இளையராஜா- ராதாமோகன் & விக்ரம் பிரபு காம்போவில் ’60 வயது மாநிறம்’

கலைப்புலி தாணு தயாரிப்பில் நடிகர் பிரகாஷ்ராஜ், சமுத்திரக்கனி, விக்ரம் பிரபு நடித்துள்ள படத்திற்கு ’60 வயது மாநிறம்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.மொழி, பயணம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் ராதா மோகன் தற்போது ஜோதிகா நடிப்பில் ‘காற்றின் மொழி’ படத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையில் விக்ரம் பிரபு, பிரகாஷ்ராஜ், சமுத்திரக்கனி ஆகியோரை வைத்து 60 வயது மாநிறம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் இந்துஜா, ஷரத், மதுமிதா, அருள்ஜோதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்க கலைப்புலி எஸ்.தாணுவின் வி.கிரியேஷன்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. இளையராஜாவின் இசைக்கு பா.விஜய், பழநிபாரதி, விவேக் ஆகியோர் பாடல் வரிகளை எழுதியுள்ளனர். இப்படம் இந்த மாதம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்ட்ரை பார்த்ததுமே நம் அருகிலிருந்த நிருபர் இது ‘கோதி பன்னா சாதாரண மைகட்டு’ என்ற கன்னடப் படத்தின் ரீமேக்காகத்தான் இருக்கும். அறிமுக இயக்குனர் ஹேமந்த் ராவ் இயக்கத்தில் அனந்த் நாக், ரக்ஷித் ஷெட்டி, வசிஷ்ட சிம்ஹா, ஸ்ருதி ஹரிஹரன் மற்றும் பலர் நடித்து 2016ம் ஆண்டு வெளிவந்த படம் இது.

அல்சீமர் நோயால் பாதிக்கப்பட்ட அனந்த்நாக் காணாமல் போய் விடுகிறார். அமெரிக்காவில் செட்டில் ஆக நினைக்கும் அவருடைய மகன் ரக்ஷித் ஷெட்டி முதியோர் இல்ல டாக்டரான ஸ்ருதிஹரிஹரனுடன் அப்பாவைத் தேட ஆரம்பிக்கிறார். ஆனால், அனந்த்நாக் கொலைகாரரான வசிஷ்டா சிம்ஹாவிடம் சிக்கிக் கொள்கிறார். இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் அந்தக் கன்னடப் படத்தின் கதை.’60 வயது மாநிறம்’ படத்தின் முதல் பார்வையைப் பார்க்கும் போது அனந்த்நாக் கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ், ரக்ஷித் ஷெட்டி கதாபாத்திரத்தில் விக்ரம் பிரபு, வசிஷ்டா சிம்ஹா கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி ஆகியோர் நடித்திருக்கலாம் எனத் தெரிகிறது” என்று சொன்னார்.