‘சம்சாரம் அது மின்சாரம் 2’ திரைப்படம் உருவாகவுள்ளது. இதில் நடிக்க ராஜ்கிரணிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது படக்குழு.
நம் நாட்டில் அதிகமாக இருக்கு நடுத்தர குடும்ப உறவுகளை மையப்படுத்தி விசு இயக்கத்தில் வெளியான படம் ‘சம்சாரம் அது மின்சாரம்’. 1986 ஆம் ஆண்டு ஜூலை 18-ம் தேதி வெளியான இந்தப் படத்தில் ரகுவரன், லட்சுமி, மனோரமா, விசு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மாபெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம், இப்போதும் கொண்டாடப்பட்டு வருகிறது.விசு மறைவுக்கு முன்பு ‘சம்சாரம் அது மின்சாரம் 2’ படத்துக்கான கதையை எழுதித் தயாராக வைத்திருந்தார். ஆனால், அதற்கான தயாரிப்பாளர் இன்னும் அமையவில்லை என்று ‘கூட தெரிவித்திருந்தார்.
தற்போது அவருடைய மறைவுக்குப் பிறகு, ‘சம்சாரம் அது மின்சாரம் 2’ உருவாகிறது. மக்கள் அரசன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ராஜா தயாரிக்கும் இந்தப் படத்தை விசுவின் சிஷ்யர் வி.எல்.பாஸ்கர் ராஜ் இயக்கவுள்ளார். கதை, திரைக்கதை, வசனம் என அனைத்துமே விசு எழுதியதுதான். இயக்கம் மட்டும் வி.எல்.பாஸ்கர் ராஜ். இந்தப் படத்துக்கு உதவி வசனகர்த்தாவாக விசுவின் மகள் லாவண்யா விசு பணிபுரியவுள்ளார். இசையமைப்பாளராக பரத்வாஜ், ஒளிப்பதிவாளராக ராஜவேல் மோகன், எடிட்டராக சுரேஷ் அர்ஸ் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.
‘சம்சாரம் அது மின்சாரம் 2’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ராஜ்கிரணிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
‘சம்சாரம் அது மின்சாரம் 2’ தொடர்பாக இயக்குநர் பாஸ்கர் ராஜ் கூறுகையில், “இது சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவரும் ரசிக்கக்கூடிய கதம்பமான ஒரு குடும்பக் கதை. அனைத்துத் தரப்பட்ட மக்களையும் திரையரங்கை நோக்கி வரவழைக்கும் இன்றைய சூழலுக்கு ஏற்ற கதை. இன்னொரு வீட்டில் மின்சாரமாக இருக்கும் சம்சாரத்தின் கதை” என்று தெரிவித்துள்ளார்.