லைகா,ஷங்கர் & ரஜினி கூட்டணியில் உருவான 2.0 பட விமர்சனம்!

கோலிவுட்டில் கடந்த 38 ஆண்டுகளாக ‘சூப்பர் ஸ்டார்’பட்டத்தைத் தக்க வைத்திருக்கும் ரஜினிகாந்த் மற்றும் பிரமாண்ட இயக்குனர் என்று பெயரெடுத்த ஷங்கர் மூன்றாவது முறையாக இணைந்து இருக்கும் திரைப்படம் ‘2.0’. சரியாக 8 ஆண்டுகளுக்கு முன்னால் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘எந்திரன்’ படத்தின் பார்ட் டூ-தான் இப்படம்.  ஒவ்வொரு படத்திற்கும் கதைக்கும் ஸ்கீரின் பிளேவுக்கும் ரொம்ப முக்கியத்துவம் கொடுக்கும் ஷங்கர் இம்முறையும் வழக்கம் போல்  சோஷியல் மெசெஜ் ஒன்றினை  முழுக்க முழுக்க விஷுவல் எபெக்ட்ஸை மட்டுமே நம்பி பிரமாண் டமாக கொடுத்திருக்கிறார். இதற்காக ஹை டெக்னாலஜியை அதிகம் கையாண்டிருப்பவர், ஆவி, அமானுஷய சக்தி, அறிவியல், விஞ்ஞானம் என்று கலந்துக் கட்டி கூட்டாஞ்சோறு சுவையில் ஒரு பக்கா விருந்தை படைத்திருக்கிறார். இந்தக் கூட்டாஞ்சோறில் சிலருக்கு பிடிக்காத காய்கறிகள் இருந்தாலும் பலருக்கும் பிடிச்ச பல்வேறு சுவைகள் இருப்பதென்னவோ நிஜம்.

படத்தின் ஆரம்ப காட்சியிலேயே செல்போன் டவர் ஒன்றின் மீது ஏறி ஒரு ஆள் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொள்வதில் தொடங்கி விடுகிறது கதையின் போக்கு. அதுவும் முப்பரிமாணத் தில் தொடங்கும் அந்த காட்சியை தொடர்ந்து நகரில் உள்ள எல்லா செல்போன்கள் மாயமாகின்றன. கூடவே செல்போன் வியாபாரி, நெட்வொர்க் முதலாளி, தொலை தொடர்பு அமைச்சர் என்று அடுத்தடுத்து அந்நியன் ஸ்டைலில் கொடூரமாக கொல்லப்படுகிறார்கள். கூடவே செல்போன் டவர்களும் அழிக்கப்படுகிறது. இதை செய்வது யார்?, எப்படி செய்கிறார்கள்?, என்பது குறித்து எந்தவித துப்பும் கிடைக்காமல் திணறும் அரசு, டாக்டர் வசீகரன் (ரஜினி) உள்ளிட்ட விஞ்ஞானி களிடம் ஆலோசனை நடத்துகிறது. அப்போது இத்தகைய சூழ்நிலையை சமாளிக்க, தன்னால் முன்னர் உருவாக்கப்பட்ட சிட்டி ரோபோவால் தான் முடியும் என்று ரஜினி யோசனை சொல்கிறார். ஆனால், கோர்ட்டால் தடை செய்யப்பட்ட சிட்டி ரோபோவால் மீண்டும் ஆபத்து வந்துவிடும் என்று கூறி அரசு மறுப்பு தெரிவித்து விட்டு பின்னர் வேறு வழியின்றி சிட்டி ரோபோவை இறக்க அனுமதி வழங்குகிறார்கள். இதையடுத்து டாக்டர் வசீகரன் சிட்டியை மீண்டும் அசெம்பிள் செய்கிறார். அதையடுத்து பாயிண்ட், பாயிண்டாக நடக்கும் அதகளம்தான் 2 பாயிண்ட் 0 கதை.

குறிப்பாக சொல்வதானால் இன்று உலக அளவில் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக அழிந்து கொண்டு இருக்கும் பறவையினங்களை தொடர்ந்து மனித இனத்தின் அழிவிற்கான தொடக்கம் என்ற ஒரு முக்கிய எச்சரிக்கையை தனது பாணியில் சொல்லி இருக்கிறார் ஷங்கர்.  இதற்காக விட்டாலாச்சார்யா பட ஆவிக்கதையைப் போல் இல்லாமல் நவீன மயமாகி விட்ட சூழலுக்கு ஏற்றவாறு வைப்ரேஷன், ஆரோ, பாசிட்டிவ் எனர்ஜி, நெகட்டிவ் எனர்ஜி என்று ரசிகர்களுக்கு புரிந்து விடும் என்று நம்பி சொல்லியுள்ளார். சூப்பர் ஸ்டார் மட்டுமல்லாமல் பாலிவுட் ஸ்டார் அக்ஷய் குமாரும் கிடைத்துள்ளதால் படத்தை வேற லெவலில் எடுத்துள்ளார்.

நடிப்பைப் பொறுத்தவரை ரஜினிகாந்த். டாக்டர்.வசீகரன், நல்ல சிட்டி, ரெட் சிப் சிட்டி, குட்டி என நாலும் வடிவங்களில் தனித் தனி வித்தியாசங்கள் காட்டி அசத்துக்கிறார் அதிலும் ‘நம்பர் 1, நம்பர் 2 எல்லாம் சின்னப் பசங்க விளையாட்டு, இங்க ஒன் அண்ட் ஒன்லி நான் மட்டும்தான்’ என்று கேஷூவலாக சொல்வதிலும், ‘செத்துப் பொழச்சு வர்றதே ஒரு சுகம்தான்’ என்று தன் நிஜ வாழ்க்கை அனுபவத்தை சொல்லும் போதும்.ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி சகலரும் அப்ளாஸ் பண்ணும் காட்சிகள். அந்த ரஜினியே குறிப்பிட்டது போல் படத்தின் முக்கிய ரோலில் வரும் அக்ஷயகுமார், பறவை ஆர்வலர் மற்றும் பக்‌ஷிராஜா என்று கிடைத்த வேடத்தில் எல்லாம் தனது தனித்துவத்தை வெளிக்காட்டியிருக்கிரார், எமி ஜாக்சன் ஜஸ்ட் லைக் ரோபோவாக மட்டுமின்றி சாகசக்கார ஹீரோயினாக படத்தின் முக்கிய ரோலில் தேவையான அளவு நடித்திருக்கிறார்.

ஷங்கரின் ஆஸ்தான ரைட்டர் சுஜாதா இடத்தில் இப்படத்தில் இடம் பிடித்திருப்பவர் ஜெயமோகன். இவரும் தன்னை சுஜாதாவே பாவித்துக் கொண்டு ஏகத்துக்கு நக்கல், நையண்டித்தனமான வசனங் களை  வழங்கி அசத்தியுள்ளார். ‘ இப்பத்திய ஜனங்களுக்கு பிடிச்சது டி வி சீரியல், சாப்பாடு என்ற ரேஞ்சில் நக்கலடிப்பதும், ’இப்ப செல்போன் இல்லைன்னா ரொம்ப நிம்மதியா இருக்கு.. அப்படின்னா ஏன் புது போன் வாங்க வந்தே? ஆனா செல்போன் பொண்டாட்டி மாதிரி’என்பதும் ‘ஓடிப்போறது என்னோட சாஃப்ட்வேர்லயே கிடையாது’ என்று சொல்வதும் , ’ஐ எம் வெயிட்டிங்’, ‘வாங்கடா செல்ஃபி புள்ளைங்களா’ என்பது மட்டுமின்றி, வில்லன்களை அழித்து விட்டு ‘ஜீரோ பேலன்ஸ்’ என்று சொல்வது, காலை உடைத்துவிட்டு ‘யுவர் கால் இஸ் டிஸ்கனெக்டட்’ என்பதையெல்லாம் காட்சிகளோடு கேட்கும் போது ரசிக்கவே தோன்றுகிறது.

நிரவ் ஷாவின் ஒளிப்பதிவுதான் இந்த 3டி நுட்பத்தில் வரும் ஒட்டு மொத்த படத்துக்கே முழு  பலத்தைக் கொடுத்திருக்கிறது என்றே சொல்லலாம். முத்துராஜின் கலை வடிவமைப்பும் பிரம்மாண்டமாக இருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை ஆங்காங்கே அதிக இசை ஓசையால் மிரட்டிகிறார், ஆனால் ரஹ்மானின் ஸ்பெஷாலிட்டியை காணவில்லை. அதிலும் தீம் மியூசிக் என்று படத்தில் இல்லாதது பெரும் குறைதான். படத்திற்கு பெரிய பலமான சவுண்ட் பணியை ஆஸ்கார் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி மேற்கொண்டுள்ளார். ஆனால் டால்பி அட்மாஸ்பியரில் இப் படத்தை பார்க்க முடியாததால் அந்த ஸ்பெஷல் எஃபெக்ட் சவுண்டை அனுபவிக்க முடியவில்லை..

மொத்தத்தில் 3 டி என்னும் டெக்னாலஜி அனுபவத்தை நம் தமிழ இயக்குநர் ஒருவர் புது விதமாக கண்ணை திறந்து கொண்டு ரசிக்கும் விதத்தில் வழங்கி இருக்கிறார். அதனால் விமர்சனங்கள் எதையும் பொருட்படுத்தாமல் இந்த  2.0-வை தியேட்டரில் போய் பார்த்து உண்மையைஉணர்ந்து கொள்ளுங்கள்.. மறக்காமல் உங்கள் குழந்தை, குட்டிகளை அழைத்து போய் காண்பித்தால் அவர்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சியை அளிக்கும்

மார்க் 3.5 / 5

நன்றி :ஆந்தை ரிப்போர்ட்டர்