு தெலுங்குப்பட தயாரிப்பாளர் அவரை திரைப்படத்தில் நடிக்க அணுகியபோது அவரது குடும்பத்தார் மறுத்து அவருக்கு திருமணம் செய்து வைத்து விட்டனர். ஒரே ஆண்டில் குழந்தை, குடும்ப வறுமை, கணவரிடம் நிலையைச் சொல்லி அதே தயாரிப்பாளர் வி.என்.ரெட்டி வீட்டு வாசல் கதவை கைக்குழந்தையுடன் தட்டினார் சௌகார் ஜானகி. கைக்குழந்தை, திருமணமாகி விட்டது, சாத்தியமே இல்லையம்மா என தயாரிப்பாளர் சொல்ல குடும்ப நிலையை கூறியுள்ளார் சௌகார் ஜானகி. தயாரிப்பாளர் அவர் தம்பி எடுக்கும் படத்திற்கு அவரை சிபாரிசு செய்ய நடிகர் என்.டி.ராமாராவ் கதாநாயகனாக அறிமுகமான ‘சௌகார்’படத்தில் கதாநாயகியாகஅறிமுகமானார்.

1947 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தை எல்.வி.பிரசாத் இயக்கியிருந்தார். அன்றைய காலகட்டத்தில் வி.என்.ஜானகி என்றொரு கதாநாயகி நடிகை இருந்ததாலும்,இவர் சௌகார் படத்தில் அறிமுகமானதாலும் சௌகார் ஜானகி ஆனார். திரையுலகில் தைரியமான யதார்த்த நடிகை என பெயரெடுத்தவர் திரையுலகில் 70 ஆண்டுகாலம் நடித்துவரும் நடிகை ,செளகாருக்கு இந்த விருது தாமதமாகவே வழங்கப் படுது.

தமிழகத்தை ஆண்ட கருணாநிதி, எம்.ஜி.ராமச்சந்திரன், ஜெ.ஜெயலலிதா, ஒன்றுபட்ட ஆந்திர மாநில முதல்வராக இருந்த என்.டி.ராமாராவ் என நான்கு முதல்வர்களுடன் பயணித்தவர், மூன்று முதல்வர்களுடன் சினிமாவில் நடித்தவர் என்கிற பெருமைக்குரியவர். தமிழ், தெலுங்கு,மலையாளம்,கன்னடம் என நான்கு தென்னிந்திய மொழி சினிமாவில் சூப்பர் நடிகர்களாக இருந்த எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், என்.டி.ராமாராவ், நாகேஸ்வரராவ், பிரேம்நசீர், ராஜ்குமார் என எல்லோருடனும் நடித்தவர் சௌகார் ஜானகி.

தமிழ் சினிமாவில் பல்வேறு பாத்திரங்களை பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். மு.கருணாநிதி கதை வசனத்தில் ‘குலக்கொழுந்து’ படத்தில் நடித்துள்ளார் சௌகார் ஜானகி. தமிழில் பாவேந்தர் பாரதிதாசன் வசனம் எழுதிய வளையாபதி படத்தில் அவரது வசனத்தை பேசி நடித்துள்ளார். நடிகவேள் எம்.ஆர்.ராதாவுடன் குமுதம் படத்தில் நடித்துள்ளார். தமிழில் ஜெமினி கணேசன், ஜெய்ஷங்கர், சிவகுமார், ரஜினி, கமல் என அனைத்து நடிகர்களுடன் நடித்தவர் என்கிற பெருமை இவருக்கு உண்டு .தமிழில் ஜெமினி நிறுவனம் தயாரிக்கும் படத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பு கிடைக்க காரணமாக இருந்தவர் காஸ்ட்யூம் மேனேஜராக இருந்து பின்நாளில் பிரபல நடிகராக மாறிய காதல்மன்னன் ஜெமினி கணேசன் தான். அதனால் அவரை எப்போதும் தனது சகோதரர் என அழைக்கிறார் சௌகார் ஜானகி.

சௌகார் ஜானகி தமிழில் நடித்த படங்கள் மிகவும் பிரபலமானவை. வித்தியாசமான பாத்திரங்களில் அவர் நடித்துள்ளார். குமுதம், மோட்டார் சுந்தரம் பிள்ளை, உயர்ந்த மனிதன், பாபு, புதிய பறவை, எம்ஜிஆருடன் என் கடமை, ஒளிவிளக்கு, ஜெமினியுடன் மாலையிட்ட மங்கை, காவியத்தலைவி, இருகோடுகள் மற்றும் கே.பாலச்சந்தரின் முதல் படமான நீர்க்குமிழியின் கதாநாயகி, தொடர்ந்து எதிர்நீச்சல், பாமாவிஜயம், ரஜினியின் அம்மாவாக தில்லு முல்லு, சிறிய வயது கமல்ஹாசனுடன் பார்த்தால் பசி தீரூம் உள்ளிட்ட படங்கள் என 70 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையில் பேர் சொல்லும் பல படங்களில் நடித்துள்ளார். பாலசந்தர் இயக்கத்தில் ஜெமினி கணேசன் நாயகனாக நடித்த காவியத்தலைவி என்கிற சொந்தப்படத்தை தயாரித்து இரு வேடங்களில் நடித்தார் சௌகார் ஜானகி.

1984 ஆம் ஆண்டு எம்ஜிஆர் உடல் நலிவுற்றிருந்தபோது பட்டிதொட்டியெங்கும் ஒலித்த இறைவா உன் மாளிகையில் பாடல் காட்சியில் ஒளி விளக்கு படத்தில் நடித்தவர் சௌகார் ஜானகிதான். அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தேளா, புன்னகை மன்னன் பூவிழி கண்ணன், பார்த்த ஞாபகம் இல்லையோ, மாலைப்பொழுதின் மயக்கத்திலே, ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா, மியாவ் மியாவ் பூனைக்குட்டி, கண்போன போக்கிலே கால் போகலாமா என பிரபலமான சாகாவரம் பெற்று இன்றும் ஒலித்துக்கொண்டிருக்கும் பாடல்களில் நடித்துள்ளார். இவர்

இதை எல்லாம் தாண்டி எல்லா விதமான கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்துள்ள சௌகார் ஜானகி, நகைச்சுவையை மிகச்சாதாரணமாக நடிச்சு போடுவார். எதிர்நீச்சல் தொடங்கி, தில்லு முல்லு வரை அவரது நகைச்சுவை நடிப்பு ரசிகர்களால் வரவேற்கப்பட்டது. உயர்ந்த மனிதனில் உயர்ந்த இடத்தின் பெண்மணியாகவும், இரு கோடுகளில் மாவட்ட ஆட்சியராகவும், ஒளிவிளக்கு படத்தில் விதவை பெண்ணாக எம்ஜிஆரால் காப்பாற்றப்படுபவராகவும், படிக்காத மேதையில் சிவாஜியின் அப்பாவி மனைவியாகவும், எதிர்நீச்சலில் மடிசார் கட்டி நடுத்தர குடும்ப பெண்ணாகவும் நடித்துள்ளார். அவர் நடிக்காத பாத்திரமில்லை எனலாம்.

திரையுலகில் தைரியமாக, எதார்த்தமாக இருந்த நடிகைகள் ஜெயலலிதா உள்ளிட்ட சிலரே. அதில் சௌகார் ஜானகியும் ஒருவர். அவரது நேர்மையான தைரியமான அணுகுமுறை பற்றி திரையுலகில் அனைவரும் இன்றும் பேசுவர். திரையுலகில் தனக்கான காஸ்ட்யூமை சொந்த செலவிலும், கார் பெட்ரோல், உணவு உள்ளிட்டவற்றை சொந்தமாக செலவு செய்த ஒரே நடிகை சௌகார் ஜானகியாகத்தான் இருப்பார் என்கின்றனர் அவருடன் பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்கள்.

சௌகார் ஜானகிக்கு1968 ஆம் ஆண்டே கலைமாமணி விருது அண்ணா கையால் கிடைத்தது. அதன் பின்னர் இருகோடுகள் படத்திற்காக சிறந்த நடிகை விருது பெற்றார். தொடர்ந்து நந்தி விருது என பல விருதுகளை நடிப்புக்காக பெற்றுள்ளார். சினிமா நூற்றாண்டுவிழா சென்னையில் நடைபெற்றபோது அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சௌகார் ஜானகியை கவுரவித்தார்.

இச்சூழலில் அவருக்கு மத்திய அரசின் பத்மஸ்ரீ பட்டம் கிடைத்திருப்பது தாமதமான ஒன்று என்றாலும் அதைப்பற்றி அவர் கூறுகிறபோது , “பல வருஷமா சினிமால இருக்கேன். ஆனால், எப்போவும் எதையும் எதிர்பார்த்து உழைக்கல. இந்திய அளவுல ஆந்திரா, கர்நாடகம்னு நிறைய விருதுகள் வாங்கியிருக்கேன். இருந்தும், எதிர்பாராத நேரத்துல பத்மஶ்ரீ விருது கிடைச்சிருக்குறதை சந்தோஷமா ஏத்துக்குறேன். டெல்லில இருந்து போன் பண்ணி விருது பற்றி சொன்னப்போ ‘ரொம்ப சந்தோஷமா ஏத்துக்குறேன்’னு சொன்னேன். தேசியளவுல கொடுக்குற விருதுக்கு எப்போவும் மதிப்பு உண்டு. தமிழ் சினிமானாலதான் பெரியளவுல புகழ் எனக்கு வந்தது. ரசிகர்கள் கூட்டம் கிடைச்சது. தமிழ் சினிமாவில் நான் ஏற்காத வேடமே இல்ல. ‘இரு கோடுகள்’, ‘உயர்ந்த மனிதன்’ ‘பாமா விஜயம்’, ‘எதிர்நீச்சல்’னு நல்ல கேரக்டர்ஸ் நிறைய பண்ணிட்டேன். தனிப்பட்ட முறையில நிறைய விருதுகள் வாங்கியிருக்கேன்.

இப்போ, பத்மஶ்ரீ விருது கிடைச்சது இன்னும் சந்தோஷம். இதுக்காக தமிழ் சினிமாவுக்கும் ரசிகர்களுக்கும் பெரிய நன்றிகள்.இந்த நேரத்துல என்னுடைய அம்மா மற்றும் தங்கை புஷ்பகுமாரியை மிஸ் பண்றேன். அவங்க இப்போ இல்லனாலும் அவர்களின் ஆத்மா எனக்காக இருக்கும். இதே மாதிரி என்னுடன் வேலைப் பார்த்த பலரையும் மிஸ் பண்றேன். என்னோட கடந்த கால அனுபவங்களை நினைச்சு பார்க்குறேன். 90 வயசு வரைக்கும் நடிச்சிட்டிருக்கேன். ஒரே இடத்துல நிக்குறது வாழ்க்கை இல்ல. அப்படியே நகர்ந்து போறதுதான் வாழ்க்கை.” அப்படீன்னாராக்கும்