தமிழ் சினிமாவின் தற்போதைய மாஸ் ஹீரோக்களுக்கு அந்த உயரத்தை அடைய அஸ்திவாரம் அமைத்துக் கொடுத்ததில் இந்த இசையமைப்பாளருக்கும் பெரிய பங்குண்டு. ஆட்டம் போட வைக்கும் ஓப்பனிங் பாடல், `அட’ போட வைக்கும் பின்னணி இசை, தேன் சொட்டும் காதல் பாடல்கள், கண்ணீர் கொட்டும் சென்டிமென்ட் பாடல்கள் என முழுமையான பங்களிப்பை அவர் கொடுத்துக் கொண்டிருந்தார். ஆம்.. ரஜினிக்கு சந்திரமுகி ,கமலுக்கு அன்பே சிவம் , அஜித்திற்கு பூவெல்லாம் உன் வாசம் ,விக்ரமுக்கு தூள்,தில் ,மாதவனுக்கு ரன், விஜய்-க்கு கில்லி, தனுஷூக்கு சுள்ளான் என அவர்களின் கேரியரில் பெஸ்ட் என்று சொல்லப்படும் ஆல்பத்தைக் கொடுத்தவர்தான் இசையமைப்பாளர் வித்யாசாகர்! 90’ஸ் கிட்ஸ்களின் ப்ளேலிஸ்ட்டில் கட்டாயம் கால் பங்கு இடத்தை வித்யாசாகரின் பாடல்கள் நிரப்பி யிருக்கும். தங்கள் ஆதர்ச நாயகர்களை, நாயகிகளை வித்யாசாகரின் இசை பின்னணியில் ஒலிக்க, காணப்பெற்றவர்கள் நிச்சயம் பாக்கியவான்களே. ஆனால் `வா வா என் தேவதையே’, `ஆராரோ ஆரிரரோ’ என 2K கிட்ஸ்களைத் தாலாட்டி உறக்கத்தில் ஆழ்த்திய காரணமோ என்னவோ, இன்றும் பல 2K கிட்களுக்கு அவர் முகம் அறியாது.
வித்யாசாகர் இசையமைத்தப் பாடல்களைக் திரும்பக் கேட்டுப்பாருங்கள், உங்களைத் தூங்க வைத்த தாலாட்டுகள் மட்டுமல்ல, குத்தாட்டம் போடவைத்த குத்துப் பாடல்களும் அவருடையதுதான்! வித்யாசாகர் இசையமைத்த பாடல்கள் மட்டுமல்ல, அவரும் ஒரு குறிஞ்சிப்பூதான்! உண்மைதானே. எப்பொழுதுமே ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் இருக்கும் ரோஜா செடி அதிகம் கவனிக்கப் படாமல் போகும் வாய்ப்பு அதிகம் அது மாதிரிதான் இசைத்துறையில் ராஜா ,ரகுமான் என்ற இரு பெரும் ஆலமரத்தடியில் மெல்லிய பூச்செடியா இருந்தவர் வித்யாசாகர் …!
இந்த வித்யாசாகருக்கும் இசை சொல்லிக்கொடுத்தவர் தன்ராஜ் மாஸ்டர்.அவரிடம் கற்றுக் கொண்ட பின் ராஜா சாரிடம் இசை கோர்க்கும் வேலைக்கு சேருகிறார். இளையராஜா இசையமைத்த ’16 வயதினிலே’ படத்தில் இருந்து அவரிடம் பணியாற்றத் துவங்குகிறார் வித்யாசாகர். ராஜாவிடம் வேலை செய்யும்போது அவரின் வயது பன்னிரெண்டு …!
80-களின் இறுதியில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆன போது அவரின் பாடல்கள் ராஜாவின் சாயலில் இருப்பதாக பெரிதும் விமர்சிக்கப்பட்டது ஆனால் அது அவருக்கு கிடைத்த பெரிய அங்கீகாரமாக தான் எனக்கு தெரிகிறது . 90 ல் இருந்து 94 வரை தெலுங்கு திரை உலகத்திற்கு ஒதுங்கிய வித்யாசாகர் நாலு வருடத்தில் இசையமைத்த படங்கள் சுமார் 39 …! அப்போதுதான் மறுபடியும் தமிழில் ஜெய்ஹிந்த் பட வாய்ப்பு , 1994-ல் அர்ஜூன் நடிப்பில் வெளிவந்த ‘ஜெய்ஹிந்த்’ திரைப்படம்தான் தமிழில் இவருக்கு விசிட்டிங் கார்டாக அமைந்தது. ‘தாயின் மணிக்கொடி’, ‘ கண்ணா என் சேலைக்குள்ள ‘, ‘முத்தம் தர ஏத்த இடம்’ போன்ற பாடல்களால் மொத்த ஆல்பமும் ஹிட் , தமிழ் திரை உலகத்தில் வித்யாசாகர் என்ற பெயர் எங்கும் பரவியது …!
ரகுமானின் புகழ்பெற்ற மெலோடிகளுக்கு நடுவே இவரின் இசையில் எஸ்.பி.பி, ஜானகி பாடிய மலரே மௌனமா பாட்டு கேட்போரை மெய் மறக்க செய்தது …! பல்லவி தொடங்கும் முன் வரும் புல்லாங்குழல் இசை, குருவிச் சத்தம் எனப் பாட்டுக்கு நம்மைத் தயார் செய்துவிட்டு எஸ்.பி.பி குரலில் அந்த முதல் வரி… `மலரே… மெளனமா’ வரும்போது ப்ப்பா இந்த நொடி கேட்டால் கூட புல்லரிக்க வைக்கும் ஒரு பாட்டு …!
சண்டைக்காட்சிக்கு ரகளையான ஒரு பாடல் என்ற பாணிக்கு அச்சாரம் போட்டது தரணியும் வித்யாசாகரும்தான். `மதுரை வீரன்தானே’ என கணீர் குரலில், நமக்குள் இருக்கும் வீரனை உசுப்பிவிட்டார் பரவை முனியம்மா. அவர் குரலும், அதன் இசையும் அது படமாக்கபட்ட விதமும், நினைக்கும்போது சிலிர்க்கிறது!
அப்பேர்ப்பட்ட இசை ஜாம்பவானுக்கு ஹேப்பி பர்த் டே சொல்வதில் சினிமா பிரஸ் கிளப் டாட் காம் மகிழ்ச்சிக் கொள்கிறது