இந்திய சினிமாவில் பல மொழிகளில் நடித்து மாநில எல்லைகளைக் கடந்து புகழ்பெற்று சிறந்த நடிப்புக்கான பல விருதுகளை வென்று மொழி எல்லைகளுக்கு அப்பாற்பட்டு சினிமா ரசிகர்கள் அனைவரின் நன்மதிப்பைப் பெற்றுள்ள நடிகர் மட்டுமில்லாமல் இயக்குநர், தொலைக்காட்சி தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட பிரகாஷ்ராஜ் இன்று (மார்ச் 24) தன்னுடைய 59ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.
கர்நாடகாவில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து, கன்னடத்தில் சிறு வேடங்களில் நடித்து தனது நடிப்பு பயணத்தை ஆரம்பித்தவருக்கு சரியான தொடக்கமாக அமைந்தது கே.பாலச் சந்தரின் டூயட். அதில் இவர் நடிப்பு முதல் முறையாக தமிழ் மக்களால் கவனிக்கப் பட்டது. இதற்கு பிறகு பிரகாஷ் ராஜை மேலும் பிரபலமாக்கியது .மணி ரத்னத்தின் இருவர். இருவர் படத்தில் பிரகாஷ் ராஜ் காட்டிய நடிப்பு அவ்வளவு சாதரணமானதல்ல. அதுவும் தனது ஆரம்பக்கால நடிப்பில் இருக்கும் ஒரு நடிகனுக்கு, மிகப்பெரிய பேச்சாளரான ஒரு அரசியல் வாதியின் கதாபாத்திரம் என்பது எத்தனை சவாலானது. அதிலும் படத்தில் பல கவிதைகளையும், உணர்ச்சி பொங்கும் வசனங்களையும் பிரகாஷ் ராஜ் மிக நேர்த்தியாக கையாண்டிருப்பார். அப்போதே தான் ஒரு தேர்ந்த நடிகராக உருவெடுக்க போகிறோம் என அவர் விதை போட்டு விட்டார். சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றார்.
90களின் பிற்பகுதியில் நான்கு மொழிகளிலும் தொடர்ந்து நேர்மறை கதாபாத்திரம், எதிர்மறை கதாபாத்திரம், கெளரவத் தோற்றம் எனப் பல்வேறு வகையான நடிப்புகளை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனங்களில் இடம்பிடிக்கத் தொடங்கினார் பிரகாஷ்ராஜ்.அடுத்து பிரகாஷ்ராஜ் நடிப்பில் மிக முக்கியமான திரைப்படம் தெலுங்கில் உருவான அந்தபுரம். இதில் பிரகாஷ் ராஜ் வயதான ஒரு அப்பாவாக நடித்திருப்பார். வன்முறையும் கோபமும் கொண்ட ஒரு அசல் கிராமத்துவாசியாக அவர் திரையில் காட்டிய நடிப்பு அசுரத்தனமானது. அதுவே அவருக்கு இன்னுமொரு தேசிய விருதையும் அள்ளி வந்தது. அதே போல அஜித்தின் ஆசை படத்திலும் பிரகாஷ்ராஜ் தனது நடிப்பில் மிரட்டியிருப்பார். தனது மனைவியின் தங்கை மேல் ஆசைப்படும் அரக்கனை மிக கூலாக ஹேன்டில் செய்திருப்பார் பிரகாஷ்ராஜ்.
அப்பு படத்தில் பெண் வேடமிட்டு மகாராணியாக கலக்கினால், லிட்டில் ஜானில் கடுந்தவம் கொண்ட வில்லனாய் அசத்துவார். அதுதான் பிரகாஷ்ராஜின் ஸ்பெஷாலிட்டியே. இப்படி இருந்த பிரகாஷ்ராஜின் க்ராஃபை இன்னும் பீக்கில் போகச் செய்த படம்தான் கில்லி. முத்துப் பாண்டியிடம் இருந்து தனலட்சுமி காப்பற்றப்பட்டதற்கு ஒட்டுமொத்த தமிழகமே சந்தோஷப் பட்டது. அந்தளக்கு தனது வில்லத்தனத்தால் மிரட்டினார் பிரகாஷ்ராஜ். இப்போதும் கூட பிரகாஷ்ராஜின் முகத்தை பார்த்தால், பின்னணியில் ஹாய் செல்லம் என அவரது கணீர் குரல் எழுந்தால் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அந்தளவுக்கு முத்துப்பாண்டி கதாபாத்திரத்தில் மூழ்கியிருப்பார் பிரகாஷ்ராஜ்.
வில்லன் என்பவன் படம் நெடுக ஏய்.. நான் யார் தெரியுமா என கத்திக்கொண்டு இருக்காமல், வேறு வெர்ஷனிலும் இருக்கலாம் என பிரகாஷ்ராஜ் காட்டியது வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்தின் மூலம். அத்திரைப்படத்தில் கமலுக்கு இணையான நடிப்பை பிரகாஷ் ராஜ் அலட்டல் இல்லாமல் செய்திருப்பார். குறிப்பாக இருவரின் காம்பினேஷனில் வரும் காட்சிகள் யாவும், நடிப்பின் உச்சம். என்னதான் படம் நெடுக சிரித்து சிரித்து கூல் செய்து கொண்டிருந்தாலும், க்ளைமாக்ஸில் தனது அசல் வில்லத்தனத்தை காட்டும் ஸ்டைல் தான் பிரகாஷ்ராஜின் தனித்துவம். தனது வில்லன் ஷேடை கொஞ்சம் குறைத்து, பிரகாஷ்ராஜ் செய்த படம்தான் அறிந்தும் அறியாமலும். கோபத்தையும் பாசத்தையும் ஒருசேர கொண்ட ஒரு அப்பாவாக தனது குணச்சித்திர நடிப்பில் கலக்கியிருப்பார் மனுஷன்.
அதே போலதான் அந்நியன் திரைப்படமும். இன்வெஸ்டிகேட்டிங் ஆபீசராக பிரகாஷ்ராஜ் நடிப்பில் அசத்தியிருப்பார். குறிப்பாக தன் அண்ணன் இறந்த காட்சியில் அவர் காட்டியிருக்கும் Subtle-ஆன நடிப்பை எப்போது வேண்டுமானாலும் ரசிக்கலாம். சிவகாசி, பரமசிவன், போக்கிரி, திருவிளையாடல் ஆரம்பம் என ஒவ்வொரு படத்துக்கும் சம்பந்தமில்லாமல் வில்லத்தனம் காட்டி கலக்க பிரகாஷ்ராஜால் மட்டுமே முடியும்.. (சினிமா பிரஸ் கிளப்-கட்டிங் கண்ணையா)
தொடர்ந்து வில்லனாக நடித்து வந்தபோதிலும் கே.பாக்யராஜ் இயக்கத்தில் விஜயகாந்துடன் ‘சொக்கத் தங்கம்’, ராதாமோகனின் அறிமுகப் படமான ‘அழகிய தீயே’, ‘பொன்னியின் செல்வன்’, ‘பீமா’, ‘அறை எண் 305இல் கடவுள்’ உள்பட பல படங்களில் பாசிடிவ்வான கதாபாத்திரங்களிலும் பெரிதும் ரசிக்க வைத்தார். நேர்மறை, எதிர்மறை என்னும் இருமைக்கு அப்பாற்பட்ட நிறைகளும் குறைகளும் நிரம்பிய நாம் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களை நினைவுபடுத்தும் கதா பாத்திரங்களில் வெகு இயல்பாகப் பொருந்திச் சிறப்பாக நடித்திருக்கிறார் பிரகாஷ்ராஜ்
ஒரு நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் எனப் பல மொழிகளில் தன் பன்முகத் திறன்களால் முக்கியமான பங்களிப்புகளைச் செலுத்திவரும் பிரகாஷ்ராஜ் ஒரு தனிநபராகவும் சமூகத்தின் மீது உண்மையான அக்கறையுடனும் வன்முறைக்கு எதிரான துணிச்சலுடன் செயல்பட்டு வருகிறார்.
பெங்களூரில் பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் மதவாத வன்முறையாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு மதவாத வன்முறைக்கு எதிராக ட்விட்டரில் மட்டுமல்லாமல் ஊடக சந்திப்புகள் தேர்தல் அரசியல் எனப் பல வகைகளில் செயல்பட்டு வருகிறார். அரசியலில் ஊடுருவியுள்ள மதவாத சித்தாந்தத்தை எதிர்க்கும் விதமாக 2019 மக்களவைத் தேர்தலில் பெங்களூரு தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் தோல்வியடைந்தாலும் துவண்டு விடாமல் தொடர்ந்து சமூக, அரசியல் பிரச்சினைகள் சார்ந்து அரசையும் ஆளும் வர்க்கத்தையும் எதிர்த்துப் பல தளங்களில் குரல் எழுப்பிவருகிறார்.
திறமை, கலை மீதான மதிப்பு, இளம் திறமையாளருக்கு வாய்ப்பளித்து வழிகாட்டும் பெருந்தன்மை, சமூக அக்கறை, 2019 மக்களவைத் தேர்தலில் பெங்களூரு தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வி அடைந்தாலும் தொடர்ச்சியாக அதிகாரத்தை நோக்கி கேள்வி எழுப்பும் துணிச்சல், சுயமரியாதை என ஒரு முழுமையான கலைஞனாக வாழும் பிரகாஷ்ராஜ் அவர் இயங்கும் அனைத்துத் தளங்களிலும் மேலும் பல வெற்றிகளைக் குவிக்க வேண்டும், சாதனைகளை நிகழ்த்த வேண்டும் என்று சினிமா பிரஸ் கிளப் சார்பில் மனதார வாழ்த்துவோம்.