The greatest show man of India – ராஜ்கபூர்!

தற்போது இந்தி தெலுங்கு தமிழ் என இந்தியத் திரைப்படங்கள் உலக அளவில் திரையிடப் பட்டு வசூலில் கொடிகட்டி பறக்கலாம்..சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பே இதற்கு முதன்முதலாய் விதை போட்டவர் நடிகர் ராஜ்கபூர்.. ரஷ்யாவில் ஜவஹர்லால் நேருக்கு அடுத்தபடியாக அறியப்பட்ட இந்தியர் ராஜ்கபூர்தான் என்பார்கள்.. அந்த அளவுக்கு அவரின் படங்கள் ரஷ்யாவில் அமோகமாக ஓடின..!

நடிப்பு தயாரிப்பு இயக்கம் மட்டுமின்றி சினிமா பற்றிய தொழில்நுட்பங்களும் ஜாம்பவானாக விளங்கியவர் ராஜ்கபூர். அதனால்தான் அவரை தி கிரேட்டஸ்ட் ஷோ மேன் ஃப் இந்தியா என்று பெருமையோடு பேசுவார்கள். இந்தியாவின் முதல் பேசும் படமான ஆலம் ஆராவில் (1931) நடித்த பிரிதிவிராஜ் கபூர் அவர்களின் மூத்த மகன்தான் ராஜ்கபூர்.. !

இன்றளவும் இந்தியாவின் நம்பர் ஒன் வசூல் படம் என்று பேசப்படுகிற mughal-e-azam (1960) படத்தில் அக்பர் ஆக வருவார் பிரிதிவிராஜ் கபூர்.. கம்பீரமான குரல் வளத்தோடு படம் முழுவதும் துவம்சம் செய்யும் அவரின் நடிப்பை காண கண்கோடி வேண்டும்..

அப்பேர்ப்பட்ட ஜாம்பவானுக்குப் பிறந்த மகன் என்றால் ராஜ்கபூரை பற்றி சொல்லவா வேண்டும்?

மூன்றே பாத்திரங்கள், நாரை மணிநேரம், இரண்டு இடைவேளைகள்.. 1964-ல் சங்கம் என்ற வண்ணப் படத்தை இப்படி கொடுத்து தேசத்தை இன்ப அதிர்ச்சிக்கு ஆளாக்கியவர் ராஜ் கபூர். அநியாயத்திற்கு நீளமான படம் என்றாலும் ஆனாலும் சலிப்பே வராமல் என்னமாய் காட்சிகளின் ஒட்டம், வைஜெயந்திமாலா அழகு, சாகா வரம் பெற்ற பாடல்கள் !!!

1964-ல் வந்த சங்கம் படம்மாதிரி, இன்றுவரை இவரை தவிர வேறு ஒருவரால் கொடுக்க முடிய வில்லையே.. என்ற ஏக்கம் இருக்கவே செய்கிறது.. நமது ஊட்டியையே நமக்கே வித்தியாசமாக அவ்வளவு அழகாக காட்டியவர்.. சினிமாவை நேசிப்பவர்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய படம், சங்கம்..

ஆவாரா, ஸ்ரீ420, சோரி சோரி, மேரா நாம் ஜோக்கர், தீஸ்ரி கஸம், சத்தியம் சிவம் சுந்தரம், ராம் தேரி கங்கா மேலி என காலத்தை விஞ்சி நிற்கும் இவரின் காவியங்கள்தான் எத்தனையெத்தனை.

எவர்கிரீன் ஹீரோ தேவ் ஆனந்த், டிராஜிடி ஹீரோ திலீப்குமார் ஆகியோருடன் சமகாலத்தில் பயணித்து மூவேந்தர்களில் முன்னணியாய் திகழ்ந்தவர்..1935ல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, இயற்கை எய்தும் வரை 53 ஆண்டுகள் திரையுலகோடு ஒட்டி உறவாடியவர்.. இவரின், சகோதரர்கள், பிள்ளைகள், பேரன்கள், பேத்திகள் என அனைவருமே இந்தி திரையுலகில் டாப்ஸ்டார்களாக வலம் வந்தவர்கள்தான்.

நான் அறிந்தவரை, இந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகனாக இருந்து தொழில் நுட்பம், ரசிகர்களின் ரசனை, பட வியாபார நுணுக்கம், பாடல் இசைக்கு அளவுக்கு அதிகமாக முக்கியத்துவம் என சகல விஷயங்களிலும் கொடிகட்டி பறந்த முதல் மேதை இவர்தான்..

மகன் ரிஷி கபூரை கதாநாயகனாகவும் டிம்பிள் கபாடியாவை (கமலின் நடித்த விக்ரம் பட நாயகி) கதாநாயகியாகவும் அறிமுகப்படுத்தி தயாரித்து இயக்கி 1973ல் ராஜ்கபூர் வெளியிட்ட பாபி படத்தை பாருங்கள்.. 47 ஆண்டுகள் கழித்தும் இன்றும் அவ்வளவு பிரஷ்ஷாக யூத் ஃபுல்லாக கலர்ஃபுல்லாக இருக்கும்..

நமது சென்னையிலேயே இரண்டு ஆண்டுகள் ஓடிய படம் என்றால் சும்மாவா?

ஏழுமலை வெங்கடேசன்