டி.ஆர். சுந்தரம், தனது எந்த சினிமா தயாரிப்புக்கும் வெளியிலிருந்து பணம் கடனாக வாங்கு வதில்லை. தானே படத்திற்கான பட்ஜெட்டை தயாரித்து, குறித்த தேதியில் படப்பிடிப்பைத் தொடங்கி, குறித்த நேரத்தில் படத்தை வெளியிடுவார். தமிழ் நாட்டிலேயே வெளியிலிருந்து கடன் பெறாமல் சொந்தப் பணத்திலேயே படம் தயாரித்த ஒரே நிறுவனம், மாடர்ன் தியேட்டர்ஸ் ஒன்றுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
பட தயாரிப்பிற்காக அல்லாமல் ‘மாடர்ன் தியேட்டர்ஸ்’ நிறுவனத்தை வளர்ப்பதற்காக, சுந்தரம் 100 ரூபாய் மதிப்பில் 5000 பங்கு பத்திரங்களை வெளியிட்டு, அந்த காலத்திலேயே ஐந்து லட்சத்தை திரட்டினார். இப்பங்குகள் மாடர்ன் தியேட்டர்ஸ் பெயரில் வெளியிடப்பட்டன. படத் தயாரிப்பிற்காக தனது ஸ்டுடீயோ வில் நடிகர், நடிகைகள், மற்ற கலைஞர்கள் தங்கி பணிபுரிய, தனி குடியிருப்பு கட்டிக்கொடுத்தார்.
படப்பிடிப்பின்போது கறாரான மனிதராக தோற்றம் காட்டும் டி.ஆர்.எஸ், மற்ற விதங்களில் கலைஞர் களோடு சுமூகமான தயாரிப்பாளராக விளங்கினார். கலைஞர்கள் அவரை முதலாளி என்று அழைத்தனர். இன்றளவும் சினிமா உலகில் முதலாளி என்றால் அது டி.ஆர்.எஸ் தான்.
திராவிட இயக்க தலைவர்களாக பின்னாளில் விளங்கிய பலருக்கு மாடர்ன் தியேட்டர்ஸ் தாய்வீடு போன்று விளங்கியது.கருணாநிதி, எம்.ஜி.ஆர் கண்ணதாசன் உள்ளிட்டவர்கள் மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் பங்கேற்றதனால் புகழ்பெற்றனர். திரைப்பட பாடலாசிரியர்கள் மருதகாசி, கவி கா.மு.ஷெரிப் பாடல்கள் எழுதி புகழ் பெற்றது இங்குதான்.
பாடகர்கள் திருச்சி லோகநாதன், சீர்காழி கோவிந்தராஜன் டி.எம்.சௌந்தர ராஜன் போன்றோர் ஆரம்ப காலத்தில் தங்களை திறமையை வளர்த்துக் கொண்டதும் இந்த ஸ்டுடியோவில் தான். நடிகர் ஜெயசங்கர், மனோகர், நம்பியார் போன்ற திரைப்பட நட்சத்திரங்கள் பிரபலமடைந்ததும் இங்குதான்.
கண்ணதாசனின் திரையுலக பிரவேசம் நிகழ்ந்தது மாடர்ன் தியேட்டர்ஸில்தான். ‘சண்டமாருதம்’ என்ற தனது பத்திரிகையில் உதவி ஆசிரியராக கண்ணதாசனை நியமித்தார். கண்ணதாசன் முதன்முதலில் சினிமாவிற்கு பாட்டு எழுதியதும் மாடர்ன் தியேட்டர்ஸில்தான். அஞ்சலி தேவியையும், எம்.ஆர்.ராதாவையும் சினிமாவில் அறிமுகம் செய்ததும் மாடர்ன் தியேட்டர்ஸ்தான்.
கண்டிப்புக்கு பேர் போன சுந்தரம், படப்பிடிப்பின் போது ஒரு சர்வாதிகாரிப் போல்தான் நடந்து கொள்வார். தமிழின் முதல் கலர் படமான ‘அலிபாபவும் நாற்பது திருடர்களும்’ படத்தை தயாரித்தவரும் சுந்தரமே. பாரதிதாசனின் ‘எதிர்பாராத முத்தம்’ என்ற கதையை பொன்முடி என்ற பெயரில் சுந்தரம் தயாரித்தார். இப்படத்தை எல்லிஸ் ஆர்.டங்கன் டைரக்ட் செய்தார். இப்படம் 1950 ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்றது.
‘மந்திரி குமாரி’ என்ற நாடகம் தமிழ் மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டது. கருணாநிதி எழுதிய இந்த நாடகத்தை விலைக்கு வாங்கிய டி.ஆர்.சுந்தரம், ‘மந்திரகுமாரி’ என்ற பெயரில் படமெடுத்தார். எல்லிஸ் ஆர். டங்கன் என்ற வெளிநாட்டைச்சேர்ந்தவர் டைரக்டர் பொறுப்பை ஏற்றார். திரைப் படத்திற்கான திரைக்கதை, வசனத்தை எழுத, கருணாநிதி சேலம் வந்து, மாத சம்பளமாக ரூ500/- பெற்று திரைப்படத்தின் வசனத்தை எழுதிக் கொடுத்தார். கனல் பறக்கும் வசனங்கள் படத்தில் இடம் பெற்றது. படத்தின் கதாநாயகனாக, தளபதியின் வேடம் எம்ஜிஆருக்கு தரப்பட்டது
படத்தின் வில்லன் காதாபாத்திரம் பேசும் வசனங்கள் பரபரப்பாக பேசப்பட்டன. தன் காதல் மனைவி, தன் திரைமறைவு வாழ்க்கைக்கு இடையூறாக இருப்பதால், அவளை கொல்ல திட்டம் தீட்டி, மலையுச்சிக்கு கொண்டுவருகிறான் வில்லன். ஆனால் அதை புரிந்துகொள்கிற மனைவி, தன் சாமர்த்தியத்தால் அவனையே கொன்று, தான் தப்பிக்கும் உத்தியை மக்கள் ரசித்து பார்த்தனர். படம் பெரும் வெற்றி பெற்றது.
மனோரமாவை காதானாயகியாக நடித்த’கொஞ்சும் குமரி’ படம் தயாராகிக் கொண்டிருந்த சமயம்தான் அந்த துக்ககராமான நிகழ்வு நடந்தது. சாதனைகள் பல படைத்த சுந்தரம், திடீர் மாரடைப்பால் 1963 ஆகஸ்ட் 29 ஆம் தேதி நாள், சேலத்தில் மரணமடைந்தார். டி.ஆர்.எஸ்.டி.ஆர். எஸ் மரணத்திற்குப்பிறகு அவரது மகன் தொடர்ந்து படங்களை எடுத்தார். இருப்பினும் கால மாற்றத்தால் தங்களை மெருகேற்றிக்கொள்ளமுடியாத சூழலில், மாடர்ன் தியேட்டர்ஸ் கொஞ்சம் கொஞ்சமாக படங்கள் எடுப்பதை நிறுத்திக்கொண்டது.
1937 முதல் 1982 வரை மாடர்ன் தியேட்டர்ஸ் உருவாக்கிய படங்களின் எண்ணிக்கை 136. இதில் டி.ஆர்.எஸ். தயாரித்தது 98 படங்கள். இதில் டி.ஆர்.எஸ் இயக்கியது 55 படங்கள். 1937-ல் சதி அகல்யாவில் தொடங்கி 1963ல் எடுக்கப்பட்ட ‘யாருக்கு சொந்தம்’ வரை (சுமார் 27ஆண்டுகளில்) 52 தமிழ்படங்களையும், ஏழு சிங்கள படங்களையும், எட்டு மலையாளப்படங்களையும் மற்றும் தெலுங்கு, கன்னடம் இந்தி ஆங்கிலம் உட்பட மொத்தம் 98 படங்கள் தயாரித்து அவற்றில் 55 படங்களை இயக்கியும் சாதனை படைத்தவர் சுந்தரம்.
.##தமிழ் சினிமாவின் தவிர்க்கவியலாத அடையாளமாகவும், ஏராளமான திரைக்கலைஞர்க ளுக்கும் தாய் வீடாக விளங்கிய ‘மாடர்ன் தியேட்டர்ஸ்’ டி.ஆர்.சுந்தரம் பிறந்த தினம் இன்று !