இந்த பிரஸ்மீட்டுக்குக் கூட நான் ‘மாரி’ கெட்டப்ல தான் வரலாம்னு நினைச்சேன்! – தனுஷ் பேச்சு முழு விபரம்!

தனுஷ் நடிப்பில் பார்ட் 2-வாக வெளி வர இருக்கும் படம் மாரி 2 இப்படத்தின் முதல் பாகம், எதிர் பார்ப்பில்லாமல் சாதாரண நாளில் வெளிவந்து மிகப்பெரிய ஓப்பனிங்கை பெற்று வசூல் ரீதியாக பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதுவரை இன்றைய தலைமுறையில் இப்படி சாதாரண நாளில் இவ்வளவு பெரிய ஓப்பனிங்கை வேறு எந்த முன்னணி நடிகர்களும் பெற்றது இல்லை. அதற்கு காரணம் தனுஷின் புதுப்பேட்டைக்குப் பிறகு அவர் நடிக்கும் தாதா கதாபாத்திரம் இதுதான் என்பது குறிப்பிடத்தகுந்தது. அந்தப்படத்தில் தனுஷின் கதாபாத்திரத்திற்க்கு இணையாக காஜல் அகர்வால் ஒரு சராசரி பெண்ணாகவே அவ்வளவு இயல்பாக நடித்திருப்பார். இந்நிலையில் தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமாக மாரி 2 வரும் வெள்ளியன்று வெளியீட்டிற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் நடித்திருக்கிறார். தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஏற்கனவே மாரி 2 படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

இதையொட்டி நேற்று பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த தனுஷ், “எனக்கு ‘மாரி’ மாதிரி ஒரு கதா பாத்திரத்தைக் கொடுத்ததுக்கு நன்றி பாலாஜி மோகன். என் வாழ்க்கையிலேயே ‘மாரி’யா இருக்கும் போதுதான் நான் ரொம்ப மகிழ்ச்சியா இருப்பேன். நிஜ வாழ்க்கையில நம்மை நிறைய பேர் சீண்டிக் கிட்டே இருப்பாங்க. நம்மால எதுவும் பண்ண முடியாது. பல்லைக் கடிச்சிக்கிட்டுப் போயாவணும். ஆனால், ‘மாரி’யா இருக்கும்போது, கூப்பிட்டு நாலு தட்டு தட்டலாம். ‘நம்மை யாரு நிஜ வாழ்க்கை யில கடுப்பேத்துனா’னு யோசிச்சு, அந்த ஆளைக் கூப்பிட்டு நாலு தட்டு தட்டணும். அதுக்குத்தான் ‘அடிதாங்கி’னு நமக்கு வினோத் இருக்காரு. என்னைக்கெல்லாம் வினோத்தை அடிக்கிற ஸீன் இருக்கோ, அப்போதெல்லாம் யாரு நம்மைக் கடுப்பேத்துனானு யோசிச்சு, ஆந்த ஆளை மனசுல வச்சுக்கிட்டு இவரை அடிப்பேன். சில சமயம் நிஜமாகவே அடி விழுந்துடும்.

எனவே, ‘மாரி’யா இருந்தா செம ஜாலியா இருக்கலாம். எல்லா கஷ்டங்களையும் வெளில எடுத்து டலாம். அவனுக்கு ரூல்ஸே கிடையாது, அவன் எப்படி வேணும்னாலும் இருக்கலாம். ஸ்டேஜ்னா இப்படித்தான் பேசணும், பிரஸ்மீட்னா ஒருத்தரை ஒருத்தர் புகழ்ந்து பேசணும்னு ரூல்ஸ்லாம் இருக்குல்ல. அதெல்லாம் அவனுக்குக் கிடையாது. என்ன வேணும்னாலும் பேசலாம். ப்ரிவியூ படம் பார்த்துட்டு வெளில வந்து, ‘படம் நல்லா இல்ல’னு சொல்லலாம்.இந்த பிரஸ்மீட்டுக்குக் கூட நான் ‘மாரி’ கெட்டப்ல தான் வரலாம்னு நினைச்சேன். ‘மாரி’யா வந்துருக்கேன்னு சொல்லி, மனசுல உள்ளதை எல்லாம் பேசிடலாம்னு நிஜமாகவே யோசிச்சேன். சும்மாவே கான்ட்ரவர்ஸிக்கு ஸ்பெல்லிங் தனுஷ் தான்னு சொல்றாங்க. எதுக்கு வெறும் வாய்க்கு அவல் கொடுப்பானேனு கடைசி நிமிஷத்துல அந்த ஐடியாவை கேன்சல் பண்ணிட்டேன்.

நான் ‘துள்ளுவதோ இளமை’ நடிச்சுக்கிட்டு இருந்தபோது, செல்வா சாரும், யுவன் சாரும்தான் க்ளோஸ். அப்போதே நான் பிரம்மிச்சுப் பார்க்குற ஸ்டார் யுவன். செல்வா சாரும், யுவன் சாரும் அப்பப்போ வெளியில் போகும்போது, செல்வா சார் என்னைக் கூப்பிட்டு, ‘என் தம்பி, இவனும் சும்மா கூட வரட்டும்’ என்று யுவனிடம் சொல்வார். ‘வரச் சொல்லுய்யா…’ என்று சொல்லி, என்னையும் உடன் அழைத்துச் செல்வார் யுவன். அவரைத் தூரத்தில் இருந்தே பார்த்துப் பயங்கரமாக ரசிப்பேன். ஒரு ஹீரோ லுக்ல இருப்பார்.

‘துள்ளவதோ இளமை’ படம் ஆள் அட்ரஸ் தெரியாத 6 புதுமுகங்களை வச்சு எடுக்குறாங்க. அந்தப் படத்துக்கு அடையாளம் கொடுத்தது அவருடைய இசை தான். அந்த இசை இல்லேன்னா, அந்தப் படத்துக்கு ஓப்பனிங் கிடைச்சுருக்காது. அந்தப் படம் ஓடலைன்னா, நிஜமாகவே நாங்க நடுத் தெருவுல தான் நின்னுருக்கணும். அந்த சூழ்நிலையிலதான் அன்னிக்கு இருந்தோம். யுவனுக்கும், அவருடைய இசைக்கும் நாங்க கடமைப்பட்டிருக்கோம்.

அஸ்திவாரம் தான் இருக்குறதுலயே ஸ்ட்ராங். செல்வராகவன் எப்படி நடிப்புல எனக்கு அஸ்தி வாரமோ, ‘துள்ளுவதோ இளமை’ மற்றும் ‘காதல் கொண்டேன்’ படங்கள் மிகப் பெரிய ஹிட்டாக யுவன் இசை தான் காரணம். அந்த அஸ்திவாரத்தைப் போட்டுக் கொடுத்ததில் யுவன் சாருக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது.

சிலருடைய மனது கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை, இதை நான் சொல்லித்தான் ஆக வேண்டும். கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக எதிர்ப் பக்கம் உள்ள பேர் மாறிக்கொண்டே இருக்கும். ஆனால், இந்தப் பக்கம் யுவன் பேர் மட்டுமே இருக்கும். இதுதான் நிஜம். இதனால் சிலர் மனது வருத்தப் பட்டாலும், அவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

இரண்டு தலைமுறைகளைத் தாண்டி, மூன்றாவது தலைமுறைக்கும் இசையமைக்கிறார். இப்போ, அஜித் சாரோட அடுத்த படத்துக்கு இசையமைக்கப் போகிறார். அந்த செய்தியைப் பார்த்ததும் எனக்கு அவ்வளவு மகிழ்ச்சி. செல்வா சார் என்னை ரெக்கார்டிங்குக்கு கூட்டிக்கிட்டே போக மாட்டார். அவரே தான் உக்கார்ந்து பண்ணுவார். இப்போ எனக்கு யுவன் கூட உக்கார்ந்து ஒர்க் பண்ற ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஒரு ரசிகனாத்தான் அவர்கூட ஒர்க் பண்ணேன். மிக்க மகிழ்ச்சி”

இதுக்கிடையிலே முதன்முதல்ல ‘மாரி’ பண்ணும்போது மிகப்பெரிய சேலஞ்சிங்கா இருந்தது. நான் எந்தப் படத்துக்குமே அவ்வளவு ஹோம் ஒர்க் பண்ணது இல்ல. ‘உங்ககூட ரெண்டு பேர். ரெண்டு பேரையும் அடிச்சிக்கிட்டே இருப்பீங்க. அதுல ஒருத்தர் ரோபோ சங்கர்’னு பாலாஜி மோகன் சொன்னார். ‘அவர் சைஸ் என்ன, என் சைஸ் என்ன… நான் எப்படிங்க அவரை அடிச்சிக்கிட்டே இருக்குறது? திரையில் பார்க்கும்போது அதை ஜனங்க நம்பணும்ல…’னு சொல்லி, ரோபோ சங்கர் வேணாம்னு ஒத்தக்கால்ல நின்னேன். இதுதான் உண்மை. ‘நான் அடிச்சா வாங்குற மாதிரி சைஸ்ல ஒரு ஆள் பாருங்க’னு சொன்னேன். பாலாஜிதான் ரோபோ சங்கர் வேணும்னு விடாப்பிடியாக நின்னார். இவ்வளவு பெரிய உருவத்தை அடிச்சா ஆடியன்ஸுக்கு கன்வின்ஸிங்கா இருக்க வேண்டும் என்பதற்காக, தனியா அதுக்கு ஹோம் ஒர்க் பண்ணேன்.

இப்படி ‘மாரி’யைப் பொறுத்தவரைக்கும் நிறைய சேலஞ்ச் இருந்தது. அந்த கேரக்டர் என்ன பண்ணாலும், அது விதண்டா வாதமாகவே இருக்கும். ஆனாலும், ரசிகர்களுக்குப் பிடிக்கணும். ஆனால், ‘மாரி 2’வில் அப்படி கிடையாது. ஏற்கெனவே ஒரு கேரக்டரை ரெடி பண்ணி வச்சாச்சு, அதுல போய் சரியா உக்காந்துட்டா போதும்.

‘மாரி 2’வைப் பொறுத்தவரைக்கும் என்ன சவால் என்றால், எனக்கு என்ன எமோஷனல் என்றாலும், நான் அழவே மாட்டேன். ஆனால், அந்தப் பக்கம் சாய் பல்லவி ஃப்ரீயா அழுதுகிட்டே இருப்பாங்க. நான் எமோஷனையும் காட்டணும், அழாமல் ஸ்ட்ராங்காகவும் இருக்கணும். இந்த மாதிரி செக் வச்சது கொஞ்சம் சிரமமா இருந்துச்சு.

‘மாரி’ பார்த்த எல்லாருக்கும் ‘மாரி 2’வில் என்ன எதிர்பார்க்கலாம்னு தெரியும். நீங்க எதிர் பார்த் ததைத் தாண்டி கொஞ்சம் விஷயங்கள் இருக்கும்னு ஸ்ட்ராங்கா நம்புறேன். .இளையராஜா அவர்கள் இந்த படத்தில் பாட்டு பாடி இருக்கிறார்.அது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய ஆசிர் வாதம்.யுவன் அவர்களுக்கு நான் ரொம்ப கடமை பட்டு இருக்கிறேன்.அவர் 3 அருமையான பாடல் களை தந்துள்ளார். டோவினோ நடிப்பு பிரமாதம்.சாய் பல்லவி , மற்றும் வரலட்சுமி ஆகியோருடன் முதன் முதலாக நடித்ததில் மகிழ்ச்சி .ரோபோ சங்கர் மற்றும் வினோத் ஆகியோர் உடன் படப் பிடிப்பில் நடித்தது ரொம்ப சந்தோசமாக இருந்தது. படப்பிடிப்பிற்கு சென்றவுடன் முதலில் அவர்களை தான் தேடுவேன் . அனைவருடன் நடித்ததில் ரொம்ப மகிழ்ச்சி . இந்தப் படம் வெற்றிப் படமாக இருக்கும் என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கு. அது, ‘மாரி’ மூன்றாம் பாகத்தைத் தீர்மானிக்கும். படம் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. அனைவரும் திரையில் கண்டு பாருங்கள்.” என்றார்.