குடும்பத்தோடு தியேட்டருக்கு போய் பார்க்கத் தகுந்த பட லிஸ்டில் சேர்ந்த ‘காலேஜ் குமார்’ – விமர்சனம்!

சினிமாவை பொறுத்தவரை ஆவணப்படம் எடுப்பதற்கு ஏகப்பட்ட ஆதார தகவல்களை சேகரிக்க வேண்டும். குடும்பப் படங்களை எடுப்பதற்கு அக்கம் பக்க வீடுகளை முழுமையாகக் கண்காணிக்க வேண்டும். சண்டைப் படமெடுக்க ஏகப்பட்ட ஹாலிவுட் ஃபைட் படங்களைக் காண வேண்டும். ஆனால் காமெடிப் படமெடுக்க நன்றாகச் சிரிக்க தெரிந்த யூனிட் வேண்டும் .. அப்படியாப்பட்ட குழு இணைந்து வழங்கி இருப்பதுதான் காலேஜ் குமார் படம்.

இத்தனைக்கும் 2017-ம் வருஷம் கன்னடத்தில் விக்கி வருண், சம்யுக்த ஹெக்டே நடிப்பில் வெளி யாகி பெரும் வெற்றியைப் பெற்ற திரைப்படம்தான் இப்போது ‘காலேஜ் குமார்’ என்ற பெயரில் ரீ மேக் ஆகி வந்துள்ளது. அதிலும் இளையதிலகம் பிரபு நடிப்பில் 225வது திரைப்படமாக வந்துள்ள இதில் ராகுல் விஜய், பிரியா வட்லமணி, பிரபு, மதுபாலா, மனோபாலா ஆகியோர் நடித்துள்ளனர்.

இன்றைய இளைஞர்களுக்கும், அவர்களைப் புரிந்து கொள்ளாத சில பெற்றோர்களுக்கும் பாடம் எடுப்பதுபோல இந்தச் சமூகத்துக்குத் தேவையான ஒரு சப்ஜெக்ட்டுடன் வந்துள்ளது. அதாவது மகனை ஒரு படிப்பாளி ஆக்க மெனகெடும் அப்பாவின் ஆசையை கண்டு கொள்ளாமல் தறுதலை யாக அலைகிறான் மகன். அதை சுட்டிக் காட்டிக் கண்டித்த அப்பாவிடம் இந்த காலேஜ்-ஜூக்கு ஒரு நாள் நீ போய் படிச்சிப் பாரு- என்று எகத்தாளமாகக் கூறி விடுகிறான். அதை சவாலாக ஏற்று காலேஜ் போய் பட்டமெல்லாம் வாங்கும் அப்பாவைச் சுற்றியே கதை. அதிலும் இந்த அப்பா ரோலில் நடித்திருக்கும் பிரபு தன் நிஜ வயதை சொல்லி கேஷூவலாக ட்ராவல் செய்வதாலேயே படத்துடன் பயணிக்க முடிகிறது.

அதிலும் இளைஞர் கல்விக்கும், முதியோர் கல்விக்கும் இடையே நடக்கும் இந்தப் புதுக் கல்வி கற்றல் போராட்டத்தின் இடையிடையே  கன்னட சைட் டிஷ்களை நகைச்சுவை என்ற பெயரில் வழங்கி படமாக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் நிஜமாகவே ஒரு டைப் பாஸ் மூவிதான் என்பதில் சந்தேகமில்லை.

முன்னரே சொன்னது போல் ஹாலிவுட்டோ, பாலிவுட்டோ அல்லது கோலிவுட்-டோ சிரிக்க வைக்கும் படங்களை போய் பார்க்க ஒரு பெருங்கூட்டம் உலகம் முழுக்க உண்டு. அந்தக் கூட்டத்தை நம்பி எடுக்கப்பட்டுள்ள இந்த ரீ மேக்-கில் கன்னட ரசிகர்களின் மன நிலையை விட கொஞ்சம் மேம்பட்ட தமிழ் ரசிகர்களுக்காகக் கொஞ்சம் மாற்றி, புதுசாக யோசித்திருக்கலாம்.

ஆனாலும் உலகமெங்கும் கொரோனா, நாடெங்கும் குடியுரிமைப் பிரச்னை என்றெல்லாம் பீதி கிளப்பி வரும் சூழலில் மனிதனை சிரிக்க வைக்க முயலும் இந்த காலேஜ் குமார் வரவுக்கு ஒரு பொக்கே,

குடும்பத்தோடு தியேட்டருக்கு போய் பார்க்கத் தகுந்த பட லிஸ்டில் இருப்பதே தனித் தகுதி!

மார்க் 2.5 / 5