ரஜினி, புகழின் சிகரத்தை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்த நேரம். அவருக்கு பெண் ரசிகைகள் ஏராளம். அவருடைய ஸ்டைலில் மனதைப் பறிகொடுத்த பெண்கள் – குறிப்பாக கல்லூரி மாணவிகள், அவருக்கு காதல் கடிதங்கள் எழுதுவார்கள். தினம் தினம் இப்படி நூற்றுக்கணக்கான கடிதங்கள் வந்து குவியும். ரஜினியுடன் நடித்த நடிகைகள் சிலரும், ரஜினியை மணக்க விரும்பினர். ஆனால், ரஜினியின் மனதில் காதல் மலரவில்லை. அவர் மனதை எந்தப் பெண்ணும் கவரவில்லை. ரஜினி 30-வது வயதில் அடியெடுத்து வைத்தபோது, மன்மதனின் மலர்க்கணை அவர் மீது பாய்ந்தது!
ஆம்.. 1980-ம் ஆண்டு மத்தியில், கே.பாலசந்தர் இயக்கத்தில் கலாகேந்திரா நிறுவனத்தின் “தில்லுமுல்லு” படம் உருவாகிக் கொண்டிருந்தது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு, நடிகை சவுகார் ஜானகியின் வீட்டில் நடந்து கொண்டிருந்தபோது, எத்திராஜ் கல்லூரி மாணவிகள் சிலர் அங்கு வந்தனர். அவர்களில் லதாவும் ஒருவர். கல்லூரியின் சிறப்பிதழுக்கு பேட்டி காண வந்திருப்பதாக ரஜினியிடம் கூறினார். பேட்டிக்கு ரஜினி சம்மதித்தார்.
லதா தமிழிலும், ஆங்கிலத்திலும் சரமாரியாகக் கேள்விகள் கேட்டார். அவற்றுக் கெல்லாம் சளைக்காமல் தன் பாணியில் பதில் சொன்னார் ரஜினி. லதாவின் அழகும், புத்திசாலித்தனமும் ரஜினியைக் கவர்ந்தன. அந்த நிமிடமே ரஜினியின் இதயத்தில் லதா குடியேறிவிட்டார்.
அச்சமயம் “உங்கள் திருமணம் எப்போது?” என்று லதா கேட்க, “குடும்பப் பாங்கான பெண் கிடைக்கும்போது என் திருமணம் நடைபெறும்” என்று ரஜினி பதில் அளித்தார்.
“விளக்கமாக சொல்லுங்கள்” என்று லதா கேட்க, “உங்களை மாதிரி பெண் கிடைத்தால், நான் திருமணம் செய்து கொள்வேன்” என்று ரஜினி பதிலளித்தார். அதாவது, தன் காதலை மறைமுகமாக வெளிப்படுத்தினார்.
தொடர்ந்து லதா குறித்து விசாரித்த போது அவர் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மனைவியின் தங்கைதான் என்று தெரிய வந்தது.
முன்னரே மகேந்திரனும், ரஜினியும் நண்பர்கள். எனவே, லதாவை பார்த்ததற்கு மறுநாள், மகேந்திரனை அழைத்து “நான் லதாவை மணந்து கொள்ள விரும்புகிறேன்” என்று ரஜினி கூறினார். ரஜினி யாரைக் குறிப்பிடுகிறார் என்பது, மகேந்திரனுக்கு சட்டென்று புரியவில்லை. எம்.ஜி.ஆருடன் படங்களில் நடித்து வரும் லதாவைக் குறிப்பிடுகிறாரோ என்று நினைத்தார்.”என்னப்பா! லதா, உனக்கு சீனியர் நடிகை. எம்.ஜி.ஆரோடு எல்லாம் நடித்தவர். அவரையா நீ காதலிக்கிறாய்?” என்று கேட்டார்.
“நான் கூறுவது நடிகை லதாவை அல்ல. உன் மைத்துனி லதாவைத்தான் கூறுகிறேன்” என்றார், ரஜினி.
ஒரு நிமிடம் திகைத்து நின்ற மகேந்திரன், “சரி. இதுபற்றி என் குடும்பத்தாருடன் பேசுகிறேன். நல்லது நடக்கும்” என்றார்.
லதாவை ரஜினி மணக்க விரும்புவதை, தன் மனைவியிடமும், குடும்பத்து பெரியவர்களிடமும் மகேந்திரன் தெரிவித்தார். எல்லோருக்கும் மிகுந்த மகிழ்ச்சி. லதாவும் சம்மதம் தெரிவித்தார். ஆனாலும், இதை ரகசியமாக வைத்திருந்தார்கள்.
இந்த நிலையில், ரஜினிகாந்துக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது என்ற செய்தியை “தினத்தந்தி” வெளியிட்டு விட்டது. மணமகள் லதா என்பதையும் செய்தியில் குறிப்பிட்டு இருந்தது. இச்செய்தி, தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. “இது உண்மையா?” என்று கேட்டு ரஜினிக்கு ஏராளமான போன்கள் வந்தன. கடிதங்கள் குவிந்தன. திரை உலகில் இதுபற்றித்தான் பேச்சு.
ரஜினி எதுவும் பேசாமல் மவுனம் காத்தார்.
சில மாதங்கள் கடந்த நிலையில் 1981 பிப்ரவரி 25-ந்தேதி மாலை 4 மணிக்கு, நிருபர்களை திடீரென்று ரஜினி அழைத்தார். சில நிமிடங்களுக்கெல்லாம் நிருபர்கள் பெருந்திரளாகக் கூடிவிட்டனர்.
நிருபர்களிடம் அவர், “7 மாதங்களுக்கு முன்பே, ரஜினிகாந்த் – லதா திருமணம் என்ற செய்தியை வெளியிட்ட ஒரே பத்திரிகை “தினத்தந்தி”தான்.ரகசியமாக இருக்க வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்திருந்த இந்தச் செய்தியை, “தினத்தந்தி” வெளியிட்டது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. அந்தச் செய்தி “தினத்தந்தி”யில் வெளிவந்ததும், லட்சக்கணக்கான எனது ரசிகர்களிடம் இருந்து பல கடிதங்கள் வந்தன. பட அதிபர்களும், நடிகர்களும் `போன்’ செய்து, “இது உண்மையா என்று கேட்டார்கள். சற்று பொறுத்திருக்கும்படி கூறினேன்.அந்தச் செய்தி இன்று உண்மையாகி, எல்லோரும் பாராட்டும் விதமாக அமைந்தது பற்றி பெருமைப்படுகிறேன்.”
இவ்வாறு கூறிய ரஜினிகாந்த், அங்கிருந்த தினத்தந்தி நிருபருடன் கை குலுக்கினார்.
தொடர்ந்து அவர் பேசும் போது, “லதாவுடன் எனது காதல் கனிந்து, கடவுள் அருளால் திருமணம் நடைபெறுகிறது. இது எப்படி என்பது பற்றி, என் அன்பு ரசிகர்களுக்கு சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். வாழ்க்கையின் இன்ப – துன்பங்களை உணர்ந்தவன் மட்டுமல்ல; அனுபவித்து அறிந்தவன் நான். முதுகில் தழும்பேற மூட்டை சுமந்து, `மில்லி’ அடித்து, வாழ்க்கையின் மேடு – பள்ளங்கள் அனைத்தையும் உணர்ந்து இந்த நிலைக்கு வந்திருக்கிறேன்.
என் வாழ்க்கையில் பெரும் திருப்பம் நிகழ்ந்தது, பிரபல நடிகை சவுகார் ஜானகியின் வீட்டில்தான்.
7 மாதங்களுக்கு முன் அங்கு, டைரக்டர் பாலசந்தர் சாரின் “தில்லு முல்லு” படத்தின் படப்பிடிப்பு நடந்தது. அதில் நான் நடித்துக் கொண்டிருந்தேன். பகல் ஒரு மணி இருக்கும். எத்திராஜ் கல்லூரி மாணவிகள் சிலர் வந்தனர். அவர்களில், என் முன்னால் வந்து, தன்னை அறிமுகம் செய்து கொண்டவர் லதா.
“மிஸ்டர் ரஜினி! நான் கல்லூரி மாணவி. எங்கள் கல்லூரியின் சிறப்பு இதழுக்கு, உங்களை பேட்டி காண வந்திருக்கிறேன். சம்மதமா?” என்று கேட்டார். நான் சம்மதித்தேன்.
பேட்டி தொடர்ந்தது. சுவையான, அறிவுபூர்வமான கேள்விகள் பலவற்றை லதா கேட்க கேட்க, நானும் என் பாணியில் பதில் சொல்லிக் கொண்டிருந்தேன்.
லதா திடீரென்று “மிஸ்டர் ரஜினிகாந்த்! உங்கள் திருமணம் எப்போது?” என்று கேட்டார்.
“குடும்பப் பாங்கான பெண் எப்போது கிடைக்கிறாளோ, அப்போதுதான் திருமணம்” என்று பதிலளித்தேன், லதா மீது கண்களைப் பதித்தபடி.
“இப்படிச் சொன்னால் எப்படி! விளக்கமாகச் சொல்லுங்கள்!” என்றார், லதா.
“உதாரணத்துக்கு ஒன்று சொல்கிறேன். உங்களை மாதிரி ஒரு பெண் கிடைத்தால் நான் கல்யாணம் செய்து கொள்வேன்” என்றேன்.
நாணத்தால் லதாவின் முகம் சிவந்து விட்டது. என் வாழ்க்கையில் ஒளிவு – மறைவு இல்லை. உண்மை பேசி வாழ விரும்புகிறேன். என் மனமார, எவருக்கும் துரோகம் செய்யமாட்டேன். அதனால்தான் மனம் திறந்து, “என்னைத் திருமணம் செய்து கொள்ள விருப்பமா?” என்று லதாவிடம் கேட்டேன். தொடர்ந்து, இதுபற்றி ஒய்.ஜி.மகேந்திரனிடம் பேசினேன்.
லதாவிடமும், லதாவின் பெற்றோரிடமும் மகேந்திரன் பேசினார். அவர்களின் சம்மதம் கிடைத்தது. அதன் பிறகு நானும் லதா வீட்டுக்கு சென்று அவர் பெற்றோர்களிடம் பேசினேன். `திருமணத்துக்கான ஏற்பாடுகளை எல்லாம் நானே செய்கிறேன். அதுவரை வெளியே யாருக்கும் தெரிய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டேன்.
நான் பெங்களூர் சென்று என் அண்ணனிடம் லதா பற்றி கூறினேன். முதலில் அவர் அதிர்ச்சி அடைந்தார். `அந்தப் பெண் நம்ம சாதி இல்லேன்னு சொல்றே. மராத்தியில் கிடைக்காத பெண்ணா உனக்கு மதராசில் கிடைக்கப்போகுது?” என்று கேட்டார். `நான் நல்லா இருக்கணும்னு நீங்க விரும்பினா, லதாவை மணந்து கொள்ள எனக்கு அனுமதி கொடுங்க’ என்று சொல்லிவிட்டு வந்தேன்.
பிறகு என் அண்ணன், சென்னைக்கு வந்தார். லதாவைப் பார்த்துவிட்டு, சம்மதம் தெரிவித்தார். லதா மட்டும், “உங்களை மணந்து கொள்ளமாட்டேன்” என்று கூறியிருந்தால், என் மனம் தாங்கியிருக்காது. ஏனென்றால் ஒரு பொருளின் மீது ஆசை கொண்டால் அதை அடைந்தே தீரவேண்டும் என்ற வெறி கொண்டவன் நான். சம்யுக்தையை பிருதிவிராஜன் தூக்கிச்சென்றது போன்ற நிலைமை ஏற்பட்டிருக்கும். அதற்கு அவசியம் இல்லாமல் போய்விட்டது.
திருமணத்துக்காக 7 மாதம் காத்திருந்தேன். அதற்குக் காரணம் உண்டு. எனது மனைவியின் குணநலன்கள் எப்படி? என் குணத்தையும், மனதையும் அறிந்து நடந்து கொள்வாளா? அவளது நடை, உடை, பாவனை எப்படி என்பதை எல்லாம் அறிந்து கொள்ள விரும்பினேன். அதற்குத்தான் 7 மாதம் பிடித்தது.
என் மனைவி லதாவுக்கு சங்கீத ஞானம் உண்டு. நன்றாகப் பாடுவாள். அவள் விரும்பினால் சினிமாவில் பின்னணி பாடலாம். நடிக்க விரும்பினால் கூட நடிக்கலாம். நான் தடை சொல்லமாட்டேன். என்னோடு ஜோடியாக நடிக்க விரும்பினால்கூட, நான் நடிக்கத் தயார்! பெண்கள் என்பவர்கள், வீட்டில் கணவன் காலடியில் நெளியும் புழுவோ, பூச்சியோ அல்ல. பெண்களுக்கு சுதந்திரம் தேவை. அந்த சுதந்திரத்தை நான் முழுமையாகத் தருவேன்.” என்று ரஜினி கூறினார்.
பின்னர் தன் திருமணம் 26-2-1981 அன்று திருப்பதியில் நடைபெற இருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்த ரஜினிகாந்த், நிருபர்கள் கேட்ட கேள்விகளும் ரஜினியின் பதில்களும் எப்படி இருந்தது தெரியுமா?( ✍️©️கட்டிங் கண்ணையா)
“எனது திருமணத்துக்கு அழைப்பிதழ் அச்சிடப்படவில்லை. என்னோடு நெருங்கிப் பழகிய, என் முன்னேற்றத்துக்கு காரணமாக இருந்தவர்களைக்கூட, “வாருங்கள்! என் திருமண கோலத்தைக் கண்ணாரக் கண்டு ஆசீர்வதியுங்கள்” என்று அழைக்க வில்லை. இதற்குக் காரணம் அழைப்பிதழ் அச்சடித்து, குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு வீடு வீடாகச் சென்று கொடுப்பது, தபால், தந்தி, ரேடியோ வசதிகள் இல்லாத அந்தக் காலத்துக்கு வேண்டுமானால் பொருத்தமாக இருந்து இருக்கலாம். ஆனால், இந்தக் காலத்தில் அது எதற்கு? என்னைப்போன்ற ஒரு நடிகனுக்குத் திருமணம் என்றால், அடுத்த நிமிடமே மக்களுக்குத் தெரியப்படுத்தும் விதமாக நவீன வசதிகள் இருக்கின்றன. அதனால் அழைப்பிதழ் அச்சடிக்கவில்லை.
என் திருமணத்துக்கு உடன் பிறந்தவர்கள் தவிர, வேறு எவரையும் அழைக்கவில்லை. வயது முதிர்ந்த என் தந்தையிடம் கூட, மானசீகமாகத்தான் வாழ்த்து பெற்று இருக்கிறேன். நான் பெங்களூரில் கண்டக்டராகப் பணியாற்றினேனே! அப்போது என்னுடன் பழகி, என்னுடன் உண்டு உறங்கிய சில பஸ் கண்டக்டர்களை மட்டும் திருமணத்துக்கு அழைத்திருக்கிறேன். தெய்வத்தின் சந்நிதானத்தில் என் திருமணம் நடைபெறுகிறது. தெய்வம் என்னையும், என் குடும்பத்தையும் ஆசீர்வதித்தால் அதுவே போதும்.
வெறும் மஞ்சள் கயிற்றில் கோர்த்த தாலியைத்தான் நான் லதா கழுத்தில் கட்டப்போகிறேன். தாலி கட்டுவது என்பது வெறும் சடங்கு. ஆனால், தெய்வத்தை சாட்சியாக வைத்துக் கொண்டு, மனச்சாட்சிக்கு பயந்து, ஒருத்தி கழுத்தில் கயிற்றைக் கட்டுவதே உண்மையான திருமணம். இன்று நான் இருக்கும் நிலையில் 4 ஆயிரம் பேர் என்ன, 4 லட்சம் பேருக்கு அறுசுவை உணவு வழங்கி திருமணத்தை சிறப்பாக செய்ய முடியும்.
ஆனால், கோடீசுவரன் என்றாலும், திருமண விழாவுக்கு பணத்தை விரயம் செய்வதை நான் வெறுக்கிறேன். பசி அறியாதவர்கள் என் திருமணத்துக்கு வந்து விருந்துண்டு போவதைவிட, பசித்தவர்களுக்கு சோறு போட நினைக்கிறேன். எனவே, சென்னையில் உள்ள சில அனாதை விடுதிகளில் உள்ளவர்களுக்கு சீருடையுடன் உணவும் வழங்க ஏற்பாடு செய்திருக்கிறேன்.” இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.
வழக்கம் போல் “தேன் நிலவுக்கு எங்கே போகப்போகிறீர்கள்?” என்று கேட்டதற்கு “தேன் நிலவாவது, சர்க்கரை நிலவாவது? `விஸ்கி’ அடித்தால், தினமும் தேன் நிலவுதான்! கள்ளம், கபடம் இல்லாமல், ஒருவர் மனதை ஒருவர் புரிந்து கொண்டு வாழும் ஒவ்வொரு நாளும் தேன் நிலவு நாட்களே! எனினும் இனி நான் `டிரிங்க்’ செய்வதை குறைத்துக் கொண்டு விடுவேன். உடல் நலமே முக்கியம். சுவர் இருந்தால் தானே சித்திரம் தீட்ட முடியும்! இதை கவனிக்கும் பொறுப்பு, இனி என்னை விட என் லதாவுக்கு அதிகம் உண்டு.” இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.
“செய்தி சேகரிப்பதற்காக திருமணத்துக்கு நிருபர்கள், புகைப்படக்காரர்கள் வரலாமா?” என்று ஒரு நிருபர் கேட்டார்.
அப்போது, லதாவுடன் கழுத்தில் மாலையுடன் இருக்கும் புகைப்படத்தை நிருபர்களிடம் ரஜினி கொடுத்தார்.
“திருமணத்துக்குப் பிறகு இந்தப் படத்தை போட்டுக் கொள்ளுங்கள். வரவேற்பு நிகழ்ச்சியை பின்னர் சென்னையில் நடத்தப் போகிறேன். தேதி முடிவாகவில்லை. முடிவானபிறகு, என்னை ஆளாக்கிய கலை உலக, பத்திரிகை உலக நண்பர்கள் ஒவ்வொருவரையும் நேரில் அழைப்பேன். திருப்பதி கோவிலில் மாலை மாற்றி தாலி கட்ட விசேஷ அனுமதி பெற்று இருக்கிறேன். அங்கே பத்திரிகையாளர்களும், ரசிகர்களும் வந்து கூட்டம் கூடினால் பிரச்சினை ஏற்படும். எனவே, திருமணத்துக்கு யாரும் வரவேண்டாம்” என்றார், ரஜினி.
“வந்தா…?” என்று ஒரு நிருபர் கேட்க, ரஜினி `டென்ஷன்’ ஆகி, “உதைப்பேன்” என்றார்.
இந்த பதில், நிருபர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.
“ரஜினி! இந்த மாதிரி வார்த்தைகளை எல்லாம் பயன்படுத்தாதீர்கள். இதை அப்படியே பிரசுரித்தால் நன்றாக இருக்குமா?” என்று, மூத்த நிருபர் ஒருவர் கூறினார்.
அமைதி அடைந்த ரஜினி, “நீங்கள் நேருக்கு நேராக இப்படி கூறியதைப் பாராட்டுகிறேன். அப்படிச் சொன்னதற்கு வருந்துகிறேன்… சாரி! ஆனாலும், திருப்பதிக்கு யாரும் வரவேண்டாம். காமிராவோட யாரையாவது பார்த்துட்டா உதைக்கிறதைத் தவிர வேறு வழி தோணாது!” என்றார், ரஜினி!
இதை அடுத்து ரஜினிகாந்த் – லதா திருமணம், 26-2-1981 அன்று அதிகாலை திருப்பதியில் நடந்தது. திருமணம் முடிந்ததும், ரஜினி உடனடியாக சென்னைக்குத் திரும்பி, படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
திருமணத்துக்கு முதல் நாள் இரவு, ரஜினிகாந்த் கார் மூலம் திருப்பதி சென்றார். ரஜினியின் அண்ணனும், ஒரு சில நெருங்கிய உறவினர்கள் மட்டும் உடன் சென்றனர்.
மணமகள் லதா, அவரது பெற்றோர், அக்காள் சுதா, ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோர் வேறொரு காரில் சென்றனர்.
திருப்பதியில், பயணிகள் விடுதியில் (காட்டேஜ்) தங்கினார்கள்.
சுப்ரபாதம் முழங்க தாலி கட்டினார்
அதிகாலை 3.30 மணிக்கு திருப்பதியில் சுப்ரபாதம் நிகழ்ச்சி நடந்தது. திருப்பதி ஏழுமலையான் சந்நிதியில் அதிகாலையில் பாடப்படும் துதிப்பாடல் “சுப்ரபாதம்.”
அப்போது ரஜினி – லதா திருமணம் நடந்தது. லதா கழுத்தில் ரஜினி தாலி கட்டினார்.
பிறகு இரு குடும்பங்களையும் சேர்ந்த பெரியவர்கள் காலில் விழுந்து வணங்கி, மணமக்கள் ஆசி பெற்றார்கள்.
திருமணம் முடிந்து, சாமி சந்நிதியை விட்டு ரஜினியும், லதாவும் வெளிவந்தபோது, இரண்டொரு பத்திரிகையாளர்களும், போட்டோகிராபர்களும் எப்படியோ அங்கு வந்து போட்டோ எடுக்க முயன்றனர். `எவ்வளவோ சொல்லியும் அதைக் கேட்காமல் இங்கு வந்துவிட்டார்களே’ என்று `டென்ஷன்’ ஆனார், ரஜினி. உறவினர்கள் அவரை சமாதானப்படுத்தி, வேறு வழியாக அழைத்துச் சென்றுவிட்டனர். திருப்பதியிலிருந்து அருகில் உள்ள திருச்சானூர் சென்று, பத்மாவதியை தரிசனம் செய்துவிட்டு, ரஜினிகாந்தும் மற்றவர்களும் உடனடியாக சென்னைக்குத் திரும்பினார்கள்.
அன்று காலை 10 மணிக்கு, ஏவி.எம்.ஸ்டூடியோவில் கே.பாலசந்தரின் “நெற்றிக்கண்” படப்பிடிப்பு நடந்தது. அதில் ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.7 மாதங்களுக்கு முன், பாலசந்தரின் “தில்லுமுல்லு” படப்பிடிப்பின்போது அரும்பிய ரஜினி – லதா காதல், அதே பாலசந்தரின் “நெற்றிக்கண்” படப்பிடிப்பின்போது திருமணத்தில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.
“திருமணத்துக்கு யாரும் வரவேண்டாம். ஆனால், திருமண வரவேற்புக்கு எல்லோரும் வாருங்கள். நானே உங்களுக்கு அழைப்பு கொடுப்பேன்” என்று ஏற்கனவே ரஜினி அறிவித்திருந்தார். அதைப்போலவே, திருமணத்துக்கு 2 வாரம் கழித்து (மார்ச் 14-ந்தேதி) சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் கோரமண்டல் ஓட்டலில் வரவேற்பு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினார். பிரமுகர்களும், திரை உலகத்தினரும் பெருந்திரளாக வந்து மணமக்களை வாழ்த்தினார்கள்.
ஆங்.. இன்னொரு விஷயம் திருமணத்தின்போது லதா, சென்னை எத்திராஜ் கல்லூரியில் “பி.ஏ” இறுதியாண்டு படித்துக்கொண்டு இருந்தார்.திருமணத்துக்குப் பிறகும் 2 மாதம் தொடர்ந்து கல்லூரிக்குச் சென்று படித்து, பரீட்சை எழுதி, “பி.ஏ” பட்டம் பெற்றாராக்கும்.
✍️©️கட்டிங் கண்ணையா