மனம் கவர்ந்த வில்லன் நடிகர் பி.எஸ். வீரப்பா!

0
626

இப்போதெல்லாம் நாயகியே கவர்ச்சி நடன மங்கை ரோல் பண்ணுவது போல் நாயகனே வில்லன் ரோலும் செய்யும் காலம். ஆனால் 1950களில் வந்த வில்லன்களில் மட்டும் அல்ல அதன் பிறகு 1960களில் வில்லன்களாக தமிழ்த் திரையில் வந்து போனவர்கள் எவரையும் விட தனி அடையாளம் கொண்டவர் பி எஸ் வீரப்பா. ஜஸ்ட் ஒரு குரூரச் சிரிப்பைக் கூட சகலரும் ரசிக்கும் விதத்தில் மாற்றி காட்டி மனம் கவர்ந்தவர் இந்த வீரப்பா. இவர் குறித்து நம்ம கட்டிங் கண்ணையா வழங்கும் சுவையான தகவல்கள் இதோ:

பி. எஸ். வீரப்பாவை ஒரு வில்லனாகத்தான் அவரைப் பல படங்களில் ரசிகர்கள் பார்த்தார்கள் என்றாலும் அன்றைய கதாநாயகர்களுக்கு இணையான உடற்கட்டு, முகவெட்டு கொண்டவர் . அதைவிட முக்கியமானது, அவருடைய தமிழ் உச்சரிப்பு. மிகத் தெளிவாக வசனங்களைப் பேசக்கூடியவர். அதனால்தான் வில்லனாக அவர் பேசிய வசனங்கள்கூட, கதாநாயகர்கள் பேசும் வசனங்களையும் மிஞ்சி மனதிலே நின்றது, நிற்கிறது. இன்றைய ‘பஞ்ச்’ வசனங்களுக்கு அவரே முன்னோடி.

“சபாஷ்.. சரியான போட்டி” என்ற அவரது குரல், ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’ படத்தில் இடம்பெற்ற ‘கண்ணும் கண்ணும் கலந்து’ பாடலுக்கு நடுவே ஒலிக்கும். அருமையான அந்தப் பாடலைவிடவும் வீரப்பாவின் குரல், ரசிகர்களை அதிகளவில் கவர்ந்தது. இன்றுவரையும் அந்த வசனம் உயிர்த்திருக்கிறது.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த ‘மகாதேவி’ படத்தில், “மணந்தால் மகாதேவி.. இல்லையேல் மரணதேவி” என்று வீரப்பா பேசிய வசனமும் தலைமுறை கடந்து உச்சரிக்கப்படுகிறது.

இத்தனைக்கும் எம்.ஜி.ஆர் நாயகனாக நடித்த ‘சக்கரவர்த்தி திருமகள்’ படத்தில்தான் “ஹா.. ஹா.. ஹா..” என வீரப்பா முதன்முதலாகத் தன்னுடைய டிரேட் மார்க் சிரிப்பை வெளிப்படுத்தினார். அதற்குத் திரையரங்கில் கிடைத்த பலத்த வரவேற்பைத் தொடர்ந்து, வீரப்பா நடித்த பல படங் களிலும் அதேபாணியில் அட்டகாசமாகச் சிரித்து அசத்தினார். அந்த சிரிப்பொலி கேட்டாலே, திரையரங்கம் அதிருமளவில் கைதட்டல் கேட்கும்.

ஒரு நடிகராக மட்டுமின்றி படத் தயாரிப்பாளராகவும் ஆகி ஆலயமணி, ஆனந்தஜோதி போன்ற பல வெற்றிப்படங்களை வீரப்பா தந்துள்ளார். அறிஞர் அண்ணா, கலைஞர் மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர், வி.என்.ஜானகி, என்.டி.ராமராவ், ஜெயலலிதா என 6 முதல்வர்களுடன் பணியாற்றும் வாய்ப்பு பெற்றவர் பி.எஸ்.வீரப்பா. அவருடைய நடிப்பிற்கும் சிரிப்பிற்கும் நடிகர்திலகம் சிவாஜிகணேசனே ரசிகராக இருந்தார் என்றால் அதைவிட வேறென்ன பெரிய விருது வேண்டும்?.

வில்லன் வீரப்பாவின் முக்கிய படங்கள் என்று சில சொல்வதென்றால்
மாடர்ன் தியேட்டர்ஸ் ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும் (1956)
’அண்டாக்கா கசம் ஆபுக்கா கசம் திறந்திடு சீஸே!’

மகாதேவி ( 1957 )
சாவித்திரியை அவர் காமம் பொங்கப் பார்க்கும் பார்வை. ’அடைந்தால் மகாதேவி! இல்லையேல் மரண தேவி!’

எம். என்.ராஜம் அவரைப்பார்த்து வெட்கம், நாணம் கலந்து ’அத்தான்’ என்று குழையும்போது எரிச்சலுடன் வீரப்பா ’சத்தான இந்த வார்த்தைகளில் செத்தான் கருணாகரன்!’ ’அப்படி அபசகுனமாக சொல்லாதீர்கள் அத்தான்’ என்று எம்.என்.ராஜம் உடனே பதறும்போது ’சொல்லுக்கெல்லாம் கொல்லும் சக்தி இருந்தால் உலகம் என்றோ அழிந்திருக்குமடி!’

சந்திரபாபுவிடம் சீறல் ’கிளியைக் கொண்டு வரச்சொன்னால் குரங்கைக் கொண்டு வந்து விட்டாயே!’

‘பெற்றவளுக்கில்லாத அக்கறை உனக்கென்னடி?’

ராஜராஜன் (1957)

’புகழ்ந்து பாடமாட்டானா இந்தப் புலவன்? பட்டினி போடுங்கள்! நான்கு நாள் பட்டினி கிடந்தால் கலிப்பா, வெண்பா என்று பொழிந்து தள்ளி விடமாட்டானா! ஹா ஹா ஹா ‘

நாடோடி மன்னன் (1958)

நாடோடி மன்னன் படத்தில் புதிய சட்டங்கள் பற்றி எம்.ஜி.ஆர் எடுத்துச்சொல்லும்போது ‘கற்பழித்தால் மரணதண்டனை.” என்ற சட்டம் குறித்து உடனே,உடனே வீரப்பா அதிர்ச்சியாகி முகத்தில் கடும்கோபக்குறி காட்டுவார். என்ன ஒரு வில்லத்தனம்!

அப்பேர்பட்ட வீரப்பா காலமான நாளின்று