பழம் பெரும் கஸல் பாடகர் பங்கஜ் உதாஸ் காலமானார்!

இசை உலகின் முடிசூடா மன்னனாகப் போற்றப்பட்ட பின்னணிப் பாடகர் பங்கஜ் உதாஸ் (72) காலமானார். இது இசைப் பிரியர்களையும் திரைத்துறையினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பாலிவுட்டில் காலத்தால் அழியாத பல கிளாசிக் ஹிட் பாடல்கலைக் கொடுத்தவர் பின்னணிப் பாடகர் பங்கஜ் உதாஸ். பத்மஸ்ரீ விருது பெற்ற இவர் . ஜமீன்தார் குடும்பத்தில், கடந்த 1951 மே 17 அன்று குஜராத் மாநிலம் ஜெட்பூரில் பிறந்தார். இவரது குடும்பத்தில் மூன்று சகோதரர்களில் இவர்தான் இளையவர். இவருடைய குடும்பம் ராஜ்கோட் அருகே உள்ள சர்க்காடி என்ற ஊரைச் சேர்ந்தது. அவரது தாத்தாவும் பாவ்நகர் மாநிலத்தின் ஜமீன்தார் மற்றும் திவானாக இருந்தார். அவரது தந்தை கேசுபாய் உதாஸ் ஒரு அரசு ஊழியர் மற்றும் இவரது தாயார் ஜிதுபென் உதாஸ் பாடல்களை மிகவும் விரும்பி பாடுவார். பங்கஜ் உதாஸ் மற்றும் அவரது இரண்டு சகோதரர்களும் இசையில் எப்போதும் நாட்டம் கொண்டிருந்தற்கு இதுவே காரணம் என்று கூறப்படுகிறது. குஜராத்தில் இருந்து பங்கஜ் குடும்பம் மும்பைக்கு குடிபெயர்ந்தது. அப்போது தன் இளைய சகோதரரோடு சேர்ந்து மேடைக் கச்சேரிகளில் பாடத் தொடங்கினார் பங்கஜ் உதாஸ்.

இத்தனைக்கும் பங்கஜ் சிறு வயதில் பாடகராக வருவார் என்று யாரும் நினைக்க வில்லை. அந்த நாட்களில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே போர் நடந்து கொண்டிருந்தது. இந்நிலையில், லதா மங்கேஷ்கரின் ‘இ மேரே வதன் கே லோகன்’ பாடல் வெளியிடப்பட்டது. பங்கஜ்ஜிக்கு இந்தப் பாடல் மிகவும் பிடித்து போகவே, இந்தப் பாடலை எந்த உதவியும் இன்றி அதே தாளத்தோடு இசையமைத்து பாடியுள்ளார். ஒரு நாள் பள்ளி முதல்வர் அவர் பாடகர் குழுவில் இருப்பதைக் கண்டு, பள்ளியின் பிரார்த்தனை குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு, ஒரு கலாசார நிகழ்ச்சியின்போது பங்கஜ்ஜின் பள்ளி ஆசிரியர் வந்து ஒரு கலாச்சார நிகழ்ச்சியில் பாடும்படி கேட்டுக் கொண்டார். பங்கஜ் ஜி ‘ஏ மேரே வதன் கே லோகன்’ பாடலைப் பாடினார். அவரது பாடல் அங்கு அமர்ந்திருந்த அனைவரையும் கண்ணீரை வரவழைத்தது. பார்வையாளர்கள் கரவொலி எழுப்பியபோது, ​​பார்வையாளர்களில் இருந்து ஒருவர் எழுந்து நின்று கைதட்டி அவருக்கு 51 ரூபாயை வெகுமதியாக வழங்கினார்.

கடந்த 1970ம் ஆண்டு பிரபல பாலிவுட் நடிகர் தர்மேந்திரா மற்றும் நடிகை ஹேமா மாலினி நடிப்பில் வெளியான ஒரு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான பங்கஜ் உதாஸ் பலநூறு பாடல்களை பாலிவுட் உலகில் பாடியுள்ளார். 1980-ம் ஆண்டு ’ஆஹாத்’ கஸல் ஆல்பத்தை வெளியிட்டு இவர் ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமானார்.

கடந்த 2018ம் ஆண்டு வரை அவர் திரையிசை மற்றும் கசல் கச்சேரிகளை அரங்கேற்றி வந்துள்ளார். மறைந்த ஜனாதிபதி அய்யா அப்துல் காலம் கைகளால் பத்ம ஸ்ரீ பட்டம் பெற்ற பங்கஜ், தனது 46 ஆண்டுகால இசை பயணத்தில் பலநூறு விருதுகளை பெற்றுள்ளார். கடந்த 1994ம் ஆண்டு இவருக்கு அமெரிக்காவின் லுபாக் டெக்சாஸின் கௌரவ குடியுரிமையும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த சில காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று பிப்ரவரி 26ம் தேதி காலமானார்.