சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ரெடியாகும் ’கனா’ ஷூட் ஓவர்!

வளர்ந்த நடிகர், பாடகர், பாடலாசிரியர் எனப் பல திறமைகள் கொண்ட சிவகார்த்திகேயன், ‘கனா’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக மாறியிருக்கிறார். அவருடைய கல்லூரித் தோழரும், நடிகர், பாடலாசிரியர், பாடகர் எனப் பன்முகங்கள் கொண்டவருமான அருண்ராஜா காமராஜ், இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட்டராக ஆக விரும்பும் மகளுக்கும், அதற்கு ஆதரவாக இருக்கும் தந்தைக்கும் இடையிலான சம்பவங்கள்தான் படத்தின் கதை. அப்பாவாக சத்யராஜும், மகளாக ஐஸ்வர்யா ராஜேஷும் நடித்துள்ளனர்.

சிவகார்த்திகேயனின் இன்னொரு கல்லூரித் தோழரான திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார். இவர் ஏற்கெனவே ஆதி, நிக்கி கல்ரானி நடிப்பில் வெளியான ‘மரகத நாணயம்’ படத்துக்கு இசையமைத்துள்ளார். மோகன் ராஜன், ஜிகேபி, ராபிட் மேக், அருண்ராஜா காமராஜ் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். இந்தப் படத்தின் இசை உரிமையை சோனி மியூஸிக் நிறுவனம் வாங்கியுள்ளது.

பி.தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, கலை இயக்குநராக லால்குடி என்.இளையராஜா பணியாற்றுகிறார். சிவகார்த்திகேயனுடன் இணைந்து கலையரசு என்பவர் படத்தைத் தயாரித்து வருகிறார். ‘கனா’ என்பதற்கு கீழே ‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என டேக்லைன் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு, திருச்சியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நேற்று முடிவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதையடுத்து இதற்கான நன்றி விழாவை படக்குழு கோலாகலமாக நேற்று நடத்தியுள்ளது.

இந்த விழாவில் சிவகார்த்திகேயன், அருண்ராஜா, ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு உரையாடியுள்ளனர். இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலர் விரைவில் வெளியாகவுள்ளது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் வெளியீடு தேதியினையும் விரைவில் படக்குழு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.