இந்திய சினிமாவின் மாமேதை ‘ வி.சாந்தாராம்’!

0
316

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர் என பன்முகத் திறன் படைத்த ஏறக்குறைய 60 ஆண்டுகாலம் திரைப்படத் துறையில் கோலோச்சி வந்தவர் வி. சாந்தாராம். தமிழ் நாட்டில் டைரக்ஷனில் புதுமையைப் புகுத்திய ஸ்ரீதர், கே.பாலசந்தர் உள்பட பல டைரக்டர்களும், வட நாட்டில் உள்ள பல பிரபல டைரக்டர்களும் கூட, சாந்தாராமை தங்கள் வழி காட்டியாகக் கொண்டிருதாங்களாக்கும். அதையெல்லாம் விட குறிப்பாக சொல்லணுமுன்னா ‘‘படங்களை இயக்குவதற்கு என் மானசீக குருவாகத் திகழ்ந்தவர் வி.சாந்தாராம்’’ என்று புகழாரம் சூட்டிய எம்.ஜி.ஆர்., அவர் காலில் விழுந்து வணங்கினார் என்றால், சாந்தாராம் எப்படிப்பட்ட மாமனிதராக இருக்க வேண்டும்!

மராட்டிய மாநிலத்தில் உள்ள கோலாப்பூரில் ஓர், எளிய குடும்பத்தில் 1901–ம் ஆண்டு நவம்பர் 18–ந் தேதி சாந்தாராம் பிறந்தார். தந்தை பெயர் வன்குந்தரே. தந்தை சமண (ஜெயின்) மதத்தை சேர்ந்தவர். தாய் இந்து. சாந்தாராம் இளைஞராக இருந்தபோது 1918–ம் ஆண்டு கர்நாடகாவிலுள்ள ஊப்ளியில் ஒரு சிறிய தொழிற்சாலையில் அடித்தளப் பணியாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்பு, நல்ல வேலை தேடி மும்பை பயணமானார். ஒருவழியாக வடஇந்தியாவில் செயல்பட்டு வந்த பாலகந்தர்வ நாடகக் கம்பெனியில், நாடக நடிகராக சேர்ந்தார். நாடக அனுபவத்தைக் கொண்டு 1920–ம் ஆண்டில், பாபுராவ் மகாராஷ்டிரா பிலிம் கம்பெனியில் பல ஊமைப் படங்களில் நடித்தார். பல்வேறு பாத்திரங்களை ஏற்று நடிப்பில் தன்னைப் பக்குவப் படுத்திக் கொண்டார்.

பிறகு படிப்படியாக உயர்ந்து, கதாநாயகன் அந்தஸ்தை பெற்றார். 1925–ம் ஆண்டில் மகாராஷ்டிரா பிலிம் கம்பெனி தயாரித்த ‘சவுகரிபாஸ்’ என்ற கலைப்படத்தில் கதாநாயகனாக நடித்து மக்களின் கவனத்தைக் கவர்ந்தார். ஒரு ஏழை இளைஞன் வட்டிக்காரனிடம் சிக்கித் தவிப்பதே, இப்படத்தின் கதை. ‘சவுகரிபாஸ்’ தான் இந்தியாவின் முதல் கலைப்படமாகக் கருதப்படுகிறது. மேலும் இது இந்தியாவின் முதல் ‘நியோ– ரியலிஸம்’ (இயற்கை நடிப்பைக் கொண்ட) படமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. எனவே திரைப்படங்களில் ‘நியோ– ரியலிஸ’த்தை புகுத்தியவர் என்ற பெருமைக்குரியவராகிறார்.

இதன்பின்பு மகாராஷ்டிரா பிலிம் கம்பெனியிலிருந்து விலகி தாம்லே, பதேலால் என்ற திறமைமிக்க தன் நண்பர்களுடன் கூட்டு சேர்ந்து 1929–ம் ஆண்டில் கோலாப்பூரில் ‘‘பிரபாத் பிலிம் கம்பெனி’’ என்ற புதிய திரைப்பட நிறுவனத்தை உருவாக்கினார்.
மராத்தி, இந்தி மொழிகளில் பிரபாத் கம்பெனி, திரைப்படங்களை எடுக்க ஆரம்பித்தது. பின்னர் தங்கள் தயாரிப்பு நிறுவனத்தை புனாவுக்கு மாற்றி அங்கேயே கட்டிடம் கட்டி பிரபாத் ஸ்டூடியோவை நிர்மாணித்தனர். பிரபாத் ஸ்டூடியோஸ் அரங்கங்களில் பல்வேறு படப்பிடிப்புக்கள் தொடங்கின. புனா பிலிம் இன்ஸ்டிடியூட் எனப்படும் புனா திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிலையம் இன்று அங்குதான் இயங்கிவருகிறது என்பது ஒரு சிறப்புச் செய்தி.

இந்தியில் பேசும் படங்கள் வரத் தொடங்கிய 1931–ம் ஆண்டிலேயே, முதல் தமிழ்ப்படம் (காளிதாஸ்) வெளிவந்தது. தமிழ்ப்படங்களும் அகில இந்திய கவனத்தைக் கவர்ந்தன. எனவே, தமிழ்ப்படத் தயாரிப்பிலும் பிரபாத் கம்பெனி ஈடுபட்டது. 1934–ம் ஆண்டு தொடக்கத்தில் பிரபாத் படக் கம்பெனி தயாரித்த தமிழ்ப் படத்தின் பெயர் ‘‘சீதா கல்யாணம்’’.
பிற்காலத்தில் சினிமா நடிகராகவும், டைரக்டராகவும், வீணை வித்வானாகவும் புகழ்பெற்ற எஸ்.பாலசந்தரின் குடும்பமே இதில் நடித்தது. பாலசந்தரின் தந்தை பெயர் சுந்தரம் அய்யர். இவர் புகழ்பெற்ற வக்கீல். ஆயினும் பொழுது போக்காக சினிமாவில் நடித்து வந்தார். அவர் ‘‘சீதா கல்யாண’’த்தில், தசரத சக்கரவர்த்தியாக நடித்தார். அவருடைய மூத்தமகன் எஸ்.ராஜம் ராமராகவும், மகள் ஜெயலட்சுமி சீதையாகவும் நடித்தனர். (பிற்காலத்தில் பட்சிராஜா தயாரித்து எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்த ‘‘சிவகவி’’யில், ஜெயலட்சுமி பாகவதரின் மனைவியாகவும், ராஜம் வேடன் வேடத்தில் முருகனாகவும், சுந்தரம் அய்யர் குருகுல ஆசிரியராகவும் நடித்தனர்).

‘‘சீதா கல்யாணம்’’ படம் தயாரான போது எஸ்.பாலசந்தர் சின்னப் பையன். எனவே, ராஜசபையில் கஞ்சிரா வாசிக்கும் சிறுவனாக நடித்து, சாந்தாராமின் பாராட்டைப் பெற்று, தபேலா ஒன்றை அவரிடம் பரிசாகப் பெற்றார். இந்தப் படத்தை சாந்தாராம் டைரக்ட் செய்யவில்லை. தயாரிப்பை மட்டும் கவனித்தார். படத்தை பாபுராவ் பண்டர்கர் டைரக்ட் செய்தார். வசனம் எம்.எஸ்.சுப்பிரமணிய அய்யர். பாபநாசம் சிவன் எழுதிய பாடல்களுக்கு ஏ.என். கல்யாணசுந்தரம் இசை அமைத்தார். 24–2–1934–ல் வெளிவந்த இப்படம் வெற்றிகரமாக ஓடியது. பிரபாத் கம்பெனி வேறு சில படங்களையும் தயாரித்தது.

பிரபாத் பிலிம் கம்பெனியில் சாந்தாராமைப் பொருத்தமட்டில் நிலை என்ன? சாந்தாராம் மகாராஷ்டிரா பிலிம் கம்பெனியில் இருந்தபோது ‘நேதாஜு பால்கர்’ என்ற ஊமைப்படத்தை இயக்கிய முன் அனுபவம் இருந்தது. அதைக்கொண்டு 1934–ம் ஆண்டு ‘அம்ரித் மந்தன்’ என்ற திரைப் படத்தை இயக்கி வெற்றி கண்டார். இந்த வெற்றியின் உந்துதலால் 1925–ம் ஆண்டில் தான் கதாநாயகனாக நடித்த ஊமைப்படமான ‘சவுகாரி பாஸ்’ படத்தையே பேசும்படமாக 1936–ம் ஆண்டு தயாரித்து வெளியிட்டார். ஆனால் இப்படத்தில் அவர் நடிக்கவில்லை. இயக்குனராக மட்டும் பணியாற்றினார்.

அதே ஆண்டில் ‘அமர்ஜோதி’ என்ற படத்தையும் இயக்கினார். இப்படம் மகத்தான வெற்றிபெற்றது. இதில் நடித்த துர்கா கோட்டே, சாந்தே ஆப்தே, சந்திரமோகன் ஆகியோர் பெரும் புகழ்பெற்றனர். சாந்தாராமின் திரைப்படமான ‘துனியா நமானே’ பிரபாத் ஸ்டூடியோவின் புகழ்க்கொடியை உயர்த்திப் பிடித்தது. 1930–களில் சமூக வழக்கப்படி பெண்கள் வீட்டுக்குள் அடைந்தபடியே வாழவேண்டும் என்பது வழக்கு. இப்படத்தில் மனைவியை இழந்த ஒருவர், வளர்ந்த பிள்ளைகளுக்குத் தந்தையான முதியவர், ஒரு இளம் பெண்ணை ஏமாற்றித் திருமணம் செய்து கொள்கிறார். வெகுண்ட அந்த இளம்பெண் தன் வயோதிக கணவனோடு வாழ விரும்பவில்லை. ‘‘எந்தக் கஷ்டத்தையும் தாங்கத் தயார். ஆனால் ஒருக்காலும் அநியாயத்திற்கு உடன்படமாட்டேன்’’ என்று சூளுரைக்கிறாள்.

தன் தவறை உணர்ந்த கிழவன், தற்கொலை செய்து கொள்கிறான். மூடப்பழக்க வழக்கங்களில் மூழ்கிப்போன சமூகம், விதவை விவாகரத்தை அனுமதிக்காத காலம் அது. இளம் பெண் வயோதிகனுடன் வாழ்வதைவிட விதவையாக வாழ்வது மேல் என்ற கருத்துடன் படம் முடிகிறது. கண் மூடித்தனமாக சம்பிரதாயங்களை திணிக்கும் மூடர்களை படம் சாடியது. சாந்தாராமின் இயக்கம் படம் முழுவதும் பளிச்சிட்டது.

1939–ம் ஆண்டில் ‘ஆத்மி’, ‘படோசி’ போன்ற கிளாசிக் திரைப்படங்கள் பிரபாத் டாக்கீஸ் தயாரிப்பாக வெளிவந்தன. பின்னர் புனாவில் பிரபாத் பிலிம் ஸ்டூடியோவை மூடிவிட்டு, 1939–ம் ஆண்டு சாந்தாராம் மும்பை நகரில் ‘ராஜ்கமல் கலாமந்திர்’ என்ற பெயரில் ஒரு ஸ்டூடியோவையும், ‘சாந்தாராம் புரடெக்ஷன்ஸ்’ என்ற ஒரு தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி செயல்பட ஆரம்பித்தார்.

ராஜ்கமல் ஸ்டூடியோவில் அவர் முதலாவதாக இயக்கிய படம் ‘‘சகுந்தலா’’. இதில் ஜெயஸ்ரீ கதாநாயகியாகவும், சந்திரமோகன் கதாநாயகனாகவும் நடித்திருந்தனர். படம் 1943–ல் வெளிவந்து பெரிய வெற்றி பெற்றது.

1946–ம் ஆண்டு சாந்தாராம் கதாநாயகனாக நடித்து இயக்கிய படம் ‘‘டாக்டர் கோட்னீஸ் அமர் கஹானி’’. இது, உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம். சீனாவுக்கும், ஜப்பானுக்கும் நடந்த போரின் போது, காயமுற்ற சீனர்களுக்கு சிகிச்சை செய்ய இந்தியாவில் இருந்து பல டாக்டர்கள் சென்றனர். அவர்களில் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த கோட்னீஸ் என்ற இளம் டாக்டரும் ஒருவர். அவருக்கு உதவியாக கிங்யாங் என்ற சீன நர்ஸ் (ஜெயஸ்ரீ) பணி புரிகிறாள். இருவருடைய நட்பு, காதலாக மலர்கிறது. திருமணம் செய்து கொள்கிறார்கள்.

போர் முடிவில், சீனப் படைகள் தப்பி ஓடி, ஒரு பள்ளத்தாக்கில் தங்குகின்றனர். அங்கு, இனம் தெரியாத தொற்று நோய் பரவுகிறது. டாக்டர் கோட்னீஸ் சிரமப்பட்டு அந்த நோய்க்கு மருந்து தயாரித்து, பலரை குணப்படுத்துகிறார். ஆனால், இறுதியில் அந்த தொற்று நோய் கோட்னீசையும் தாக்குகிறது. சிகிச்சை பலன் இன்றி, மரணம் நெருங்கும் தருணத்தில், தன் கர்ப்பிணி மனைவியை அழைத்து, இந்தியாவில் மராட்டிய மாநிலத்தில் வசிக்கும் தன் தாய் பற்றியும், குடும்பம் பற்றியும் கூறுகிறார்.

‘‘நீ நம் குழந்தையுடன் இந்தியாவுக்கு செல். நம் கிராமத்துக்கு போ. ரெயில் நிலையத்திற்கு வெளியே ஒரு மாட்டு வண்டியுடன் பெரியவர் ஒருவர் இருப்பார். அவரிடம் என் பெயரைச் சொன்னால், நம் வீட்டுக்கு அழைத்துச் செல்வார். அங்கு என் தாயாரைப் பார். அவர் உன்னையும், நம் குழந்தையையும் ஏற்றுக் கொள்வார்’’ என்று கூறியபடி உயிர் துறப்பார். இந்த இறுதிக் காட்சியை மவுனமாகவே படமாக்கி இருப்பார். சாந்தாராம். பார்ப்பவர்கள் கண்கலங்கி விடுவார்கள். இந்தப்படம் இந்தியாவிலும், சீனாவிலும் படமாக்கப்பட்டது. இந்தியில் மட்டுமின்றி, ஆங்கிலத்திலும் படத்தை வெளியிட்டார், சாந்தாராம்.

சாந்தாராமின் பார்வை மீண்டும் தமிழ்நாட்டை நோக்கித் திரும்பியது. 1949–ல் ‘அப்னா தேஷ்’ என்ற படத்தை இந்தியில் தயாரித்து இயக்கினார், சாந்தாராம். கள்ளமார்க்கெட்டைக் கண்டித்தும், தேச பக்தியை தூண்டும் விதத்திலும் தயாரிக்கப்பட்ட இப்படத்தில், புதுமுகம் புஷ்பா ஹன்ஸ் கதாநாயகியாகவும், சதீஷ் கதாநாயகனாகவும் நடித்தனர். இந்தப்படத்தை ‘‘நம் நாடு’’ என்ற பெயரில் மொழி மாற்றம் செய்து தமிழில் வெளியிட்டார். படத்தில் எம்.எல்.வசந்தகுமாரி பின்னணியில் பாடியிருந்தார். ‘‘நமது நாடு, நமது நாடு நம் நாடே’’, ‘‘ஜெய்ஹிந்த் என்று சொல்வோமே’’ என்ற பாடல்கள் இனிமையாக ஒலித்தன. இந்தப்படம் சுமாரான வெற்றியைத்தான் பெற்றது.

1950–ம் ஆண்டில் சாந்தாராம் இயக்கத்தில் வந்த ‘‘தஹேஜ்’’ (வரதட்சணை) என்ற படம் மகத்தானது. ஜெயஸ்ரீ–கரன்திவான் இணைந்து நடித்த இந்தப்படத்தில், ஜெயஸ்ரீயின் தந்தையாக பழம்பெரும் நடிகர் பிருத்விராஜ் கபூர் (ராஜ்கபூரின் தந்தை) நடித்திருந்தார்.

மகளை வாழவைக்க முடியாமலும், வரதட்சணை கொடுக்க முடியாமலும், கவுரவத்தை விட்டுக் கொடுக்க முடியாமலும் தத்தளிக்கும் மனக் கொந்தளிப்பை, தன் பண்பட்ட நடிப்பால் அற்புதமாக சித்தரித்திருந்தார். உயிருக்குப் போராடும் கணவனைப் பார்க்கத் துடிக்கும் மகள் ஜெயஸ்ரீயை, ஜமீன் வழக்கப்படி பல்லக்கில் தான் தூக்கிச் செல்லவேண்டும். வீட்டில் இருப்பதோ, ஒரே வேலையாள். ஜெயஸ்ரீ பல்லக்கில் ஏறியதும், முன்னால் வேலைக்காரனும், பின்னால் பிருதிவிராஜ் கபூரும் பல்லக்கை தூக்கிச் செல்கின்றனர். பல்லக்கை தூக்கி வருபவர், வயது முதிர்ந்த தன் தந்தை என்பதை அறியாத ஜெயஸ்ரீ, விரைந்து செல்லுமாறு அழுகிறாள். பிருதிவிராஜ் கபூர், வேகமாக கிளம்பி பிறகு தள்ளாடுகிறார். மகளின் கண்ணீரால் தூண்டப்பட்டு, காலணிகள் கழன்று விழ, வெயில் சுட்டெரிக்க, வியர்வை ஆறாகப் பெருக, கண்கள் பஞ்சடைய இதையெல்லாம் பொறுமை யுடன் தாங்கிக் கொண்டு மகளை கணவன் வீட்டில் கொண்டு போய் சேர்க்கும் காட்சி, காண்போரின் உள்ளத்தை உருக்கி, கண்ணீரை வரச் செய்தது.

இதே கதையை, 1958–ம் ஆண்டில் ‘‘பொம்மைக் கல்யாணம்’’ என்ற பெயரில் அருணா பிலிம்சார் தயாரித்தனர். மகளாக ஜமுனாவும், தந்தையாக எஸ்.வி.ரங்காராவும் நடித்தனர். இந்தியில் பிருதிவிராஜ் கபூர் நடித்ததற்கு இணையாக எஸ்.வி.ரங்காராவும் சிறப்பாக நடித்தார்.

அமர்பூபலி (1952), பர்சாயின் (1953), தீன் பத்தி சார் ரஸ்தா (1954) என்று வரிசையாக வந்த புதுமையான புரட்சிகரமான படங்கள் சாந்தாராமுக்கு மேலும் புகழ்தேடித் தந்தன.

தீன் பத்தி சார் ரஸ்தா (மூன்று விளக்குகளும், நாற்சந்தியும்) கதை மிகவும் புதுமையானது. ஒரு வீட்டில் நாலைந்து மருமகள்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொருமொழி பேசுபவர்கள். அவர்களுக்குள் அடிக்கடி மோதல் ஏற்படும். அவர்களை வேலைக்காரி (சந்தியா) சமரசம் செய்து வைப்பாள். காரணம் அவளுக்கு அத்தனை மொழிகளும் தெரியும்! இந்தப் படத்தில், மும்பையை சேர்ந்த மீனாட்சி என்ற பெண் தமிழ்ப்பெண்ணாக நடித்தார். பரத நாட்டியம் ஆடியதுடன் ஒரு தமிழ்ப் பாட்டையும் பாடினார்.

1955–ம் ஆண்டு சாந்தாராம் வாழ்க்கையில் மட்டுமல்ல, இந்திய சினிமாப்பட வரலாற்றிலும் முக்கியமான ஆண்டு. அந்த ஆண்டுதான், முழுவதும் நடனங்கள் நிறைந்த உன்னதமான கலைப் படைப்பான ‘‘ஜனக் ஜனக் பாயல் பாஜே’’ என்ற டெக்னிக் கலர் படத்தை சாந்தாராம் எடுத்தார். சந்தியா கதாநாயகியாகவும், கதக் நடனக் கலைஞர் கோபி கிருஷ்ணா கதாநாயகனாகவும் நடித்தனர். கோபி கிருஷ்ணா நடிகர் அல்ல. நடனத்துக்காகவே கதாநாயகன் வேடத்துக்கு தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு டைரக்டர் சாந்தாராம் நன்கு பயிற்சி கொடுத்து, சிறப்பாக நடிக்க வைத்தார். கதை, நடிப்பு, பாடல்கள், காட்சி, அமைப்பு, கலை அம்சம், டைரக்ஷன் எல்லாவற்றிலும் இப்படம் சிறந்து விளங்கியது. பாராட்டு மழையிலும், வசூல் மழையிலும் சாந்தாராம் நனைந்தார்.60 வருடத்துக்கு முன் எடுக்கப்பட்ட படம். இன்று பார்த்தாலும், இப்போது எடுக்கப்பட்ட படம் போல் ஜொலிக்கும்.

1957–ம் ஆண்டு சாந்தாராம் கதை எழுதி, கதாநாயகனாக நடித்து, டைரக்ட் செய்த படம், ‘‘தோ ஆங் கேன் பாராஹாத்’’ (இரண்டு கண்களும், 12 கைகளும்). பயங்கரமான 6 கைதிகளை திருத்தி, மனிதர்களாக மாற்றுவதுதான் கதை. படம் மிகப்பிரமாதமாக அமைந்தது. வெளிநாடுகளில் நடந்த பட விழாக்களில் கலந்து கொண்டு, பரிசுகளை வாரிக்குவித்தது.  இந்தப்படத்தின் இறுதிக் காட்சியில், ஒரு கைதியை கொம்புகளால் குத்திக் கொல்ல ஒரு காளை மாடு சீறி வரும். ஜெயில் அதிகாரியான சாந்தாராம், பாய்ந்து சென்று கைதியைக் காப்பாற்ற காளையின் கொம்புகளைப் பிடிப்பார். காளை மாடு அவரைப் புரட்டி எடுக்கும்.இந்த சண்டையில், கைதியின் உயிரைக் காக்க தன் உயிரை தியாகம் செய்வார், சாந்தாராம்.

இந்தக் காட்சியைப் படமாக்கும் போது, காளையின் கூரிய கொம்பு, சாந்தாராமின் கண் அருகே பாய்ந்து விட்டது. படுகாயம் அடைந்த சாந்தாராம் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பல மணி நேரம் ஆபரேஷன் நடந்தது. சாந்தாராம் பார்வையை இழக்க நேரிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. கடைசியில், அந்த அபாயத்தில் இருந்து அவர் தப்பினார்.

சாந்தாராமின் மற்றொரு கலைப்படைப்பு ‘‘நவ்ரங்’’. கதாநாயகன் (மகிபால்) ஒரு கவிஞன். அவன் மனைவி ஜமுனா (சந்தியா) ஒரு கர்நாடகம். அவளை ‘‘மோகினி’’ யாக கற்பனை செய்து கொண்டு அற்புத கவிதைகள் எழுதுவான், கவிஞன். ஆனால் தன் கணவன், மோகினி என்ற யாரோ ஒரு பெண்மணியை காதலிப்பதாக நினைப்பாள், ஜமுனா. கடைசியில், ராஜசபையில் கவிஞன் பாடும் பாட்டு மூலம் உண்மையை ஜமுனா உணருவாள். மகிபால் தன் மனைவி ஜமுனாவை மோகினியாக உருவகப்படுத்தி கொண்டு பாடும் பாடல்களின் போது, விதம் விதமான நடனங்கள் ரசிகர்களை வசீகரித்தன. சி.ராமச்சந்திராவின் இசை அமைப்பில் பாடல்கள் அற்புதம். கடைசி பாடல் காட்சியின் போது, பிரமாண்டமான ஆலய மணிகள் தொங்க, அவற்றில் பெண்களும், சந்தியாவும் நடனம் ஆடுவார்கள். பிரமாண்டமான கண்கவர் காட்சி.

1943–ம் ஆண்டு கறுப்பு வெள்ளையில் எடுத்த ‘‘சகுந்தலா’’ படத்தை மீண்டும் 1961–ம் ஆண்டில் கலரில் எடுத்தார், சாந்தாராம். படத்தின் பெயர் ‘‘ஸ்திரி’’. முக்கிய படத்தில் ஜெயஸ்ரீ சகுந்தலா வாகவும், சந்திரமோகன் துஷ்யந்தனாகவும் நடித்தனர். ‘‘ஸ்திரி’’யில் சந்தியா சகுந்தலை வேடம் ஏற்றார். துஷ்யந்தனாக சாந்தாராமே நடித்தார். படம், வழக்கம் போல் கலை அழகுடன் விளங்கியது.

1964–ல்,தன் மகள் ராஜ்ஸ்ரீயை கதாநாயகி யாக அறிமுகப்படுத்தி, ‘‘கீத் கயா பத்ரோனே’’ என்ற படத்தை எடுத்தார். இந்தப் படத்தின் கதாநாயகன் ஜித்தேந்திரா.இந்தப் படம் மகத்தான வெற்றி பெற்றது. ராஜ்ஸ்ரீயின் அழகும் நடிப்புத் திறமையும், பட அதிபர்களை மிகவும் கவர்ந்தது. ராஜ்ஸ்ரீ பல படங்களுக்கு ஒப்பந்தமானார்.

சாந்தாராம் இன்னொரு படத்தில் தன் மகளை நடிக்க வைக்க விரும்பினார். ஆனால், அதற்கு ‘கால்ஷீட்’ கொடுக்க ராஜ்ஸ்ரீக்கு தேதி இல்லை!இதன்பிறகு சில படங்களை இயக்கிய சாந்தாராம், 1972–ல் ‘‘பிஞ்சரா’’ என்ற படத்தை எடுத்தார். இதில் கதாநாயகியாக சந்தியாதான் நடித்தார்.

73 வயதாகிவிட்டதால், சாந்தாராம் முன்போல் வேகமாக செயல்பட முடியவில்லை. தனக்கு ஓய்வு தேவை என்பதை உணர்ந்தார்.
சுமார் 14 ஆண்டுகள் படம் எடுக்காமல் ஒதுங்கி இருந்தார். பின்னர் 1987–ம் ஆண்டில் ‘‘ஜான்ஜார்’’ என்ற படத்தை எடுத்தார். அதுதான் சாந்தாராமின் கடைசி படம்.சுமார் 70 ஆண்டுகாலம் இந்தியப் பட உலகின் சக்கரவர்த்தி யாகத் திகழ்ந்த சாந்தாராம், 1990–ம் ஆண்டு இதே அக்டோபர் மாதம் 30–ந் தேதி மும்பையில் மரணம் அடைந்தார்.

இன்ஃபர்மேஷன் பை கட்டிங் கண்ணையா