30 ஆண்டுகள் – 5 மொழிகள் அசராத ஸ்டண்ட் மாஸ்டர் ஸ்டன் சிவா!

திரையுலகைப் பொறுத்தவரை உயிரை பணயம் வைத்து வேலை செய்யும் துறை என்றால் ஸ்டண்ட் கலைஞர்கள் பணியாற்றும் துறைதான். அந்தத் துறையில் 30 வருடங்கள், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என அனைத்து இந்திய மொழி சினிமாக்களிலும் பணியாற்றி சாதனை செய்திருக்கும் ஸ்டண்ட் மாஸ்டர் ஸ்டன் சிவா. இந்தியாவின் அனைத்து திரைப்பட பிரபலங்களுடனும் இவர் பணி புரிந்திருக்கிறார். இப்போது நடிகராகவும் பரிமளிக்க ஆரம்பித்துள்ளார். இந்த வருடம் ஆரம்பமே அவருக்கு ஜாக்பாட் அடித்திருக்கிறது என்று சொல்லலாம். இந்த பொங்கல் தினத்தன்று இவர் பங்களிப்பு செய்திருக்கும் 4 படங்கள் வெளியாகின்றன.

முதலாவதாக, தெலுங்கில் இன்று ரிலீசான ‘கிராக்’ #krack படத்தில் ரவி தேஜாவுக்கு வில்லனாக நடித்திருக்கிறார். இரண்டாவதாக சிம்புவின் நடிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் பொங்கல் திருநாளில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாக காத்திருக்கும் ‘ஈஸ்வரன்’ படத்தில் வில்லன் ரோலில் இவர்தான் கலக்கியிருக்கிறார்.

மூன்றாவதாக ஜெயம் ரவியின் நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியாகும் ‘பூமி’ படத்தில் ஸ்டணட் மாஸ்டராக பணி புரிந்திருக்கிறார். நான்காவதாக, பொங்கலன்று தெலுங்கில் வெளியாகும் ‘அல்லடு அதுர்ஸ்’ படத்தில் மாஸ்டராக பணிபுரிந்திருக்கிறார்.

இந்தப் படங்களில் பணியாற்றிய அனுபவம் பற்றி ஸ்டன் சிவா பேசுகையில், “இந்த ‘கிராக்’ படத்தின் இயக்குநர் கோபி எனக்கு நண்பர். அவர்தான் அந்தப் படத்தில் நடிக்கும்படி என்னிடம் கேட்டார். நானும் ஓகே சொல்லி நடித்தேன். ரவி தேஜாவுடன் ஏற்கெனவே ‘டான் சீனு’, ‘பலுப்பு’னு சில படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக வேலை பார்த்துருக்கேன். அவர் என்னை செட்டில் பார்த்தவுடன் மிகவும் உற்சாகமாகி, பாராட்டினார். படம் எனக்கு நல்ல பாராட்டுக்களை பெற்று தந்து கொண்டிருக்கிறது.

‘அடங்க மறு’ படத்தில் ஜெயம் ரவியுடன் வேலை செய்திருந்தேன். அந்தப் படம் மிகப் பெரிய பாராட்டுக்களை பெற்று தந்தது. இப்போது ‘பூமி’ படத்தை ஆக்சனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுத்திருக்கிறோம். ஜெயம் ரவி ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்.

இந்த படம் தமிழில் ஒரு புதுமையான ஆக்சன் காட்சிகளை திரையில் கொண்டுவரும். எல்லோரும் இணைந்து கடின உழைப்பில் இப்படத்தை உருவாக்கியுள்ளோம். ஜெயம் ரவி இப்படத்தில் நிறைய ரிஸ்க்கான காட்சிகளில் நடித்திருக்கிறார். ரசிகர்கள் திரையில் பார்க்கும்போது அதனை ரசிப்பார்கள்.சுசீந்திரன்தான் என்னை முழுமையான நடிகராக மாற்றினார். ‘சாம்பியன்’ படத்தில் வில்லனாக அறிமுகப்படுத்தினார். இப்போது ‘ஈஸ்வரன்’ படத்திலும் அவர்தான் நடிக்க வைத்தார்.

வில்லன் வேடம். சிம்புவுக்கு எதிராக நிற்க வேண்டும். பெரிய படம் சிறிது பதற்றம் இருந்தது. ஷீட்டிங்கின்போது எல்லாம் மறந்து விட்டது. சிம்பு ஒரு அற்புதமான நடிகர். ‘தொட்டி ஜெயா’ படத்தில் அவருடன் வேலை செய்திருக்கிறேன். அதே மாதிரியே சின்னப் பையனாக இந்தப் படத்திலும் வந்து நின்றார். ஆக்சன் காட்சிகளில் நடிக்கும் போது “மாஸ்டரை பார்த்து கொள்ளுங்கள்” என்பார். அப்படி என் மீது நிறைய அக்கறையுடன் இருந்தார். ஹீரோவை ஆக்சன் காட்சிகளில் அடிபடாமல் பார்த்து கொண்டிருப்பதுதான் எங்கள் வேலையாக இருந்தது. அதேபோல் அவர் என்னை பார்த்து கொண்டபோது அந்த உணர்வே எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

ரசிகர்கள் இந்த பொங்கல் திருநாளில் குடும்பத்துடன் கொண்டாடும் படமாக ‘ஈஸ்வரன்’ இருக்கும். எல்லோருமே இப்படத்தில் கடும் உழைப்பை தந்திருக்கிறார்கள். கோவிட் காலத்தில் கடும் சிக்கல்களுக்கு மத்தியில் மிக கஷ்டப்பட்டு இப்படத்தை உருவாக்கியுள்ளோம். ரசிகர்கள் கொண்டாடும் படைப்பாக இது இருக்கும்.

ஸ்டண்ட் இயக்குநராக இருந்தபோது திரை உலகில் நிறைய அங்கீகாரம் கிடைத்தது. இப்போது ரசிகர்களிடம் இருந்து பாராட்டு கிடைத்து வருகிறது. இரண்டையும் பிரித்து தொடர்ந்து வேலை செய்வேன். இரண்டிலுமே என் பயணம் தொடரும். ரசிகர்களின் ஆதரவும், பாராட்டும் தொடர்ந்து எனக்குக் கிடைக்கும் என்று நம்புகிறேன்…” என்றார்.