தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கான தேர்தல் எப்போ? யார்? எப்படி போட்டி?

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பதவிக் காலம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முடிவடைந்து விட்டது. இதையடுத்து முடங்கி கிடந்த பணிகளை மேற்கொள்ள மாவட்ட பதிவாளராக சேகர் என்பவரை சங்கத்தின் தனி அதிகாரி யாக தமிழக அரசு நியமித்தது. ஆனால், தனி அதிகாரி நியமனத்தை எதிர்த்து அப்போது தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக இருந்த விஷால் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கின் விசாரணையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் மேலும் 3 மாதம் அவகாசம் வழங்கியது. அதன்படி தேர்தலை வரும் டிசம்பர் மாதம் 31ம் தேதிக்குள் நடத்தி முடிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தேர்தல் அதிகாரியான ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், தேர்தல் நடத்தி முடித்தது தொடர்பான அறிக்கையை 2021 ஜனவரி 30-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

இதன்படி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல் நடைமுறைகளுக்கான தேதிகள் நேற்றைக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.

வாக்குப் பதிவு அடுத்த மாதம், நவம்பர் 22-ம் தேதியன்று சென்னை அடையாறில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர்.-ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் அட்டவணை :

வேட்பு மனுவிற்கான விண்ணப்பங்கள் அக்டோபர் 15 முதல் 23-ம் தேதி மாலை 3.30 மணி வரையிலும் சங்க அலுவலகத்தில் தரப்படும். 100 ரூபாயை கட்டணமாகச் செலுத்தி விண்ணப்பத்தினை பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட வேட்பு மனுக்களை அக்டோபர் 16 முதல் 23-ம் தேதி மாலை 4 மணிக்குள் சங்க அலுவலகத்தில் இருக்கும் பெட்டியில் சேர்த்துவிட வேண்டும்.

வேட்பு மனுக்களை பரிசீலைனை செய்வது அக்டோபர் 23-ம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறும்.

வேட்பு மனுக்களை அக்டோபர் 24 முதல் அக்டோபர் 29-ம் தேதி மாலை 4 மணிவரையிலும் வாபஸ் பெற்றுக் கொள்ளலாம்.

அக்டோபர் 29-ம் தேதி மாலை 6 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும்.

அக்டோபர் 30-ம் தேதியன்று தேர்தலில் நிற்கும் இறுதி வேட்பாளர் பட்டியல்.. தேர்தலில் வாக்களிக்க இருக்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் தபால் அல்லது கூரியர் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

வாக்குப் பதிவு நவம்பர் 22-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று சென்னை, அடையாறு டாக்டர் எம்.ஜி.ஆர்.-ஜானகி கலை மற்றும் அறிவியல் கலைக் கல்லூரியில் காலை 8 மணி முதல் மாலை 4 மணிவரையிலும் நடைபெறும்.

தேர்தலில் போட்டியிடும் உறுப்பினர்களுக்கான கட்டண விபரங்கள் :

தலைவர் பதவிக்கு – ஒரு லட்சம் ரூபாய் மட்டும்

மற்ற நிர்வாகப் பதவிகளுக்கு – ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்

செயற்குழு உறுப்பினர் பதவிக்கு – ரூபாய் பத்தாயிரம் மட்டும்.