ரசிகர்களை கவர்ந்ததா ? மார்வலின் புதிய சூப்பர்ஹீரோ படம் – Eternals திரை விமர்சனம் !

இயக்கம் – ஜொலோ ஷாவோ (Chloé Zhao)

நடிகர்கள் – ஜெம்மா சான், ரிச்சர்ட் மேடன், குமாயில் நஞ்சியானி, லியா மெக்ஹுக், பிரையன் டைரி ஹென்றி, லாரன் ரிட்லாஃப், பேரி கியோகன், டான் லீ, கிட் ஹரிங்டனுடன், சல்மா ஹெய்க், ஏஞ்சலினா ஜோலி

பல்லாயிரம் வருடங்கள் முன்பு பூமியில் மனிதர்களை வேட்டையாடும் டீவியண்ட் மிருகங்களை அழிக்க, நட்சத்திர கூட்டத்தின் பின்னணியிலிருந்து Eternals சூப்பர் ஹீரோக்களை பூமிக்கு அனுப்புகிறது ஒரு சக்தி. மனிதர்களின் எந்த விசயத்திலும் தலையிடக்கூடாது என உத்தரவும் அவர்களுக்கு இருக்கிறது. 5000 வருடங்களாக மறைந்து வாழும் அவர்கள் அழிந்து போன டீவியண்ட் திரும்பவும் வரவே மறைவிலிருந்து மீண்டும் வந்து ஒன்று சேர்கிறார்கள். டீவியண்ட் மீண்டும் வந்தது எப்படி உலகத்திற்கு வரும் அழிவின் பின்னால் இருக்கும் உண்மை என்ன எனபது தான் Eternals படத்தின் கதை.

உலகம் முழுக்க பல்லாயிரணக்கில் மார்வல் திரை உலகத்தில் Phase 4 பிரிவில் அடுத்ததாக 10 சூப்பர் ஹீரோக்களை அறிமுகப்படுத்தும் படம் என்ற பெரும் எதிர்பார்ப்பில் வெளியாகியுள்ள படம்.

ஒரே படத்தில் 10 சூப்பர் ஹீரோக்கள் இவர்கள் யார் இவர்கள் முந்தைய கதையில் தானோஸ் உலகை அழிக்க வந்தபோது உதவ வரவில்லை என்பதற்கெல்லாம் பதில் சொல்வாதாகத்தான் இந்தப்படம் வந்திருக்கிறது. ஆனால் அந்த பதில் திருப்தியாக இருந்ததா என்பதில் தான் பிரச்சனை

மார்வல் ஒரு தனி சூப்பர் ஹீரோவை அறிமுகப்படுத்தினாலே அதற்கான தனிப்படத்தை அதிரடியாக தரும் ஆனால் இதில் 10 ஏலியன் சூப்பர்ஹீரோக்களை அறிமுகப்படுத்தியும் நமக்கு பெரிதாக எந்த திருப்தியும் இல்லை.

மார்வலின் அயர்ன் மேன், கேப்டன் அமெரிக்கா, போன்ற சூப்பர் ஹீரோக்கள் ஒரு படத்தில் மக்களுக்கு பிடித்தவர்களில்லை, 10 வருடங்கள் அவர்களோடு ரசிகர்கள் பயணித்தார்கள். அதன் உட்சமாக வெளியான அவெஞ்சர்ஸ் எண்ட் கேமை தாண்டி படமெடுக்க முடியாமல் மார்வல் திணறுவது படம் முழுக்க தெரிகிறது.

சரி தனியாக இந்தப்படம் எப்படியிருக்கும் என்று பார்க்கலாம். பொதுவாக மார்வல் படங்களுக்கென்றே ஒரு ஃபார்மேட் இருக்கிறது. நம் முகத்தில் புன்னகை வரவைத்து கொண்டே இருக்கும் திரைக்கதை அதிரடி ஆக்சன். மற்ற மார்வல் படத்தின் சம்ப்வங்களின் தொடர்ச்சி என ஆனால் இப்படத்தில் அந்த மாதிரி எதுவும் இதில் இல்லை.

படத்தின் திரைக்கதை வெவ்வேறு காலகட்டத்தில், நடந்த சம்பவங்கள் மூலம் சொல்லப்படுகிறது. இந்த ஹீரோக்கள் பெரும் சக்தியை வைத்து கொண்டு தானோஸ் வந்த போது பார்த்து கொண்டிருந்தார்கள் என்பதை நம்பமுடியவில்லை. ஏனென்றால் இப்படத்தில் எல்லோரையும் இளகிய மனம் படைத்த நல்லவர்களாக காட்டியுள்ளார்கள். தலையிடாமல் இருந்ததற்கு அவர்கள் சொல்லும் காரணம் சிறு பிள்ளைத்தனமாக இருக்கிறது.

இது முதலில் மார்வல் படம் என்ற உணர்வையே தரவில்லை இந்தப்பிரச்சனை ஷாங் ஜீ படத்திலும் இருந்தது. என்ன பிரச்சனை என்றால் மார்வலில் கடந்த பத்து வருடங்களாக எந்த கதாப்பாத்திரமும் இந்த படத்தில் வராமல் இருப்பதும், 10 வருட கதைகளின் தொடர்ச்சி பற்றி எந்த தகவலும் இல்லாததும் இந்தப்படத்தை ஒரு புதிய படம் போலவே காட்டுகிறது.

படம் முழுக்கவே ஒரு சோகம் இருந்து கொண்டே இருக்கிறது. படத்தின் அனைத்து கதாப்பாத்திரங்களை அறிமுகப்படுத்தி முடிக்கும்போது படம் முடிந்து விடுகிறது.

ஆயிரக்கணக்கான வருட கதையை இரண்டு மணி நேரத்தில் சொல்கிறார்கள். அதில் வரும் இந்திய பகுதி கதை ரசிகர்களுக்கு உற்சாகம் தருகிறது. குமாயில் நஞ்சியானியின் பாலிவுட் ஹீரோ கதாபாத்திரமும் அவருடன் வரும் அஸிஸ்டெண்டும் சிரிப்பை வரவழைக்கிறார்கள். மொத்தப்படத்திலும் கொஞ்சம் சுவார்ஸ்யம் தருவது அவரது கேரக்டர் தான். சல்மா ஹெய்க், ஏன்சலினா ஜோலி எல்லாரும் வீணடிக்கப்பட்டிருக்கிறார்கள். ஜெம்மா சான் படத்தின் மிக முக்கிய நாயகியாக வருகிறார் மற்றவர்களெல்லாம் கேமியோ பாத்திரம் போலவே செய்திருக்கிறார்கள். கிட் ஹாரிங்டன் எல்லாம் முதல் காட்சியிலும் இறுதிகாட்சியிலும் தலை கட்டுகிறார் அவ்வளவு தான். ஆக்சனும் பெரிதளவில் சோபிக்கவில்லை. மொத்தத்தில் இந்தப்படம் மார்வல் ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான்.

உலகம் அழியப்போகும் பதற்றத்தை ஏற்படுத்த வேண்டிய திரைக்கதை கொட்டாவியைத்தான் வரவைக்கிறது. அவர்கள் சொல்லும் கதையே கொஞ்சம் புரியாமல் இருக்கிறது.

படத்தின் பிரமாண்டம், ஆக்சன் எல்லாமே பிரமிப்பு தருகிறது. ஒளிப்பதிவு சிஜி எல்லாம் ஹாலிவுட் தரத்தை காப்பாற்றியிருக்கிறது. அடுத்த படத்திற்கான தொடர்ச்சிக்கு க்ளூ கொடுத்திருக்கிறார்கள் மார்வல் மானத்தை அந்தப்படம் தான் காப்பற்ற வேண்டும்.