தமிழ்த் திரையின் வரலாற்று ஆவணமாக இருந்த பிலிம் நியூஸ் ஆனந்தன்!

✍🏼இப்போது தமிழ் சினிமா பற்றிய விவரங்களும், தகவல்களும் இன்றைக்கு உள்ளங்கை போன் வழியே எளிதாகக் கிடைப்பதற்கு அடித்தளமிட்டவர் ஆனந்தன்.

ஆம்.. தமிழ் சினிமா பற்றித் தொடக்க காலம் முதல் பல்வேறு தகவல்களும் புகைப்படங்களும் கூகுளில் கிடைப்பதற்குக் காரணம் பிலிம் நியூஸ் ஆனந்தன். இவை அனைத்தும் அவர் தனிநபராகச் சேகரித்து வைத்தவை.

அதுபோன்ற தகவல்கள்தான் இணையதளங்களில் இன்று பதிவுசெய்யப்படுகின்றன.

இதற்கெல்லாம் அடிப்படை காரணகர்த்தாவான பிலிம் நியூஸ் ஆனந்தன் சேவையை அவரது மறைவு வரை தமிழ்த் திரையுலகமும் தமிழக அரசும் கெளரவிக்கவில்லை என்பதுதான் சோகம்.

அப்படியாப்பட்ட சாதனையாளர் பிறந்த நாளையொட்டி சினிமா பிரஸ் கிளப் டாட் காம்-மிற்காக சிறப்பு செய்தியாளர் கட்டிங் கண்ணையா சேகரித்த செய்திகள் இதோ:

இதுவும் கூகுளில் இருந்து சுட்ட தகவல்தான்;

ஆனந்தன் ஒரு சில பேட்டிகளில் சொன்ன தகவல்களிது:

✍🏼உங்கள் குடும்பப் பின்னணி பற்றிச் சொல்லுங்கள்?

🎬நான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே சென்னையில்தான். என் தாத்தா கிருஷ்ணசாமி முதலியார் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப் பேராசியராகப் பணிபுரிந்தவர். அவருக்கு நான்கு பிள்ளைகள். எனது அப்பா ஞானசாகரம், இரண்டாவது மகன். பேரன்கள் அனைவருக்கும் 80 ஆண்டுகள் கெட்டியான ஆயுள் என்று கணித்துச் சொல்லியிருக்கிறார் ஜோதிடர். ஆனால் எதிர்பாராத விதமாக எனது அண்ணன் கோபாலகிருஷ்ணனும் எனது சித்தப்பா மகன் ராம கிருஷ்ணனும் பெரியம்மை கண்டு ஒரே மாதத்தில் அடுத்தடுத்து இறந்துவிட்டார்கள்.

துக்கம் தாளாமல் ரயிலில் கிளம்பி வட இந்தியாவுக்கு சப்தபுரி தீர்த்த யாத்திரை போய் வந்திருக்கிறார் தாத்தா. பிறகு நான் பிறந்திருக்கிறேன். எனக்கு ஜாதகம் எழுத அப்பா மறுத்துவிட்டார். தாத்தா எனக்குப் பெயரும் வைக்கவில்லை. ஜாதகம் கணிக்காததால் ‘மணி’ என்ற செல்லப் பெயரில் அழைத்திருக்கிறார்கள். எங்கள் குடும்பம் ராயப்பேட்டையில் வசித்தது. அப்பா அரசு ஊழியர்.

எனக்கு ஐந்து வயதானபோது திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளியில் சேர்க்க அழைத்து சென்றார் அப்பா. பார்க்க அழகாக இருந்த என்னை தூக்கி தன் மடியில் அமர்த்திக்கொண்டார் தலைமையாசிரியர். உன் பெயர் என்ன என்று கேட்டார். நான் கொஞ்சமும் யோசிக்காமல் ‘அனந்த கிருஷ்ணன்’ என்றேன். என் அப்பாவுக்குத் தூக்கி வாரிப்போட்டது. எனக்குப் பெயர் வைக்காத விஷயத்தை அப்பா சொல்ல, ‘இந்தப் பெயர், மணி என்பதைவிட நல்ல பெயராக இருக்கிறதே! இதையே வைத்துவிடுவோம்’ என்ற தலைமையாசியர், என் பெயரை பி.ஜி. அனந்த கிருஷ்ணன் என்றே பதிவு செய்துவிட்டார். பிறகு அதேபெயர் நிலைத்துவிட்டது.

✍🏼உங்கள் இளமைக் காலம் எப்படியிருந்தது?

அந்தக் காலத்தில் பிள்ளைகளிடம் பெற்றோர்கள் மிகவும் கண்டிப்பாக இருப்பார்கள். ஆனால் எனது அப்பாவும் அம்மாவும் என்னைச் சுதந்திரமாக விளையாட விடுவார்கள். விளையாட்டு, படிப்பு இரண்டிலுமே முதல் மாணவனாக இருந்தேன். அஞ்சல் தலைகள் சேமிப்பேன். அப்பா அலுவலகத்தில் ஒரு ட்ராமா ட்ரூப் இருக்கும். அலுவலக நேரம் முடிந்ததும் நாடக ஒத்திகை நடக்கும். பள்ளி முடிந்து வந்ததும் அப்பா அலுவலகத்துக்குச் சென்றுவிடுவேன். அங்கே நடக்கும் நாடக ஒத்திகையை ரசிப்பேன். பிறகு நானும் நாடகங்கள் எழுத ஆரம்பித்தேன்.

பள்ளி இறுதி வகுப்பு முடிந்து கல்லூரியில் சேரவிருந்த நேரத்தில் ஜெமினி ஸ்டூடியோவில் கம்பெனி நடிகர்களுக்குத் தேர்வு நடக்கிறது உடனே போய் பெயர் கொடு என்றார் அப்பா. எனக்கு நடிப்பதில் ஏனோ விருப்பமில்லை. ஒளிப்பதிவாளர் ஆக வேண்டும் என்று பெயர் கொடுத்தேன். தேர்வு நடந்த அன்று நான் எடுத்த பல புகைப்படங்களைக் காட்டினேன். ஆனால் அங்கிருந்த டம்மி கேமராவைத் தூக்கச் சொன்னார்கள். நான் பயந்தேன். “கேமராவைத் தூக்கும் அளவுக்கு உடலில் தெம்பு வந்ததும் வா” என்று சொல்லி அனுப்பிவிட்டார்கள். அந்த ஏமாற்றத்தை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. என்றாலும் அப்பா ஆறுதல் சொன்னார்.

✍🏼புகைப்பட ஆர்வம் எப்போது ஏற்பட்டது என்று சொல்லவில்லையே?

🎬பத்திரிகைகளில் வரும் புகைப்படங்கள் என்னை ஆச்சரியப்படுத்தும். பிறந்தநாள் பரிசாக பாக்ஸ் கேமரா வேண்டும் என்று கேட்டேன். அப்பா வாங்கித்தந்தார். சந்தோஷம் தாங்க முடியவில்லை. வீட்டில் எல்லோரையும் படமெடுத்தேன். ஆடு, மாடு, நாய், பூனை, செடி, கொடி எனப் படமெடுத்தேன்.

ஒருமுறை பாகவதர் படத்தில் வருவதுபோல் டபுள் ரோல் இமேஜை வசதிகள் எதுவும் இல்லாத பாக்ஸ் கேமராவில் எடுக்க முடியுமா என்றொரு யோசனை. உடனே பக்கத்துவீட்டுச் சின்னப் பையனைக் கூப்பிட்டு உட்கார வைத்தேன். லென்ஸின் பாதியை மறைத்துக்கொண்டு முதலில் ஷட்டரை ஓப்பன் செய்துவிட்டு மூடினேன். பிறகு மறைக்காத பகுதியில் அட்டையை வைத்து மறைத்து இன்னொரு முறை ஷட்டரைத் திறந்து மூடினேன். ஸ்டூடியோவில் கொண்டுபோய் கழுவிப் பார்த்ததும் ஒரே நெகட்டிவில் சிறு கோடுகூட இல்லாமல் ஒரே பையனின் இரண்டு இமேஜ்கள். ஸ்டூடியோகாரர் ஆச்சரியப்பட்டுப்போனார். அப்பா, அம்மாவுக்கும் ஆச்சரியம் தாங்க முடியவில்லை.

✍🏼எப்போது திரையுலகில் நுழைந்தீர்கள்?

🎬கல்லூரி முடித்ததும் பிலிம் ரோல் போட்டுப் படமெடுக்கும் பெரிய கேமராவை அப்பா வாங்கிக்கொடுத்தார். படங்களை கழுவி பிரிண்ட் போட எத்திராஜு என்பவரின் ஸ்டூடியோவுக்குப் போவேன். ஒவ்வொரு முறையும் என்னிடம் படங்களைக் கொடுக்கும்போது பாராட்டுவார். என்னிடம் ஒருநாள் எங்கள் வீட்டுக்குப் போன் செய்து உடனே வா என்றார். போனேன். அங்கே என்.எஸ்.கே.வின் கேமராமேன் மோகன் ராவ் இருந்தார்!

அவர்தான் மோகன் ராவ் என்று அப்போது எனக்குத் தெரியாது. ‘இந்தப் பையன் சின்ன வயதிலிருந்து படமெடுத்துவருகிறான். பாக்ஸ் கேமராவில் டபுள் இமேஜ் எடுத்தவன், சினிமாவில் ஆர்வமுள்ளவன்’ என்று நான் எடுத்த படங்களை அவரிடம் காட்டினார். நடுவில் கோடு இல்லாமல் நான் எடுத்த டபுள் இமேஜ் படத்தைப் பார்த்து ஆச்சரிப்பட்ட அவர், என்னை ஒளிப்பதிவு உதவியாளராகச் சேர்த்துக்கொள்ள சம்மதித்தார். ஸ்டுடியோவுக்கு வந்துவிடு என்றார்.

கீழ்ப்பாக்கத்தில் இருந்த நியூஸ்டோன் ஸ்டூடியோவில் மோகன் ராவுக்கு தனி ரூம் இருந்தது. எனது புதிய கேமராவுடன் தினசரி அங்கே ஆஜாராகிவிடுவேன். அவர் சினிமா கேமராவைப் பற்றி நிறைய சொல்லிக்கொடுப்பார். எந்தெந்த ப்ளோர்களில் படப்பிடிப்பு நடக்கிறதோ அங்கெல்லாம் போய் வேடிக்கை பார் என்று அனுப்புவார். கழுத்தில் கேமராவை மாட்டுக்கொண்டு எல்லா ப்ளோர்களையும் சுற்ற ஆரம்பித்துவிடுவேன்.

மூன்றாவது ப்ளோரில் மேக் அப்புடன் உட்கார்ந்திருந்த சிவாஜியைப் பார்த்ததும் எனக்குக் கை பரபரத்தது. தயக்கத்துடன் அவரை நெருங்கி, “உங்களைப் படமெடுக்கலாமா?” என்றேன். “தாராளமா எடுத்துக்கோ” என்று சம்மதம் தெரிவித்தார். கேமரா ரோலில் இருந்த பன்னிரெண்டு பிலிம்களிலும் சிவாஜியைப் படம் எடுத்துத் தள்ளினேன். மறுநாள் படங்களைக் கொண்டுபோய் சிவாஜியிடம் காட்ட, “அருமையாக எடுத்திருக்கிறாய்!” என்று பாராட்டினார்.

ஸ்டூடியோவில் தயாரிப்பாளரோடு நட்சத்திரங்கள் இருப்பதுபோலவும், இயக்குநர் டைரக்ட் செய்வதுபோலவும் ஒர்க்கிங் ஸ்டில்ஸ் எடுத்து, அது என்ன படம், யார் இயக்குநர், தயாரிப்பாளர் யார் என்ற விவரங்களையும் எழுதி பத்திரிகைகளுக்கு கொடுக்க ஆரம்பித்தேன். நான் கொடுக்கும் படங்களை பிரசுரித்து போட்டோவுக்கு கீழே குறிப்புடன் வெளியிட ஆரம்பித்தார்கள். ஸ்டூடியோ வட்டாரத்தில் ‘பிலிம் நியூஸ்’ என்ற டைட்டில் என் பெயருடன் சேர்ந்துகொண்டது. எனக்கு மரியாதை கூடியது.

✍🏼எப்போது மக்கள் தொடர்பாளராக மாறினீர்கள்?

என்னை பி.ஆர்.ஓ. ஆக்கியவர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆரை நான் சந்திக்கக் காரணமாக இருந்தவர் வித்வான் வே. லட்சுமணன். நடிகர் சங்க பத்திரிகையான `நடிகன் குர’லுக்கு போட்டோ எடுத்துக் கொடுக்கும் வேலையை அவர் என்னிடம் ஒப்படைத்தார். நடிகர் சங்கத்துக்கு எம்.ஜி.ஆர். தலைவர் என்பதால் அவரைப் பார்க்க தினசரி அவரது வீட்டுக்குப் போவோம். அப்போது எம்.ஜி.ஆர். `நாடோடி மன்னன்’ படத்தைத் தயாரித்து, இயக்கி, நடித்துக்கொண்டிருந்தார். அப்போதெல்லாம் விளம்பர ஏஜென்சி வழியாகத்தான் படம் பற்றிய செய்திகளும் படங்களும் போகும். அப்போது மேனேஜராக இருந்த ஆர்.வீரப்பன் மேஜையில் நாடோடி மன்னன் படத்தின் விதவிதமான ஸ்டில்கள் இருந்தன. செய்திகள், படங்களை நான் தரட்டுமா என்று ஆர்.எம்.வீ.யிடம் கேட்டேன். அவர் ஒப்புக்கொண்டார்.

எனக்குத் தலைகொள்ளாத உற்சாகம். உடனடியாகப் படங்களையும் படம் பற்றிய கூடுதல் செய்திகளையும் சேர்த்துக் கொடுத்ததும் அடுத்த வெள்ளிக்கிழமையில் எல்லா பத்திரிகைகளிலும் நாடோடி மன்னன் பற்றிய செய்தி வெளிவந்துவிட்டது. விஷயம் அறிந்த எம்.ஜி.ஆர். என்னை அழைத்துவரச் செய்து பாராட்டினார். இனி நீதான் பத்திரிகை விவகாரம் எல்லாத்தையும் பார்த்துக்கணும் என்றார்.

நாடோடி மன்னன் வெளியாகி 100 நாள் ஓடியதும் அறிஞர் அண்ணா தலைமையில் படத்தில் நடித்த திரைக் கலைஞர்களுக்குப் பாராட்டு விழா நடத்தினார். எம்.ஜி.ஆர். முதல்முறையாக தொழில்நுட்பக் கலைஞர்கள் உதவி இயக்குநர்களுக்குக்கூட ஷீல்டு கொடுத்தார். விழா முடிந்து மேடையிலிருந்து எம்.ஜி.ஆர். இறங்கியதும் வித்வான் அவரிடம் விளையாட்டாக, “ஆனந்தனை’ மறந்துட்டீங்களே?” என்றார்.

உடைந்து போய்விட்டார் எம்.ஜி.ஆர்., “ஆனந்தா உன்னை நான் மறந்திருக்கக் கூடாது. என்னை மன்னிச்சுடுப்பா” என்று அவர் என் கைகளைப் பற்றிக்கொண்டபோது அவர் கண்கள் கலங்கி நா தழுதழுத்துவிட்டது. ஒரு வாரத்தில் தனியே ஒரு ஷீல்டு செய்து என்னை நடிகர் சங்கத்துக்கு அழைத்து எல்லோர் முன்னிலையிலும் கொடுத்து கவுரவம் செய்தார். அன்று அவர் கொடுத்த ஊக்கம் அவரது கடைசி படம் வரை தொடர்ந்தது.

பாலக்காடு சுப்பையா என்னை அழைத்து எனது படத்துக்கு வேலை செய்யுங்கள் என்றார். அந்தப் படம் எஸ்.எஸ். ராஜேந்திரன் நடித்த ‘ நாட்டுக்கொரு நல்லவன்’ அந்தப் படத்தின் டைட்டிலில்தான் ‘பொதுஜனத் தொடர்பாளர் பிலிம் நியூஸ் ஆனந்தன்’ எனப் போட்டார். பிரஸ் ஷோவில் என் பெயரைத் திரையில் பார்த்ததும் பத்திரிகைச் சகோதரர்கள் அனைவரும் கை தட்ட நான் அழுதுவிட்டேன். இப்படித்தான் திரைப்பட மக்கள் தொடர்பு என்ற துறை தமிழ் சினிமாவில் பிறந்தது.

பத்திரிகை ஆசிரியராக பணிபுரிந்து

🎬1) எனது கல்லூரித் தோழன் சி.டி.தேவராஜ் நடத்திய பிலிம் நியூஸ் பத்திரிகையில் நிருபராகவும் புகைப்பட கலைஞராகவும் பணிபுரிந்தது(1954) ஆனந்தன் – பிலிம் நியூஸ் ஆனந்தனாக மாறியதற்கு காரணமானவர்.

2) ஸ்டார் வாய்ஸ்(வார இதழ்) ஆசிரியராக பணிபுரிந்தது. வெளியிட்டவர் மயிலை குருபாதம் (தயாரிப்பாளர்).

3)பிலிம் நியூஸ் (மாத இதழ்) ஆசிரியராக பணிபுரிந்தது. வெளியிட்டவர் : டைமண்ட் பாபு (2006).

4)பிலிம் சேம்பர் – பத்திரிகையில் பணிபுரிந்து வருவது.

தயாரித்த புத்தகங்கள் பற்றி சொல்லுங்களேன்

🎬1) மாண்புமிகு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, தமிழக அரசின் முழு நிதி உதவியுடன் “சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு” நூல் தயாரித்தது(2004)

🎬2) சிவாஜி கணேசனுக்கு செவாலியே விருது வழங்கப்பட்ட போது “சாதனை மலர்” தயாரித்தது (1995).

🎬3) திரைக்கலைஞர்கள் விலாசங்கள் கொண்ட ‘திரைக்கலை தொகுப்பு’ – நூல் தயாரித்தது(1978).

🎬4) ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் தேதி அன்று ‘திரைப்பட புள்ளி விபரம்’ – என்ற பெயரில் திரைஉலகினருக்கும், பத்திரிகைகளுக்கு உபயோகப்படும் வகையில், 1954 முதல் ஆண்டு அறிக்கை நூல் இலவசமாக தொடர்ந்து வழங்கி வருவது.

🎬5) திரை நட்சத்திரங்களின் 100-வது படம் வெளிவரும்போது, ஜெயலலிதா, கே.ஆர்.விஜயா, கமல்ஹாசன் சிவக்குமார் ஆகியோருக்கு ஆல்பம் தயாரித்தது.

🎬6) கமலின் 200வது படமான ஆளவந்தான் படம் வெளியிட்ட அன்று படஆல்பம் நூல் தயாரித்தது(2001).

🎬7) சிவாஜியின் 150 படமான சவாலே சமாளி படம் வெளியான போது மலர் வெளியிட்டது(1971).

🎬8) கலைஞர் சின்ன அண்ணாமலை அவர்களுக்காக ‘நடிகர் திலகம்’ – என்ற பெயரில் புகைப்பட ஆல்பம் நூல் தயாரித்தது. காங்கிரஸ் தலைவர் திரு.காமராஜ நாடார் அவர்களால் வெளியிடப்பட்டது(1969).

🎬9) “நெஞ்சில் நிலைத்து நின்று, நினைவை விட்டு அகலாத கவிஞர்களின் திரை இசைப்பாடல்கள்” – என்ற பெயரில் கவிஞர்களின் ஒரு பாடல் தொகுப்பு நூல் தயாரிக்கப்பட்டது(2008).

✍🏼கண்காட்சிகள் அமைத்தது பற்றி சொல்ல முடியுமா?

🎬திரை உலகம் 50 ஆண்டை முன்னிட்டு, கண்காட்சி 10 நாட்கள் நடத்தப்பட்டது. சாதனைகள் செய்த கலைஞர் 10 பேரை கௌரவப்படுத்தப்பட்டனர்.(1981)

தமிழக அரசு சுற்றுலா பொருட்காட்சியில், சினிமா உலக கண்காட்சி தொடர்ந்து மூன்று முறை சென்னையில் நடத்தப்பட்டு மூன்றாண்டும் சிறந்த அரங்கு விருது கிடைத்தது.

மதுரை சுற்றுலா பொருட்காட்சியில் சினிமா உலக கண்காட்சி நடத்தி சிறந்த அரங்கு விருது கிடைத்தது.

உலகப் படவிழாவின் போது தெலுங்கு, மலையாளப்பட கண்காட்சி முறையே ஹைதராபாத்திலும் திருவனந்தபுரத்திலும் நடத்தப்பட்டது.

என்.டி.ஆரின் படகண்காட்சி ஹைதராபத்தில் ஆந்திரா பிலிம் சேம்பர் சார்பாக நடத்தப்பட்டது.

கமல்ஹாசன் பிறந்த நாளில் மூன்று முறை கண்காட்சி நடத்தப்பட்டது.

தெலுங்கு திரைப்பட வைர விழாவின் போது தெலுங்கு பத்திரிக்கையாளர் சங்கம் சார்பாக சென்னையில் நடத்தப்பட்டது.

திரைப்பட நடிகைகள் அஞ்சலி தேவி, ஜமுனா-வாணிஸ்ரீ ஆகியோரில் வெள்ளி விழாவின் போது ஹைதராபாத்தில கண்காட்சிகள் நடத்தப்பட்டன.

CINEMA TODAY சார்பில் “78 ஆண்டு தமிழ் சினிமா கண்காட்சி(2009)

பட்டங்கள்? (தகவல் ; கட்டிங் கண்ணையா)

🎬1) ‘கலைமாமணி – தமிழக அரசு (1991)
2) ‘கலைச் செல்வம் – நடிகர் சங்கம்(1997)
3) ‘திரைத்துறை அகராதி’ – கண்ணதாசன் மையம்
4) ‘நடமாடும் பல்கலைக்கழகம்’ – ராஜபாளையம் ரசிகர் மன்றம்
5) ‘1997- ம் ஆண்டின் சிறந்த மனிதர்’விருது அமெரிக்காவில், வடக்கு கெரோலினா சர்வகலாசாலை வாழ்க்கை வரலாறு கழகம் – வழங்கியது.
6) தெலுங்கு தயாரிப்பாளர் வெங்கண்ணசௌத்ரி “கலா பீடம்” விருது(1986)
7) காமராஜர் தேசிய சங்கம் “செய்தி சிகரம்”
8) “கலை மூதறிஞர்” – விருது (ராஜ்கதிரின் கலாலயா)
9) தென்னிந்திய திரைப்பட இயக்குனர்கள் சங்கம் “கௌரவ இயக்குனர்” விருதினை வழங்கி கௌரவித்தனர் (1989).
10) ‘நடமாடும் திரையுலகக் கலைக்களஞ்சியம்’ – சிவக்குமார்
11) ‘சினிமா செய்தி தந்தை’ – மௌலி
12) திரையுலக உ.வே.சா. – யூகி சேது

✍🏼விருதுகள்

🎬1. அஞ்சலி தேவியை தலைவராகக் கொண்ட வி.நாகையா நினைவு சாதனையாளர் விருது(2008).
2. லயன்ஸ் கிளப் இன்டர்நேஷனல் விருது
3. சென்னை மவுண்ட் ரோட்டரி கிளப் சிவாஜி விருது
4. புதுக்கோட்டை ரோட்டரி கிளப்
“Vocational Award ”2003
5. எனது 61-வது பிறந்த நாளை திரைஉலகம் சிறப்பாக நடத்தியது (1990)
6. தமிழக அரசு நடத்திய “நட்சத்திர இரவு” சிறப்பாக நடைபெற உதவியதற்காக முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களால் மோதிரம் அணிவிக்கப்பட்டது.
7. சிறந்த பி.ஆர்..ஓ விருது – தமிழ்நாடு டி.வி.பார்வையாளர் சங்கம்.

* 1989 -ல் திரைஉலக 75 ஆண்டு வைர விழவில் “அகில இந்திய சாதனை புரிந்தவர்கள் ” என்ற முறையில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை 75 பேரில் ஒருவராக தேர்ந்தெடுத்து கௌரவித்தது.

* 2002 -ல் பிலிம்நியூஸ் ஆனந்தன் 52 ஆண்டுகளாக சேகரித்து வைத்திருந்த திரைசம்மந்தப்பட்ட கலை பொக்கிஷங்களை தமிழக அரசு அரசுடமை ஆக்கிக் கொண்டது, அவைகளை வைத்து நிரந்தர கண்காட்சி ஒன்றினை அமைக்க திட்டம் வகுத்துள்ளது.

சாதனையாளர் விருதுகள்

🎬1. எஸ்.எஸ்.வாசன் விருது – எல்.வி.பிரசாத் விருது
2. சிவாஜி விருது – எம்.ஜி.ஆர்.சிவாஜி அகாடமி விருது(2003)
3. மெகா பைன் ஆர்ட்ஸ் எம்.ஜி.ஆர் விருது
4. மதி ஆர்ட்ஸ் அகாடமி காமராஜர் விருது
5. ஃttN விருது(2004)
6. வெரைட்டி பிலிம் விருது(2008)
7. சினிமா ரசிகர் சங்கம்- விருது மூன்று முறை 1980; 1988; பொன் விழாவில் 1995.
8. வல்லமை தாராயோ- இயக்குனர் மதுமிதா நடத்திய பாராட்டு விழா(2008)
9. ஸ்ரீ ராமானுஜர் டிரஸ்ட் விருது (2008)
10. வி.4 விருது
11. ஓம் சக்தி அகாடமி (பொன் விழாவில் விருது)
12. தமிழக அரசின் நிதி உதவியுடன் தயாரிக்கப்பட்ட “சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு ” தயாரித்தற்காக, சென்னை சினிமாரசிகர்கள் சங்கமும், தமிழ்நாடு திரைப்பட வரலாறு” தயாரித்தற்காக, சென்னை சினிமா ரசிகர்கள் சங்கமும், தமிழ்நாடு டி.வி.பார்வையாளர் சங்கமும் இணைந்து, விழா எடுத்து கௌரவித்தது.
13. ஜெய்சங்கர் அவர்களால் கீழ்பாக்கம் உடல் ஊனமுற்றவர்கள் இல்லத்தில் கௌரவிக்கப்பட்டார்.
14. வி.ஜி.பி.- தம்ஸ் அப் – அஜந்தா
15 அம்பத்தூர் கலைக்கழகம்
16. ரைசிங் ஸ்டார் பிலிம் விருது(2008).
17. சிவாஜி – பிரபு அறக்கட்டளை சார்பில் சிவாஜி கணேசன் பிறந்த நாளில் கௌரவிக்கப்பட்டார் (2008).
18. CINEMA TODAY சார்பாக விருது (2007)

பத்திரிகைகள் விருது

🎬1. சினிமா எக்ஸ்பிரஸ் விருது
2. தமிழ் மூவிஸ் விருது
3 தினகரன் விருது
4. விக்டரி சினிமா டைரி விருது
5. ரைசிங் ஸ்டார் விருது
6. ஹதராபாத் பிலிம் கிளப் வெள்ளி விழா ஆண்டு விருது
7. தமிழக அரசின் “கலைமாமணி” விருது பெற்றதர்க்கு பாராட்டு விழா
8. சென்னையில் 75 ஆண்டு தெலுங்கு சினிமா கண்காட்சி நடத்தியமைக்கு, தெலுங்கு சினிமா பத்திரிகையாளர் சங்கம் பாராட்டு விழா
9 சூப்பர் சினிமா – வெரைட்டி சினிமா விருது(2008).

டி.வி.சேனல் விருது

🎬1) விஜய் டி.வி.(சாதனையாளர் விருது) (2008)
2) ராஜ் டி.வி.“75 ஆண்டு திரை உலகம் விருது (2008)
3) இந்து டி.வி.(2008)

பிலிம் நியூஸ் ஆனந்தன் 👑பர்த் டே 💐ஸ்பெஷல் ரிப்போர்ட்