இந்திய திரை உலகினருக்கு மத்திய அரசால் வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான தாதா சாகிப் பால்கே, நம்முடைய சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. தனக்குள் எரிந்துகொண்டிருந்த நடிப்பு என்ற தீயை ஆரம்பகாலப் படங்களில் ரஜினிகாந்த் அற்புதமாகவே பரவச் செய்தார். ஸ்டைல் தனம் காட்டும் முன்பே அவரது கண்ணும் முகபாவங்களும் தாண்டவமாடிய படங்கள் பிரமிக்கத்தக்க வையாகவேகவே இருக்கும்
அறிமுகப் படமான அபூர்வ ராகங்களில் புதிதாக அவருக்கு ஸ்கோப் இல்லை. ஆனால் இரண்டாவது படமான கதா சங்கமம் (கன்னடம்) குங்கும ரக்சே ( கன்னடம்) சிலிக்கம்மா செப்பிண்டி (தெலுங்கு) போன்ற படங்கள் ரஜினிக்குள் இருந்த மகா கலைஞனை திரையில் முன்னிறுத்தின. எதற்காக சொல்கிறோம் என்றால் நெஞ்சில் ஓர் ஆலயம் கல்யாண குமாரும் நிழல் நிஜமாகிறது கமலும் ரஜினி பிரதிபலித்த பாத்திரங்களை ஒப்பிடுகையில் கொஞ்சம் பின்தங்கியே போனார்கள்.
புரியும்படி சொன்னால் கல்யாணகுமார் பாத்திரத்தைவிட ரஜினி சிறப்பாக செய்தார். தெலுங்கில் ரஜினி செய்த வேகத்திற்கு தமிழில் கமலால் அந்த பாத்திரத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை.
வருடத்திற்கு 17 அல்லது 18 படங்களைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்த ரஜினி, கதாநாயகனாக ஆனதும், தொடர்ந்து ஹிட் மட்டும் வசூலில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். நினைத்தபடியே அவருக்கு அது சாத்தியமாகவும் ஆயிற்று. வெற்றிமேல் வெற்றிகளையும் குவிக்க முடிந்தது.
மூன்று முடிச்சு, முள்ளும் மலரும்,பில்லா, தம்பிக்கு எந்த ஊரு, தளபதி அண்ணா மலை,பாட்ஷா என தமிழ் சினிமாவில் ரஜினியின் பரிமாணங்கள் பிரமிக்கத்தக்க அளவில் உருமாற்றம் பெற்றுக்கொண்டே போயின. கதைக்குள் ரஜினி என்ற நிலை போய் ரஜினிக்காகவே கதைகள் பின்ன வேண்டிய அளவுக்கு நிலைமை போனது.
முதல் இருபது ஆண்டுகளில் 150 படங்கள் நடித்து முடித்த ரஜினியால், அடுத்த 25 ஆண்டுகளில் வெறும் இருபது படங்களை மட்டுமே கொடுக்க முடிந்தது. காரணம்,100 கோடி 200 கோடி என ரஜினியை நம்பி முதலீடு அதை பல நூறு கோடிகளாக திருப்பி எடுக்க வேண்டி இருந்ததால் ஒவ்வொரு படத்திற்கும் ரசிகர்களை திருப்திபடுத்தாத எதையுமே அனாவசியமாக செய்துவிட முடியாதடி அவ்வளவு நெருக்கடிகள்.. !
தமிழகத்தை தாண்டி வெளிமாநிலங்கள் வெளிநாடுகளில் என கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்று விட்ட ரஜினியால், தன்னுடைய விருப்பத்திற்கேற்ப கூட நடிக்க முடியாத ஒரு நிலை. முழுக்க முழுக்க ரஜினி என்பவர் அவரின் ரசிகர்களின் சந்தோஷத்தை பூர்த்தி செய்யவேண்டிய ஒரு நடிகராகவே மாற்றப்பட்டு விட்டார்.
ஆனால் அதுவே குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை தலைமுறைகளை தாண்டி அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் அளவுக்கு ரஜினிக்கு ஒரு மிகப்பெரிய வரமாக அமைந்து போனது.43 ஆண்டுகளாக தொடர்ந்து கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். இன்றளவும் பாக்ஸ் ஆபீஸில் நம்பர்-1 ஆக இருக்கிறார் இந்திய சினிமாவில் எந்த முன்னணி நடிகரும் இதுபோன்ற சாதனையை இதற்கு முன்பு செய்ததே கிடையாது.
நம்ம மூஞ்சி எல்லாம் சினிமாவுக்கு செட்டாகுமா என்று பலருக்கும் இருந்த தாழ்வுமனப்பான்மையை அடித்து நொறுக்கியவர் ரஜினி. அவரின் வெற்றியைபார்த்து தான் விஜயகாந்த் போன்றவர்கள் எல்லாம் தைரியமும் தன்னம்பிக்கையும் பெற்று கோடம்பாக்கம் நோக்கி 70களில் படையெடுத்தார்கள்..!
தமிழகத்திலும் தமிழக எல்லைகளில் மட்டுமே இருந்த தமிழ் சினிமாவின் வியாபார கேந்திரத்தை உலகம் முழுவதும் கொண்டு போனதில் நடிகர் ரஜினிக்கு மிகப் பெரிய பங்கு உண்டு. கருப்பு வெள்ளையில் தொடங்கி கலர் படம், அனிமேஷன் 3D என தொழி ல்நுட்பம் வியக்கத்தக்க அளவில் எட்டிய நிலையிலும் காலத்திற்கேற்ப தன்னை தகவமைத்துக் கொண்டு 71 வது வயதிலும், இன்றும் நம்பர் ஒன் கதாநாயகனாக இருக்கிறார்..
மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள் ரஜினிக்கு..!
ஏழுமலை வெங்கடேசன்