பாட்டுக் கோட்டை கட்டிய பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்!

0
861

ஒருமுறை மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும் அவரது சகோதரர் கணபதி சுந்தரமும் பெண்பார்க்க, பக்கத்து கிராமமான ஆத்திக்கோட்டைக்கு சென்றிருக்கிறார்கள். கிராம வழக்கப்படி பெண் பார்த்து முடித்துவிட்டு தம்பியும் தமையனும் குதிரை வண்டியில் வீட்டுக்குத் திரும்பியிருக்கிறார்கள். வரும் வழியில், கவிஞரின் தமையனார், தம்பி பெண் நன்றாயி ருக்கிறாளா?  என்று வினைவியிருக்கிறார். அதற்குக் கவிஞர், அழகான பெண்ணண்ணே என்றிருக்கிறார். வீட்டுக்கு வந்ததும், தம்பி பெண் எனக்கல்ல உனக்குத் தான் என்றிருக்கிறார் கவிஞரின் தமையனார். உடனே கவிஞர் சந்தோஷ மிகுதியால் ஏட்டில் ஒரு நான்கு வரிகளை எழுதி வைத்துக் கொண்டார். அவர் அவ்வாறு எழுதி வைத்திருந்த வரிகளைத் தான் பிறகு அமுதவல்லி திரைப்படத்துக்குப் பாடலாக வழங்கினார்.

அந்தப் பாடல்,

“ஆடை கட்டி வந்த நிலலோ கண்ணில்
மேடை கட்டி ஆடும் எழிலோ குளிர்
ஓடையில் மிதக்கும் மலர்
ஜாடையில் சிரிக்கும் இவள்
காடு விட்டு வந்த மயிலோ நெஞ்சில்
கூடு கட்டி வாழும் குயிலோ!”
முதலில் கவிஞருக்குத் திருமணமான பின்னர்தான் அவரது அண்ணனுக்குத் திருமணமானது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

சின்னக்குட்டி நாத்தனா

கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் திரையுலகில் எழுச்சியும் கருத்துச் செறிவும் உள்ள பாடல்களை தருவதில் நிகரில்லாமல் விளங்கினார். அதே சமயம் அவர் நகைச்சுவையான பாடல் எழுதுவதிலும் அலாதியான திறமை உள்ளவர்…

பட்டுக்கோட்டையார் திரையுலகில் பிரபலம் ஆகாத காலத்தில் நடிகர் டி.கே.பாலச்சந்திரனின் நாடகக் குழுவுக்கு நிறைய பாடல்களை எழுதித் தந்து கொண்டிருந்தார்…ஒரு சமயம் அந்த குழுவுடன் பட்டுக்கோட்டையாரும் வெளியூர் நாடகம் ஒன்றிற்கு சென்றிருந்தார்… நாடகம் நடந்து முடிந்த பிறகு காண்ட்ராக்டர் தலைமறைவாகி விட்டதால், இவர்களுடைய குழுவினர் அம்போ என்று நின்றார்களாம்.

கடைசியில் எப்படியோ சென்னை வந்து சேருவதற்காக ஒவ்வொருவரும் தங்களிடமுள்ள காசுகளை துழாவி எடுத்துத் தந்து பஸ் டிக்கெட் எடுத்து வண்டியில் ஏறினார்களாம்…அந்த இக்கட்டான சூழ்நிலையில் தங்கள் குழுவினரின் வேதனையை மறந்து சகஜ நிலைக்குத் திரும்புவதற்காக பஸ்ஸிலேயே ஒரு பாட்டை எழுதி பட்டுக்கோட்டையார் பாட ஆரம்பித்தாராம்…

“சின்னக்குட்டி நாத்தனா
சில்லரையை மாத்தினா…
குன்னக்குடி லாரியில
குடும்பத்தையே ஏத்தினா…”

என்று துவங்கும் அந்தப் பாடலை பட்டுக்கோட்டையார் வாய்விட்டுப் பாடவும், குழுவில் உள்ள அனைவரும் அடுத்த கணமே கவலையை மறந்து கோரஸாகப் பாட ஆரம்பித்துவிட்டார்களாம்…இந்த பாடல் சிறிய மாற்றங்களுடன் பின்னர் வெளியான ஆரவல்லி படத்தில் இடம்பெற்றது.
♦♦♦ ♦♦♦ ♦♦♦ ♦♦♦

எடைக்குப்போன பாட்டுகள்

பட்டுக்கோட்டையாரும் ஓ.ஏ.கே. தேவரும் ராயப்பேட்டையில் எட்டு ரூபாய் வாடகைக்கு ஓர் அறை எடுத்துத் தங்கியிருந்தார்கள். அப்போது தேவருக்கும் நடிக்க வாய்ப்புகள் அதிகம் வரவில்லை. பட்டுக்கோட்டையாருக்கும் வாய்ப்பு இல்லை. ஓய்வு நேரத்தில் எல்லாம் கவிஞர் கையில் கிடைத்த நோட்டுப் புத்தகங்கள் தாள்களில் எல்லாம் ஏராளமான பாடல்களை எழுதி, எழுதிக் குவித்திருக்கிறார்.

ஒருநாள் பட்டுக்கோட்டையார் தேநீர் அருந்தச் சென்றிருந்தபோது, பழைய பேப்பர் வாங்கும் வியாபாரி ஒருவர் பழைய பேப்பர்… பழைய பேப்பர் என்று கூவிக்கொண்டே தெருவில் போனான்.தேவர் அவனைக் கையைத் தட்டி அழைத்தார். அறையில் இருந்த பழைய செய்தி ஏடுகளையும் காகிதங்களையும் நோட்டுப் புத்தகங்களையும் ஒன்றுவிடாமல் திரட்டி எடுத்து பேப்பர்காரனிடம் போட்டுவிட்டார் தேவர். கவிஞர் டீ குடித்துவிட்டு அறைக்குத் திரும்பி வந்தார். அறை சுத்தமாக இருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தார்.

அந்த மகிழ்ச்சி சிறிது நேரம் கூட நீடிக்கவில்லை. எல்லா குப்பைகளையும் எடுத்துப் பழைய பேப்பர்காரனிடம் போட்டுவிட்டேன் என்று தேவர் சொன்னபோது கவிஞருக்கு திக் என்றிருந்தது தாம் எழுதி வைத்திருந்த பாட்டு நோட்டுகள், காகிதங்கள் எல்லாம் பத்திரமாக இருக்கிறதா என்று சுற்றும், முற்றும் பார்த்தார். எதையும் காணோம். பாட்டு நோட்டுகளைக் காணோமே… எடுத்து வைத்திருக்கிறீர்களா? என்று அவர் கேட்டபோது, தேவர், அடப்போங்க… உங்கள் நோட்டும் நீங்களும்… உங்க பாட்டை ஒரு பட முதலாளியும் எடுத்துக் கொள்ளவில்லை… பழைய பேப்பர்க்காரனாவது மூன்று ரூபாய்க்கு எடுத்துக் கொண்டான் என்றார் சிரித்துக் கொண்டே. பட்டுக்கோட்டையார் பாவம்! அவருக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அதில் நல்ல, நல்ல பாட்டுக்கள் எல்லாம் எழுதி வைத்திருந்தேனே… என்றார் வருத்தம் தோய்ந்த குரலில், அட… அது போனால் என்ன? அதைவிட நல்ல பாட்டுக்களை உங்களுக்கு எழுதத் தெரியாதா என்ன? எழுதுங்களேன் என்றார் தேவர். தேவரின் அந்த நம்பிக்கை பொய்த்துப் போகவில்லை. படித்த பெண் என்ற ஒரு படத்துக்குப் பாட்டு எழுத கவிஞருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த படம் வெளிவருவதற்குள் மகேஸ்வரி என்ற படம் கவிஞரின் பாடலோடு வெளிவந்தது. அதன் பிறகு பட்டுக்கோட்டையாரின் பாடல்களுக்குப் பஞ்சமே இல்லை எழுதி எழுதிப் புகழ்பெற்றார்.அத்தனை பாடல்களும் ஓ.ஏ.கே. தேவர் குறிப்பிட்டதுபோல இன்னும் நல்ல பாட்டுகள் ஒன்றையொன்று விஞ்சும்படியான இன்னும், இன்னும் நல்ல பாடல்கள்!

-♦♦♦ ♦♦♦ ♦♦♦ ♦♦♦

இதுதான் வாழ்க்கை!

உங்கள் வாழ்க்கை வரலாறை எழுத வேண்டும் என்று பட்டுக்கோட்டையாரிடம் ஒரு நிருபர் வந்தார். அந்த நிருபரை தன்னுடைய அறையிலிருந்து அழைத்துக் கொண்டு தெருவில் நடக்கத் தொடங்கினார் கல்யாணசுந்தரம். சிறிது தூரம் நடந்தபின், ரிக்ஷாவொன்றில் ஏறி, மவுண்ட்ரோடு வந்தார்கள். பிறகு நகரப் பேருந்தில் ஏறி கோடம்பாக்கம் ரயில்வே கேட்டில் இறங்கினார்கள். ரயில்வே கேட்டைக் கடந்ததும் டாக்ஸி ஒன்றைப் பிடித்து வடபழனியில் ரெக்கார்டிங்காக அந்த ஸ்டூடியோவின் பாடல் பதிவுக் கூடத்தின் முன்பு இறங்கினார்கள்.

கூடவே வந்த நிருபர் அண்ணே! வாழ்க்கை வரலாறு நினைவூட்டினார்.இதுதான் வாழ்க்கை வரலாறு. முதலில் நடையாய் நடந்தேன். பஸ்ஸில் போனேன். ரிக்ஷாவில் போனேன். இப்போ டாக்ஸி.

************

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்னு ஒரு பிள்ளையாண்டான் எழுதின பாட்டைக் கேட்டீங்களா? என்று கவிஞர் தஞ்சை ராமையாதாஸ், உடுமலை நாராயணகவியிடம் கேட்டார்.

நல்லாதானே எழுதுறான்; என்ன சமாச்சாரம் என்றார் உடுமலை.

சட்டப்படி பார்த்தா எட்டடி தான் சொந்தம்னு எழுதியிருக்கான். அதெப்படி? ஆடி அடங்கும் மனிதனுக்கு ஆறடி நிலம்தானே சொந்தம் என்று தஞ்சை ராமையா தாஸ் கேட்க, இதிலென்ன கஞ்சத்தனம் வேண்டியிருக்குன்னு தாராளமா கூட ரெண்டடி இருக்கட்டுமே என்று பாடி இருக்கான். நல்லதுதானே! உனக்கும் எனக்கும் ஆறடி பத்தாதே! என்றார் உடுமலை நாராயணகவி.
♦♦♦ ♦♦♦ ♦♦♦ ♦♦♦

நண்டு செய்த தொண்டு!

ஆறடி உயரமுள்ள ஒரு வாலிபர். கழுத்தைச் சுற்றி முன் இருபுறமும் தொங்கும் வெள்ளைத்துண்டு; கையில் காகிதச் சுருள். ஜனசக்தி அலுவலகத்திற்குள் நுழைகிறார். ஆசிரியர் இருக்கும் இடம் பற்றி வினவுகிறார். அடுத்த நிமிடத்தில் அவர் முன்னால் சிரித்தபடி நிற்கிறார்.

என்னை உங்களுக்குத் தெரிகிறதா? செங்கப்படுத்தான்காடு தேர்தல் அலுவலகத்தில் நாம் சந்தித்ததை மறந்து விட்டீர்களா? நான் தான் கல்யாணசுந்தரம்!

தேர்தல் சமயத்தில் சந்தித்தை ஞாபகப்படுத்திக் கொண்டு, ஆமா! ஞாபகமிருக்கு! உட்காருங்கள். என்ன சமாச்சாரம்? என்று வினவினார் ஆசிரியர்.

நான் ஒரு கவிதை எழுதியிருக்கிறேன். அதை நீங்கள் அப்படியே ஒரு வரி விடாமல் ஜனசக்தியில் வெளியிட வேண்டும்!

படிக்காமல் எப்படி வெளியிடமுடியும்?

இதற்கு பதில் இளைஞரின் புன் முறுவல். காகிதச் சுருள் மேஜைக்கு வருகிறது.

நண்டு செய்த தொண்டு! _ அவரது கவிதையின் தலைப்பு. இரண்டு, மூன்று முறை திரும்பத் திரும்ப படித்த பின், அந்தக் கவிதையைப் பற்றிய கவிஞரின் மதிப்பீட்டை ஆசிரியர் அவர் முன்னாலேயே ஒப்புக் கொள்கிறார்.

கவிதையின் முடிவில், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்று இருந்தது.

சிரித்துக் கொண்டே ஆசிரியர் வினவினார்… கல்யாணசுந்தரம் என்பதே நீண்ட பெயர். அத்தோடு பட்டுக்கோட்டை என்று அடைமொழியும் தந்திருக்கிறீர்களே…

கம்பன், வள்ளுவன், இளங்கோ என்று கவிஞர்களின் பெயர்கள் சுருக்கமாக இருப்பது போல், உங்கள் பெயரையும் சுருக்கிக் கொள்ளலாமே! என்றார். அவர்கள் பெரிய மேதைகள், பெரிய கவிஞர்கள், அதனால் தான் சின்ன பெயர்களாக வைத்துக் கொண்டனர். நான் சின்ன ஆள். பெயராவது பெரிய பெயராக இருக்கட்டுமே… என்று பதில் கூறினார்.

 – கே.முத்தையா
சி.பி.ஏ. ஞானப்பிரகாசம்
சின்னக்குத்தூசி