ரசிக்கும்படியான படம் ‘கபடதாரி’ – விமர்சனம்!

ஹைடெக்-காகிப் போன இந்த 21`ஆம் நூற்றாண்டில் கண்ணில் படும் எழுத்துக்களை எல்லாம் சொல்லாக கூறி விடும் டெக்னாலஜி எல்லாம் வந்து விட்டது. ஆனாலும் கூட பொழுதுப் போக்கு சாதனமான சினிமாக்களுக்கு கதை பிடிப்பதும் அதை சுவைபட வடிவமைக்கும் திரைக் கதையாக்குவதிலும் பலருக்கு கொஞ்சம் கூட  ஆர்வமில்லை. அதனால்தானோ என்னவோ நம் கோலிவுட்டில் பலரும் தங்கள் பட டைட்டில் தொடங்கி கதை வசனம் உள்ளிட்ட எதற்கும் மெனக்கெடாமல் விட்டேத்தியாக முன்னொரு கால ஹிட் தலைப்பு தொடங்கி எதையோ வழங்கி  இதுதான் சினிமா என்ற பெயரில் காட்சிப்படுத்தி நமக்கான காலத்தைக் கபளிகரம் செய்வார்கள்.. இந்த உபாதையில்  சிக்கித் தவிக்கும் கோடம்பாக்க ரசிகனை திருப்திப்படுத்த வென்றே கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக யோசித்து பலரும் ரசிக்கும்படி ‘கபடதாரி’ என்றொரு படத்தை வழங்கி இருக்கிறார்கள்.

கன்னடத்தில் ரிலீஸாகி ஹிட் அடித்த ‘கவலுதாரி’என்ற க்ரைம் த்ரில்லர் கதையைத்தான் தமிழுக்கு கொண்டு வந்துள்ளார்கள். அதாவது துப்பறியும் போலீசாக வாழ ஆசைப்படும் சிபிராஜ் ட்ராபிக் எஸ்.ஐ.யாக இருக்கிறார். அவர் பணிபுரியும் லிமிட்டில் ஒரு பாலம் கட்ட தோண்டிய குழியில் இருந்து மூன்று எலும்புக் கூடுகள் தோன்றுகிறது. அந்த எலும்புக்கூடுகள் குறித்து நம்ம ட்ராபில் சிபி துப்பறிவதுதான் கதை.. இந்த க்ரைம் கதையை ரசிகன் பார்வையில் சுவைபட சொல்வதில் கன்னடத்தை விட தமிழில் ஷார்ப்-பாக செய்திருகிறார்கள்.. !

நாயகன் சிபிராஜ்- இந்த ரோலை விரும்பிக் கேட்டு செய்தாராம்.. அப்படி செய்தவர் தன் கேரக்டருக்குரிய ஹோம் ஒர்க்-கை செய்யாமல் வந்து விட்டார் போலும்.. சலிப்பான முகத்தையும், கோபமான மூஞ்சியையும் மட்டும் பொருத்தமாகக் காட்டும் அவர் இன்வெஸ்டிகேசன் சீன்களில் ஒட்டுதல் காண்பிக்க தவறி விட்டார். நாயகி என்ற பெயரில் வரும் நந்திதா ஸ்வேதா அழகாக இருக்கிறார்.. சிங்கிள் மேன் ஆர்மி மாதிரி பத்திரிகையாளராக நடித்திருக்கும் ஜெயப்பிரகாஷ், மற்றும் ரிட்டயர்ட் போலீஸாக நடித்திருக்கும் நாசர் இருவரும் தனி ஸ்கோர் செய்கிறார்கள்

திகில் படத்துக்கு உரிய முழு பங்களிப்பைக் கொடுத்து சைமன் கே.கிங் கொடுத்து மிரட்டி இருக்கிறார். அதே ராசாமதியின் கேமரா ஒர்க்-கும் பலே சொல்ல வைக்கிறது. இவர்களிருவரை விட படத்தை பக்காவாக கத்திரிப் போட்டிருக்கும் பிரவீன் கே.எல், -க்கு ஒரு ஸ்பெஷல் பொக்கே கொடுத்தே ஆக வேண்டும்.

வழக்கம் போல் இது சரியில்லை, அப்படி பண்ணி இருக்கலாம் என்றெல்லாம் ஒரு சராசரி சினிமா ரசிகர்கள் சில பலர் அசால்டாக சொல்லலாம், ஆனாலும் க்ரைம் பாக்கெட் நாவல் ஒன்றை ஒரே மூச்சில் பார்த்த திருப்தியை இந்த கபடதாரி  கொடுத்திருப்பது உண்மை..!

நன்றி : ஆந்தை ரிப்போர்ட்டர்