துப்பாக்கி முனை – விமர்சனம்!

முதலிலேயே நடிகர் திலகம் பேரனுக்கு ஒரு பொக்கேயை நீட்டி சபாஷ் சொல்லி விடலாம்.. ஆம்.. விக்ரம் பிரபுவுக்கு பல படங்களுக்கு பிறகு பெருமையுடன் சொல்லிக் கொள்ளும்படியான ஒரு படமாக வந்திருக்கிறது இந்த துப்பாக்கி முனை.

என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் போலீஸ் ஆபிசராக இருக்கும் நாயகன் விக்ரம் பிரபு (பிர்லா போஸ்).
தப்பு செய்பவர்களுக்கு மரணமே தண்டனை என்பதை ஆழமாக நம்பி அதன் வழி வாழ்வை நடத்திச் செல்கிறான். ஆனால் இப்படி உயிரை அழிக்கும் தொழில் செய்யும் ஒருவனுடன் இருக்க மாட்டேன் என பெத்த அம்மா நாயகனை விட்டு விலகி விடுகிறார், கூடவே இந்த கொலைகார வேலையை உதறிட்டு வந்து என்னை பார் என்று கறாராகச் சொல்லி காதலியும் பிரிந்து போய் விட ஒரு குழப்படி யான சூழலில் சஸ்பெண்ட் ஆகி தனிமையில் தவிக்கிறான் நாயகன். அப்போது அவனைத் தேடி வரும் ஒரு என்கவுண்டரில் குற்றவாளியின் உயிரைக் காக்க போராடுவது தான் கதை.

ஒரு என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் ஒரு குற்றவாளியின் உயிர் காக்க போராடும் முரண் என்கிற ஒற்றை வரி ரொம்ப பொருத்தமான திரைக்கதையாகியிருக்கிறது. 80 & 90 களில் பாக்கெட் மாத நாவல்களில் வரும் சுவாரஸ்ய கதை வடிவம் திரைக்கதையில் அழுத்தமாக தெரிகிறது.

அதிலும் ஹீரோ ஓபனிங் பாடல், ரொமாண்ஸ், டூயட் எல்லாவற்றையும் தவிர்த்து சொல்ல வேண்டிய கதையை மட்டும் அதுவும் சுவைப்பட சொன்னதற்கே இயக்குநரை எவ்வளவு வேண்டு மானாலும் பாராட்டலாம். இப்படி நேரடியான கதை சொல்லும் பாணி இறுதி வரை எங்கும் சுணங்காமல் பயணிக்கிறது.

குறிப்பாக ஒரே கதாபாத்திரத்தின் மீதான கதையாக அல்லாமல் அத்தியாங்களாக பிரியும் திரைக்கதை பாணி ரசிக்க வைக்கிறது.

ஆரம்பத்திலேயே சொன்னது போல் விக்ரம் பிரபு நீண்ட இடைவெளிக்குப் பிறகு அழுத்தமான நடிப்பு. முரட்டு ஆபீசராக இருக்கும் போது இறுக்கமான பார்வை, அம்மா காட்டும் பாசம் மற்றும் கோபத்தின் போது துடிக்கும் தொண்டைக் குழி துடிப்பு, காதலி பிரியும் போது விம்மும் உதடுகள் என்று இந்த பிர்லா போஸ் ரோலின் கனத்தை புரிந்து அதை தூக்கி நிறுத்துகிறார் இந்த சூரக் கோட்டைச் சின்ன சிவாஜி .

ஹன்ஸிகா ஒரே நாள் கால்ஷீட்டில் வந்து போயிருக்கிறார். M.S. பாஸ்கர் மறக்க முடியாத நடிப்பு. அதிலும் படத்தின் இறுதியில் அவர் முன் வைக்கும் கேள்விகள் தான் படத்தின் சாரம். ஒரு க்ரைம் த்ரில்லரில் பாலியல் வன்கொடுமைகளையும் குழந்தைகள் மீதான வன்கொடுமைகளையும் மிகைப்படுத்தாமல் அழுத்தமாகச் சொல்லியுள்ளார்கள்.

ஜஸ்ட் லைக் தட்-டாக பலரும் காட்டி வந்த ராமேஸ்வரம் இம்புட்டு அழகா? என்று வியப்பை ஏற்படுத்தியப்படி அதே ராமேஸ்வரத்தை வைத்து த்ரில்லான சூழலை  உருவாக்கி எடுத்து கொண்ட கதையோட்டத்தை செம்மைப்படுத்திய ஒளிப்பதிவாளர் ராசமதி பணி அட்டகாசம். பின்னனி இசை கதைக்குத் தேவையான பரபரப்பை கூட்டுகிறது. ஆனாலும் படத்தின் பெரும் பிரச்சனை நடக்க போவது அத்தனையும் பக்கத்துச் சீட் பக்கி வாய் விட்டு சொல்லும் அளவுக்கு சகலருக்கும் முன்னமே தெரிந்து விடுவது தான்.

அதாவது ஒரு முடிச்சை போட்டு ரசிகன் அவிழ்க்கும் முன் அவர்களே அவிழ்த்து விடுகிறார்கள். திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

அங்கங்கே பளிச்சிடும் சினிமாத்தனத்தையும், ஹிரோயிசத்தையும் குறைத்திருந்தால் அழுத்தமான திரில்லர் கிடைத்திருக்கும்.

ஆனாலும் இந்த துப்பாக்கி முனை நிமிர்ந்து பார்க்கும் பரபரப்பு.

நன்றி : ஆந்தை ரிப்போர்ட்டர்