கோலிவுட் அப்பா கே.பாலசந்தர் பர்த் டே!

கோலிவுட்டில் ஒரு டைரக்டராக, படைப்பாளியாக, தயாரிப்பாளராக, நடிகராக, கலைஞனாக திறமைகளைத் தேடிக் கண்டுபிடித்து வாய்ப்புகளைக் கொடுப்பவராக பலரது வழிகாட்டியாக, ஆசானாக, தந்தையாக, ரசிகராக விளங்கிய பாலசந்தரைப் பற்றி பல நூறு பக்கங்கள் எழுதப்பட்டுவிட்டன. இன்னும் எழுதப்பட பல்லாயிரம் பக்கங்கள் எஞ்சியுள்ளன… இன்றைய ஒரே நாளில் ஒரு கட்டுரைக்குள் அவருடைய மொத்த சிறப்புகளையும் உள்ளடக்கி அவருடைய ஆளுமைச் சித்திரத்தை வடித்துவிட முடியாது..

செயலில் ஒழுக்‍கம், கட்டுப்பாடு, நேரம் தவறாமை, நூறு சதவீதம் தயார் நிலை, ஒருமுகப்பட்ட கவனம். இதுதான் கே.பி. என்று அழைக்‍கப்படும் கே.பாலசந்தர்.

நாடகங்கள் நடத்திக்‍கொண்டு சினிமா தாகத்தில் தவித்துக்‍ கொண்டிருந்த பாலசந்தருக்‍கு முன்பணம் கொடுத்து முதன் முதலாகத் திரைத்துறைக்‍கு அறிமுகப் படுத்தியவர் இராம. வீரப்பன். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., அபிநய சரஸ்வதி சரோஜாதேவி இணைந்து நடித்த ‘தெய்வத்தாய்’ என்ற திரைப்படத்திற்கு வசனகர்த்தாவாக வரப்பெற்றார், வரம்பெற்றார். எம்.ஜி.ஆர். என்ற மிகப்பெரிய மக்கள் சக்தியின் ஃபார்முலா பாதிக்கப்படாமல், ஆனால் அதேசமயம் தன் அறிவின் அகலத்தையும் குறைத்துக்கொள்ளாமல், வசனங்களைத் தீட்டினார் பாலசந்தர். படம் வெற்றி பெற்றது. தமிழ்த் திரையுலகம் சிறந்த வசனகர்த்தாவைப் பெற்றுக்கொண்டது. பின்னாளில் தலைசிறந்த இயக்குநராக கம்பீரமாக வலம்வர “தெய்வத்தாய்” ஆசிர்வாதம் அளித்தார்.

பின்னாளில் புதுமை என்றாலே அவருடைய பெயர் நினைவுக்கு வரும் அளவுக்கு கதைகளில். திரைக்கதைகளில், வசனங்களில், காட்சிகளில், கதாபாத்திர வடிவமைப்பில், படமாக்கலில், சொல்ல வருவதைப் பார்வையாளருக்குத் தெரிவிக்கும் (convey) விதத்தில், நடிகர்கள், கலைஞர் தேர்வில் என அனைத்து அம்சங்களிலும் பல புதுமைகளை நிகழ்த்தியவர் பாலசந்தர். 65க்கும் மேற்பட்ட நடிகர்களை கலைஞர்களை தன் படங்கள் மூலமாக அறிமுகப்படுத்தியவர் கே.பி.என்பது தமிழ் சினிமாவைப் பின்பற்றும் அனைவருக்கும் தெரியும்.

முதல் வசனம் நல்ல வார்த்தைகளில் வரவேண்டும். படத்தின் பெயர் 8 எழுத்துகளில் வந்துவிடக்‍கூடாது என சகுனங்களுக்‍கு சல்யூட் அடிக்‍கிற சினிமா உலகில், தான் முதன்முதலாக இயக்‍கிய படத்திற்கு கே.பி. வைத்த பெயர் ‘நீர்க்குமிழி’. அதில் தொடங்கிய அவரது திரையுலக வாழ்வு, நாளடைவில் நயாகரா நீர்வீழ்ச்சியாய் பலரையும் பரபரப்பாக பார்க்‍க வைத்தது. கலையுலகில் கற்பனை வறட்சியாளர்கள் ஒருசிலர் வலம் வந்த காலத்தில், கம்பீரப் புரட்சியாளராகத் திகழ்ந்தார் பாலசந்தர்.

பாலசந்தர் படங்களின் நாயகிகள் எல்லோரும் புத்திசாலிகள், சுமைதாங்கிகள், சோகம்தாங்கிகள். ஆனால், சூழ்நிலையை வென்றெடுக்கும் போராளிகள் என்பதை சகலரும் உணரும்படி செய்தவரவர். அதாவது, பெண்களை இழிவுபடுத்தாமல், கொச்சைப்படுத்தாமல், ஆபாச பிண்டங்களாய் புரட்டி எடுக்காமல், அவர்களுக்கும் இதயம் இருக்கிறது, உணர்ச்சி இருக்கிறது, வாழ்க்கைக்கான தேடல் இருக்கிறது, தமக்கு இழைக்கப்படும் கொடுமைகளை எதிர்த்து நிற்கும் போர்க்குணம் இருக்கிறது என்பதை பல படங்களில் எடுத்துக் காட்டியவர்.. குறிப்பாக நிறைய பெண்களின் பிரச்சனைகளை அடிப்படையாக வைத்து படம் எடுத்தவரும், காதலை வகை வகையாய் காட்டியவரும், அந்த காதலை வெளிப்படுத்த ஏராளமான உத்திகளை கையாண்டவரும் பாலசந்தர்தான். தான் வாழும் காலம் வரை திருவள்ளுவரையும், பாரதியையும் ரசிகர்களுக்கு நினைவூட்டி கொண்டேயிருந்தவரும் இவரேதான்.

அத்துடன் எண்ணற்ற இளம் கலைஞர்களையும், டெக்னிக்கல் கலைஞர்களையும் உருவாக்கியவர் பாலசந்தர் என்பதை மறுக்க முடியாது.. உணர்ச்சிக்குவியலுடன், வாழ்வியல் போராட்டத்தையும் அப்பட்டமாக வெளிக்காட்டியவர் பாலச்சந்தர்.. உறவு சிக்கலையும், உளவியல் சிக்கலையும் கேரக்டர்களில் கொண்டு வந்து கொட்டி, ரசிகர்களை கிறுகிறுத்து விழ செய்தவர் இந்த பாலசந்தர்.சமுதாயத்தை கூர்மையாக்கி, நேராக்கவும், மனிதகுலத்தை ஒழுங்குப்படுத்தி சீர்படுத்தும் கருவியாக, சினிமாவையும் பயன்படுத்த முடியும் என்பதை நடைமுறையில் நிரூபித்து காட்டியவர் பாலசந்தர்.. புதிய தலைமுறையினருக்கு புத்தொளியாகவும், ஆதர்ச சக்தியாகவும் திகழ்ந்தவர் பாலசந்தர்..!

தோட்டக் கலையில் ஆர்வமிக்கவர். யார் உதவியையும் எதிர்பார்க்காமல், வீட்டையும் தோட்டத்தையும் தானே பெருக்கிச் சுத்தமாக வைத்துக் கொள்ள விரும்புவார்! இவரது படங்களில் மலையருவியும் கடற்கரையும் நிச்சயம் இடம்பெறும் லொக்கேஷன்கள்! அச்சமில்லை அச்சமில்லை’ படத்தில் நடிகர்களின் பெயர்ப் பட்டியலில் மலையருவியின் பெயரையும் சேர்த்தவர்!

இவர் இயக்கத்தில், ஓடிய படங்கள், ஓடாத படங்கள் என்றிருக்கலாம். நல்லபடம், சரியில்லாத படம் என்றிருக்காது. எந்தப் படமாக இருந்தாலும், அதில் ‘பாலசந்தர் படம்’ என்று சொல்லுவதற்கான விஷயங்களை ஆங்காங்கே தூவியிருப்பார். அதை இன்றைக்கும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். இது கே.பி.படம் என்று திரையரங்குகளை நோக்கி சென்றவர்கள் பலர் உண்டு அக்காலத்தில். அவர்களை கே.பாலச்சந்தர் ஒருபோதும் ஏமாற்றியதுமில்லை.

திரையில் கொடிகட்டிப் பறந்த இவர், தொலைக்காட்சிகள் வீடுகளை ஆக்ரமித்துக்கொள்ள அதிலும் கால்பதித்து வெற்றிகண்டவர். 1990ல் சென்னை தொலைக்காட்சியில் இவர் இயக்கிய “இரயில் சினேகம்” தொடர் பிரசித்தம். அண்ணி, ரகுவம்சம், கையளவு மனசு இவருடைய மேற்பார்வையில் இயக்கிய பரப்பரபான தொடர்களாகும்.

தெலுங்கில் ஹிட் அடித்த ‘மரோ சரித்ரா’வை ஹிந்தியில் ‘ ஏக் து ஜே கேலியே’வாக ரீமேக் செய்கிறார். படம் அதிரிபுதிரி ஹிட். பாடல்கள், பாலிவுட் மட்டுமின்றி அனைத்து மாநிலங்களிலும் ஒலிக்க, படம் மெகா வசூல். அந்தப் படத்தின் இறுதிக் காட்சி நாயகனும், நாயகியும் மேலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வதாக இருக்கும். ’காதலில் ஜெயிக்க முடியாதவர்கள் உயிரைக்கூட அந்தக் காதலுக்காக விடுவார்கள்’ என்ற வாய்ஸ் ஓவரும் வரும்.

பல காதல் தற்கொலைகளைப் பற்றிக் கேள்விப்பட்டு, இப்படி ஒரு படமும் அதற்கு காரணமாக இருந்தது என்ற வேதனை கே.பாலசந்தருக்கு இருந்தது. அதற்காகவே ஒரு கதை எழுதி, இயக்கினார். அதுதான் ‘புன்னகை மன்னன்’. ’ஏக் துஜே கேலியே’வின் இறுதிக்காட்சி போன்ற அதே அமைப்பில்தான், ’புன்னகை மன்னன்’ ஆரம்பிக்கும். தற்கொலை முடிவல்ல என்ற கருத்தைச் சொல்லும். ‘ஏக் துஜே கேலியே’ வெற்றி என்றாலும், அந்தக் கருத்தை மக்களிடம் சொல்லியிருக்கக்கூடாது என்ற மனச்சுமையை ’புன்னகை மன்னன்’ மூலம் இறக்கி வைத்தார் கே.பாலசந்தர். அந்த மனம் தான்.. அந்த நேர்மைதான் கே.பி!

இன்று மட்டும் அவர் உயிருடன் இருந்திருந்தால் ரஜினி, கமல் தொடங்கி பிரகாஷ்ராஜ் வரை அத்தனை நடிகர்களும் இயக்குனர்களும் அவர் வீட்டில் தான் இருந்திருப்பார்கள்..அந்த கோலிவுட் அப்பாவுக்கு ஹேப்பி பர்த் டே