கோலிவுட்டில் அரசல் புரசலாக வெடித்து புதாகரமான விவகாரத்தால் திணறிக் கொண்டிருந்த தமிழ்த் திரையுலகத்தில் திடீர் திருப்பமாக புதிய தமிழ்த் திரைப்படங்கள் வரும் தீபாவளி தினத்தன்று வெளியாகவுள்ளன.
வி.பி.எஃப். கட்டணம் தொடர்பாக தயாரிப்பாளர்கள் சங்கங்களுக்கும், கியூப் நிறுவனத்திற்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலால் புதிய திரைப்படங்கள் திரையிடுவது நிறுத்தப்பட்டிருந்தது. இந் நிலையில் கியூப் நிறுவனம் அதிரடியாக இந்த நவம்பர் மாதம் வரையிலும் வி.பி.எஃப். கட்டணம் ரத்து என்ற சலுகையை அறிவித்தது.
இந்த ரத்து சலுகையை எதிர்பார்க்காத தயாரிப்பாளர் சங்கங்கள் இன்று அவசரமாக கூடி இது பற்றி விவாதித்தன. பின்பு இந்த 2 வார சலுகையைப் பயன்படுத்தி புதிய திரைப்படங்களை வெளியிடுவது என்று ஒருமித்தக் கருத்தினை எடுத்துள்ளன.
தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவரான இயக்குநர் இமயம் பாரதிராஜா இது குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், “திரைப்படங்கள் தயாரிப்பதே அதை வெளியிடுவதற்காகத்தான். திரைத்துறை சங்கங்கள் இருப்பது அதன் உறுப்பினர்கள் நலனுக்குத்தான். VPF சம்மந்தமான எங்கள் சங்கத்தின் நிலைப்பாட்டை நேற்று தெரிவித்திருந்த நிலையில் ‘ஆடு நனைகிறதே என ஓநாய்’ அழுத கதையாக, டிஜிட்டல் புரொஜெக்சன் நிறுவனங்கள் திடீரென்று ‘VPF கட்டணம் தற்காலிகமாக 2 வாரங்களுக்கு ரத்து’ என அறிவித்து இருக்கின்றன. நல்லது..!
திரையரங்கங்களுடன் எங்களுக்கு பங்காளி சண்டை போன்ற சூழ்நிலை நிலவி வரும் நிலையில், தயாரிப்பாளர்களையோ, திரையரங்கங்களையோ பாதிப்பது எங்கள் நோக்கமல்ல.பிரித்தாலும் சூழ்ச்சியாக டிஜிட்டல் நிறுவனங்கள் தற்போது VPF கட்டணத்தை விலக்கியிருந்தாலும் அது 2 வாரங்களுக்காவது தயாரிப்பாளர்களுக்கு பயன்படும் பட்சத்தில் இதை எங்களது சிறு வெற்றியாகவும் கருதி, VPF கட்டணம் இல்லாத இந்த 2 வாரங்களில் மட்டும் எங்களது திரைப்படங்களை திரையிட முடிவு செய்துள்ளோம்.
அதேசமயம் VPF கட்டணத்தைக் கட்டி படங்களை திரையிடுவதில்லை என்ற நிலைப்பாட்டில் நாங்கள் இப்போதும் உறுதியாக உள்ளோம். விரைவில் நல்ல, நிலையான ஒரு தீர்வை எட்டுவதிலும் உறுதியாக உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்…” என்று தெரிவித்திருக்கிறார்.
இதனால் தீபாவளிக்கு புதிய திரைப்படங்கள் வெளியாவதில் இருந்த சிக்கல்கள் நீங்கியிருக்கின்றன.
தயாராகி வெளியாக காத்திருக்கும் புதிய திரைப்படங்களில் சந்தானம் நடித்த ‘பிஸ்கோத்’, ‘இரண்டாம் குத்து’, ‘களத்தில் சந்திப்போம்’, ‘எம்.ஜி.ஆர். மகன்’ ஆகியவை தீபாவளி ரேஸில் உள்ளன.
இவற்றில் எந்தெந்த படங்கள் வெளியாகும் என்பது நாளைக்குள் தெரிந்துவிடும்..!