ஜேம்ஸ்பாண்ட் கேரக்டரில் முதலில் முத்திரை பதித்த ஷான் கானரி காலமானார்!

முதல் ஜேம்ஸ் பாண்ட் நடிகரான சர் சீன் கானரி இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 90. 1962-ல் வெளியான முதல் ஜேம்ஸ் பாண்ட் படமான ‘டாக்டர் நோ’ வில் இவர் தான் பான்ட் ஆக வருவார்.ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். 1962-ல் தான் முதல் ஜேம்ஸ்பாண்ட் படம் வெளியானது. ‘டாக்டர் நோ’ என்ற அந்த படத்தில் தான் சீன் கானரி முதல் பாண்டாக நடித்தார். அதற்குப் பின் ‘பிரம் ரஷ்யா வித் லவ்’, ‘கோல்ட் பிங்கர்’, ‘தண்டர் பால்’, ‘யூ ஒன்லி லிவ் ட்வைஸ்’, ‘டைமண்ட்ஸ் பார் எவர் ‘ மற்றும் நெவர் சே நெவர் அகய்ன்’ ஆகிய 7 படங்களில் பாண்டாக வந்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

1962ல் தொடங்கி 83 வரை இவர் ஜேம்ஸ்பாண்ட் ஆக நடித்து வந்தார். ‘அன்டச்சபில்ஸ்’ என்ற படத்தில் நடித்ததற்காக 1988ல் இவருக்கு சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கார் விருதும் கிடைத்துள்ளது. இதுதவிர மூன்று முறை இவருக்கு கோல்டன் குளோப் விருதுகளும், இரண்டு முறை பாப்தா விருதுகளும் கிடைத்துள்ளன.

ஜேம்ஸ்பாண்ட் படங்கள் தவிர ‘மர்டர் ஆன் தி ஓரியண்ட் எக்ஸ்பிரஸ்’, ‘தி ராக்’, ‘பைண்டிங் பாரஸ்டர்’, ‘டிராகன் ஹார்ட் ‘ ஆகிய படங்கள் இவரது நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டாக ஓடின. 90 வயதான சர் சீன் கானரி பஹாமாஸில் வசித்து வந்தார். இந்நிலையில் இரவில் தூக்கத்திலேயே இவரது உயிர் பிரிந்தது. சீன் கானரியின் மறைவுக்கு உலகம் முழுவதும் உள்ள சினிமா பிரபலங்கள் மற்றும் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்..

மேலும் விரிவான செய்திகளுக்கு: ஆந்தை ரிப்போர்ட்டர்