தமிழ் சினிமாவின் இசையை, அ.மு., – அ.பி. என்று, அதாவது அன்னக் கிளிக்கு முன்பு, அன்னக்கிளிக்கு பின்பு என்று பிரித்துப் பார்ப்பதுதான் சாமான்ய இசை ரசிகனின் அளவுகோல். அந்தப் படத்தின் மூலமாக வந்தது, தமிழ் சினிமா இசையின் புதிய திறவுகோல்.
கொஞ்சம் விளக்கமாக பஞ்சு அருணாசலம் சொன்னதைக் கேட்டு விட்டு தொடரலாமா?
இப்போதெல்லாம் படம் ஒரு வாரம் ஓடினாலே மாபெரும் வெற்றி என்கிறார்கள். அப்போது 50-வது நாளை கடந்தால்தான் அந்தப் படம் ஓரளவுக்கேனும் வெற்றிபெற்றது என அர்த்தம். வெற்றி விழாக்களை அப்போது வெவ்வேறு ஊர்களில் நடத்துவார்கள். டீமாக அந்த விழாக்களுக்குச் செல்வோம். அப்போது, `எவ்வளவுக்கு வாங்குனீங்க… எவ்வளவு லாபம்?’ என்று தியேட்டர்காரர்களிடம் விசாரிப்பேன். `நல்ல ஷேர் சார். ஒன்றரை லட்சம் வந்துச்சு… ரெண்டைத் தாண்டிடும்’ என்பார்கள். `அடேங்கப்பா… என்னா லாபம்’ என நினைத்துக் கொள்வேன்.
ஆனால், அதே பகுதியில் வெவ்வேறு தியேட்டர்களின் போஸ்டர்களில் `ஆராதனா’ வெற்றிகரமான 20-வது வாரம்’ என்று ஒட்டியிருக்கும். ‘என்னது ஒரு இந்திப் படம் 20-வது வாரமா, அதுவும் கோயம்புத்தூரைத் தாண்டி உள்ள ஒரு சின்ன டவுன்ல இந்த ஓட்டம் ஓடுதே’ என்று அதிர்ச்சியாக இருக்கும். அந்த தியேட்டரில் விசாரித்தால், `நல்ல லாபம் சார். இதுவரை நாலு லட்ச ரூபாய்’ என மேலும் அதிர்ச்சி தருவார்கள். வேறொரு ஊரில், `இந்த தியேட்டர்ல `பாபி’ 150 நாள்களைக் கடந்து ஓடிட்டு இருக்கு’ என்பார்கள். இப்படித் தமிழ்நாடு முழுவதும் இந்தி சினிமாவின் ஆதிக்கம்.
தமிழ்நாடு முழுவதும் எப்படி அந்தப் படங்கள் ஓடின… கதை ஓரளவுக்குப் புரியும்; வசனம் புரியாதே. அந்த நடிகர், நடிகைகளும் அவர்களுக்குப் பரிச்சயம் இல்லாதவர்கள். அப்புறம் எப்படி அவை பட்டிதொட்டி எங்கும் இப்படி ஓடுகின்றன? ஆச்சர்யமாக இருக்கும். தவிர கிராமம், நகரம் வித்தியாசமின்றி எங்கும் இந்திப் பாடல்கள்தான் நீக்கமற நிறைந்து இருந்தன. தமிழ்ப் பாடல்களையே அங்கே கேட்க முடியாது. அதற்கு, ஆர்.டி.பர்மன், எஸ்.டி.பர்மன், லக்ஷ்மிகாந்த் பியாரிலால்… என இந்தி சினிமாவில் இருந்த இசை அமைப்பாளர்களின் புதுமாதிரியான இசைதான் காரணம் எனத் தெரிந்தது.
அதற்கு முன்னரும் இந்தியில் மிகப்பெரிய இசையமைப்பாளர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனாலும், அப்போது அவர்களை மீறி இங்கு தமிழ்ப் படங்கள் ஓட, விஸ்வநாதன் – ராமமூர்த்தி, கே.வி.மகாதேவன் என்ற இரு பெரும் இசை அரசர்களின் செல்வாக்குதான் காரணம். இவர்களின் திறமை, இவர்களின் மீதான மரியாதை 70-களுக்குப் பிறகு குறைந்துவிட்டதா என்றால், இல்லை. ஆனால், அவர்கள் 60-களிலேயே தங்களின் உச்சத்தை அடைந்துவிட்டார்கள். அதனால், எத்தனை படங்களுக்கு இசையமைத்தாலும் கேட்டதையே திரும்பத் திரும்பக் கேட்பதுபோன்ற ஓர் உணர்வு.
ஆனால், இந்திப் பாடல்களில் இளமையான புதுப்புது சவுண்டுகளுடன் கூடிய இசை. அது இளைஞர்களை அலை அலையாக ஈர்த்தது. அதுதான் அவர்களை இந்திப் படங்களையும் பார்க்கத் தூண்டியது. `நம் ரசிகர்கள் ஏதோ ஒண்ணை புதுசா எதிர்பாக்குறாங்க’ என்பது அப்போதுதான் எனக்குப் புரிந்தது. `ஏன் ஒரு நல்ல இசையமைப்பாளரைக் கொண்டுவரக் கூடாது?’ என என் மனதுக்குத் தோன்றியது. அப்படி ஓர் இசையமைப்பாளர் வந்தால்தான், இங்கு ஓடும் இந்திப் படங்களைத் தாண்டி நாம் வெற்றி பெற முடியும், அதன் ஆதிக்கத்தைக் குறைக்க முடியும் என உறுதியாக நம்பினேன். நல்ல இசையமைப்பாளரைத் தேடத் தொடங்கினேன்.
`இது நான் புதுசா போட்ட கேசட்’ என்று இசை வாய்ப்புக்காக யார் வந்தாலும் அவர்களின் இசைக்குக் காது கொடுத்துக் காத்திருந்தேன். `நல்ல நேரம் வரும்போது எல்லாமும் நல்லதாகவே நடக்கும்’ என்பார்களே… அப்படி என் காத்திருப்புக்குப் பலன் கிடைத்தது. அந்த இளைஞன் வந்தான். ஆனால், அவன் இசையை வேறு எவரும் நம்பவில்லை, என்னைத் தவிர. ஆனால், அவன் இசை வெளிவந்த பிறகோ, அவனைத் தவிர வேறு எவரையும் நம்ப ரசிகர்கள் தயாராக இல்லை.
அந்தச் சமயத்தில் `கல்யாணமாம் கல்யாணம்’ படம் தொடங்கியதிலிருந்து கதாசிரியர் செல்வராஜ் என்கூடவே இருந்தார். அவரிடம், `எம்.எஸ்.வி-க்குப் பிறகு இங்கே இசையில் பெரிய வெற்றிடமாகிப்போச்சே…’ என்று அவ்வபோது என் ஆதங்கத்தைப் பகிர்ந்துகொள்வேன். அன்றும் அப்படிப் பேசிக்கொண்டிருந்தேன். `எனக்குத் தெரிஞ்ச ஒரு பையன் இருக்காண்ணே. ராஜானு பேரு. சின்ன வயசுல இருந்தே ஹார்மோனியம் வாசிச்சுப் பழக்கப்பட்டவன். தன் அண்ணனோடு சேர்ந்து நிறைய ஊர்கள்ல கச்சேரிகள் பண்ணியிருக்கான். என் ஃப்ரெண்ட் பாரதிராஜா போட்ட நாடகங்களுக்கு மியூஸிக் போட்டிருக்கான். இப்ப ஜி.கே.வெங்கடேஷ்கிட்ட அசிஸ்டன்ட்டா இருக்கான். அவனுக்குப் படம் பண்ணணும்னு ஆசை இருக்கு. உங்களுக்கு ஓ.கே-ன்னா நான் கூட்டிட்டு வர்றேன்’ என்றார்.
`ஊர் ஊரா சுத்தியிருக்கான்; நாடகங்களுக்கு மியூஸிக் போட்டிருக்கான்; கஷ்டப்பட்டிருக்கான்… நிச்சயமா ரசிகர்களின் பல்ஸ் தெரிஞ்சவனாத்தான் இருப்பான். கேட்டுப் பார்ப்போமே. யார் கண்டா… அமைஞ்சாலும் அமையும்’ – எனக்கு ஒரு பிடிமானம் கிடைத்தது. `சரி நாளைக்கே கூட்டிட்டு வா’ என்றேன்.
மறுநாள் காலை. கோடம்பாக்கம் பாம்குரோவ் ஹோட்டல் அறை. `திறமையான இளம் இசையமைப்பாளரைப் பார்க்கப்போறோம். இன்டஸ்ட்ரியே மாற்றம் காணப்போகுது’ – ஒவ்வோர் இசையமைப்பாளரைச் சந்திக்கும்போது இப்படியான குதூகல மனநிலையில்தான் இருப்பேன். அன்றும் அப்படித்தான்.
செல்வராஜ் வந்தார். `அண்ணே… இவர்தான் ராஜா’ – அறிமுகப்படுத்தி வைத்தார். இன் ஷர்ட் பண்ணிய ஒடிசலான தேகத்துடன் ஒரு பையன் வந்துநின்றான். தழையத் தழையக் கட்டிய வேட்டியும், நெற்றி நிறைய விபூதி குங்குமமுமாக இசையமைப்பாளர்களைப் பார்த்து பழகிய கண்களுக்கு, கவர்மென்ட் ஆபீஸ் குமாஸ்தாபோல இருந்த அந்த இளைஞனை, இசையமைப்பாளர் என என்னால் நம்ப முடியவில்லை. ஹார்மோனியம், கிடார் என ஏதாவது கையில் எடுத்து வந்திருந்தாலாவது நம்பியிருப்பேன். அதுவும் எடுத்து வரவில்லை. ‘ஃபர்ஸ்ட் இம்ப்ரஷன் இஸ் தி பெஸ்ட் இம்ப்ரஷன் என்பார்களே, ராஜா விஷயத்தில் அது பொய்த்துப்போனது.
`வாப்பா… உட்கார்’ என்றேன். உட்கார்ந்தார். இன்றுபோல் அன்றும் ராஜா அதிகம் பேச மாட்டார். லேசாகச் சிரித்தபடி அமைதியாக அமர்ந்து இருந்தார். `செல்வராஜ் சொன்னாரு. ரொம்ப சந்தோஷம். தமிழ்ல நல்ல இசையமைப்பாளர் வரணும்னு ஆசை’ – நான்தான் ஆரம்பித்தேன்.
`சினிமாவுக்கு இசையமைக்கணும்கிறது ரொம்ப நாள் ஆசை. முயற்சி பண்ணிட்டிருக்கேன்’ என்றார்.
`உனக்கு என்ன அனுபவம்?’ என்றேன்.
`அண்ணன்கூட இருந்திருக்கேன். ஓரளவுக்குத் தெரியும். நிறைய பாட்டு எல்லாம் போட்டு வெச்சிருக்கேன்.’
எல்லா கேள்விகளுக்கும் இரண்டு, மூன்று வார்த்தைகளில் வந்துவிழுந்தன பதில்கள்.
`சரி… அந்த ட்யூனை எல்லாம் கேட்டாத்தான் ஒரு முடிவுக்கு வர முடியும். நாளைக்கோ நாளான்னைக்கோ ஃபிக்ஸ் பண்ணிப்போம். வரும்போது ஹார்மோனியம், தபலானு அந்த மாதிரி செட்டப்போட ரெண்டு மூணு பேரா வந்துடுங்க’ என்றேன்.
‘எதுக்கு மத்தவங்க?’ என்றார்.
‘எந்த இன்ஸ்ட்ருமென்ட்ஸும் இல்ல. பாடுறதுக்கு யாரையும் அழைச்சிட்டும் வரலை. எப்படிப் பாடிக்காட்டுவ?’ என்றேன்.
‘நானே பாடுவேன். பாடவா?’ என்றார்.
எனக்கு ஷாக்… ‘ம்ம்… பாடு’ என்றேன்.
பக்கத்தில் சிறிய அறையில் இருந்த மேஜைக்கு இடம்பெயர்ந்தவர், அதில் தாளம் போட்டபடி பாட ஆரம்பித்தார்.
‘அன்னக்கிளி உன்னைத் தேடுதே…’, ‘மச்சானைப் பாத்தீங்களா..?’, ‘வாங்கோண்ணா… வாங்கோண்ணா…’ உட்பட பத்துக்கும் மேற்பட்ட பாடல்களின் இசைக்கோப்புக்கு முந்தைய வடிவமான தத்தகாரத்தில் பாட ஆரம்பித்தார்.
‘ஏதோ வித்தியாசமா இருக்கே…’ – அந்த ட்யூன்களைக் கேட்ட மாத்திரத்தில் என் மனதுக்குள் ஏற்பட்ட உணர்வு. ஆனால், எதுவும் சொல்லவில்லை. ‘இத்தனை பாடல்களைக் கேட்டாரு… ஒண்ணுமே சொல்லலையே…’ என நினைத்தாரோ என்னமோ தெரியவில்லை, ‘அப்ப நான் போயிட்டு நாளைக்கு வரட்டுமாண்ணே?’ – கிளம்பத் தயாரானார்.
‘கொஞ்சம் இரு. இன்னொரு தரம் பாடு’ என்றேன். அப்போதுதான் அவருக்கு தைரியம் வந்தது. திரும்பவும் பாடினார்.
‘நல்லா இருக்கு. நான் சொல்லி அனுப்புறேன்’ என்றதும் கிளம்பிவிட்டார்.
ராஜாவை வழியனுப்பிவிட்டு வந்த செல்வராஜ், ‘எப்படிண்ணே இருக்கு?’ என்றார். ‘வித்தியாசமா இருக்கு. நான் நினைச்சதைவிட நல்லா வர்றதுக்கான சான்ஸ் இருக்கு. கொஞ்சம் ஆர்க்கெஸ்ட்ரா செட்டப் எல்லாம் வெச்சுக் கேட்டா, இன்னும் கொஞ்சம் நல்லா வரும்னு நினைக்கிறேன்’ என்றேன்.
‘அவன் நல்லா பண்ணுவாண்ணே’ என்றார் செல்வராஜ். (கட்டிங் கண்ணையா)
அந்த அன்னக்கிளிக்கு முன்பு வரை, நம்மூர் டீக்கடைகளில் கூட ஹிந்திப் பாடல்களே முழங்கிக் கொண்டிருந்தன. அந்த ஹிந்திப் பாடல்களை ரயிலேற்றி, மும்பைக்கே அனுப்பி விட்டு, நம்மூரின் இசையை நாம் கேட்கச் செய்த வகையில், அன்னக்கிளி, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த படமாகத் திகழ்கிறது. சரித்திரம் படைத்த இசையின் சொந்தக்காரர் இளையராஜா!
’அன்னக்கிளி’… மிக மிக எளிமையான சாதாரணமான, எல்லோருக்கும் புரிந்த, தெரிந்த கிராமத்துக் கதைதான். அன்னக்கிளியாக சுஜாதா, மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். வாத்தியார் தியாகுவாக சிவகுமார், படாபட் ஜெயலட்சுமி, சுஜாதாவின் முறைமாமனாக ஸ்ரீகாந்த், செந்தாமரை, தேங்காய் சீனிவாசன் என அவரவரும் அவரவருக்கான முத்திரைகளை வெகு அழகாகப் பதித்திருப்பார்கள். ஊருக்குப் புதிதாக வரும் வாத்தியார் சிவகுமாருக்கு, பல விஷயங்களில் வாத்தியாராக இருந்து கற்றுத் தரும் சுஜாதா… இந்த இருவருக்குள்ளும் இருக்கிற காதலை இருவருமே சொல்லிக்கொள்ளவில்லை. அதற்குள் நாட்டாமையின் மகளுக்கும் சிவகுமாருக்கும் திருமணமாகிவிடுகிறது. ‘சொல்லித் தொலைச்சா என்னவாம்’ என்று ஏங்கச் செய்து, தவிக்கவிட்டு, கதறடித்திருப்பதில்தான் திரைக்கதையின் வெற்றியே அடங்கியிருக்கிறது. தேவராஜ் – மோகன் எனும் இரட்டையரின் இயக்கம், மிகச் சிறப்பு. அதிலும் கண்ணகி படமும் மதுரை எரிப்பும் டூரிங் தியேட்டர் எரிவதும் என பின்னப்பட்ட க்ளைமாக்ள் ஏற்படுத்திய தாக்கம் கொஞ்சநஞ்சமல்ல! குறிப்பாக, முழுக்க முழுக்க கிராமத்தில் படமாக்கியிருப்பதும் அந்த லொகேஷனும் கொள்ளை அழகு.
கிராமத்தில், யார் வீட்டில் என்ன விசேஷமென்றாலும் ‘கூப்பிடு அன்னக்கிளியை’ என்பார்கள். அவரும் தன் வீட்டு விசேஷம் போல், எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வார். அன்னக்கிளியின் ஒரே சந்தோஷம், பாட்டுதான்.
அங்கே கூவுகிற குயில்களையும் குருவிகளையும் துணைக்குச் சேர்த்துக்கொண்டு, அவர் பாடுகிற பாடல்கள்தான், அன்னக்கிளி கதாபாத்திரத்தை, நமக்குள் சிம்மாசனமிட்டு உட்கார வைத்தது. படத்தையும்தான்!
’அவள் ஒரு தொடர்கதை’க்குப் பிறகு, ‘அவர்கள்’ படத்துக்குப் பிறகு, அதேபோல் கனமானதொரு கதைக்களமும் கேரக்டரும் சுஜாதாவுக்கு. அங்கே நகர வாழ்க்கையில் கவிதாவாக வாழ்ந்தவர், அனுவாக வாழ்ந்தவர்… இங்கே ’அன்னக்கிளி’யில் கிராமத்தில் புகுந்து புறப்பட்டிருப்பார்.
1976ம் வருடம் மே மாதம் இதே 14இல் வெளியான அன்னக்கிளி, கோடையின் மிகப்பெரிய விருந்தாயிற்று. அடிக்கிற வெயிலுக்கு படத்தின் இசையே நிழலாக அமைந்து, ரசிகர்களுக்கு மிகச்சிறந்த இளைப்பாறலைக் கொடுத்தது.
’இசை – இளையராஜா (அறிமுகம்),’ என்று டைட்டில் கார்டில் போடும்போது, பெரிய பரபரப்பெல்லாம் வரவேற்பெல்லாம் படம் வெளியான போது இல்லைதான். ஆனால் படம் 75 நாள், நூறாவது நாள் என தாண்டுகிற போதெல்லாம், இளையராஜா பெயர் டைட்டிலில் வரும்போது, கூட்டம் விசிலடித்து வரவேற்றது. கைதட்டி ஆர்ப்பரித்தது.
பஞ்சு அருணாசலத்தின் எஸ்.பி.டி பிலிம்ஸ் தயாரிப்பில் வந்தது அன்னக்கிளி. புதிய இசையை சினிமாவுக்குள் கொண்டு வர வேண்டும் என்று விரும்பியவர் முதலில் விஜயபாஸ்கரை தன் படங்களில் பயன்படுத்தி வந்தார். ’மயங்கிறாள் ஒரு மாது’ படமெல்லாம் பாடல்கள் ஹிட்டாகி, எப்போதும் முணுமுணுக்கும் பாடல்களின் வரிசையில் இடம்பிடித்தன. ஆனாலும் ஒரு தேடல் பஞ்சு அருணாசலத்துக்குள் இருந்தது. அதன் விளைவுதான்… அன்னக்கிளியும் இளையராஜாவும்!
ஆனால் ஆர்.செல்வராஜின் கதை ஓகே செய்யப்பட்டு, இளையராஜாவுக்கு பெயரும் அட்வான்ஸூம் கொடுத்த பிறகு, விஜயபாஸ்கர் தரப்பில் இருந்து தயாரிப்பாளருக்கு, ‘என்னங்க இது, நல்ல காம்பினேஷன். ஏன் மாத்துனீங்க’ என்கிற கேள்விகள். பஞ்சு அருணாசலத்தின் சகோதரர்கள், ‘தேவையா இது. விஜயபாஸ்கரே பண்ணட்டும்’ என்று தயாரிப்பாளர்களுக்குள்ளேயே கருத்து வேறுபாடுகள்; மாறுபாடுகள். ஆனால் பஞ்சு சார் உறுதியாக இருந்தார். ‘இளையராஜாதான்’ என்று அடித்துச் சொன்னார். அப்படித்தான் அன்னக்கிளி மூலமாக, தமிழ் கூறும் திரையுலகிற்கு இளையராஜா கிடைத்தார்.
எல்லாப் பாடல்களும் கம்போஸ் செய்து, ஓகே செய்யப்பட்டு, ரிக்கார்டிங் நாளும் வந்தது. ‘ரெடி…’ என்று எண்களைச் சொல்லி முடிக்கவும், பதிவுக்கான பட்டனை அழுத்தவும் மின்சாரம் கட்டாகவும் சரியாக நிகழ்ந்தது. எல்லோரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.
அதன் பிறகு, கரண்ட் வந்ததும் மீண்டும் ரிக்கார்டிங் தொடங்கி நடைபெற்றது. பதிவானதைப் போட்டுப் பார்க்கலாம் என்று ரீவைண்ட் செய்து பார்த்தால், டேப் சுற்றிக்கொண்டே இருந்தது. ஆனால் இசையோ பாட்டோ வரவில்லை. அதாவது எதுவுமே பதிவாகவில்லை. ஆனால் பஞ்சு சார் ஆறுதல் சொல்லி, அந்தத் தடைகளையெல்லாம் பொருட்படுத்தாமல், இயங்கச் செய்தார். பாடல்களை எடுத்துக் கொண்டு ஷூட்டிங் சென்று, ஒரே அழுத்தில் படத்தை எடுத்தார்கள்.
கதையை உள்வாங்கி, சிவகுமாரின் நடிப்பும் அவரின் முகபாவமும் இயலாமையும் நம்மைக் கலங்கடிக்கும். ‘மச்சானைப் பாத்தீங்களா’ பாட்டுக்கு தியேட்டரே எழுந்து நின்று ஆட்டம் போட்டது. இடைவேளைக்குப் பிறகு, சுஜாதாவின் நடிப்புடன் தியாகமும் சேர்ந்துகொள்ள, அந்த அன்னக்கிளிதான் மனதில் நிறைந்திருப்பாள். ஸ்ரீகாந்தின் கேரக்டரும் அவரின் மென்மையான மனம் கொண்ட கதாபாத்திரமும் மிகச்சிறந்த நடிப்பை அவரிடமிருந்து தந்தன.
அந்த டூரிங் டாக்கீஸ் க்ளைமாக்ஸ், ரசிகர்களை பதைபதைக்க வைத்தது. தேங்காய் சீனிவாசனை வில்லனாகவும் ஏற்றுக்கொண்டார்கள் ரசிகர்கள். ஆர்.செல்வராஜின் கதைக்கு, தெளிவான திரைக்கதை அமைத்து, எளிமையான வசனங்களையும் இனிமையான பாடல்களையும் தந்திருப்பார் பஞ்சு அருணாசலம்.
தமிழின் கிராமத்துக் கதைக்கு, பட்டிதொட்டியில் இசைக்கப்படுகிற வாத்தியங்களையும் குயில்களையும் குருவிகளையும் கருவியாக்கி, இசையை, படம் முழுவதும் விரவிவிட்டிருக்கும் இளையராஜாதான்… அன்னக்கிளியின் நாயகன்!
‘அன்னக்கிளியே உன்னைத் தேடுதே’, ‘மச்சானைப் பாத்தீங்களா’, ‘சொந்தமில்லை பந்தமில்லை’, ’அடி ராக்காயி மூக்காயி…’ என ஒவ்வொரு பாடலும், அன்னக்கிளிக்கு வலு சேர்த்தன. மிகக்குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட அன்னக்கிளி, மிகப்பெரிய வசூலைப் படைத்தது.
இளையராஜாவுக்கு, பஞ்சு அருணாசலம் கிடைத்தார். பஞ்சுவின் மூலம் அன்னக்கிளி வாயிலாக, நமக்கு இளையராஜா கிடைத்தார். ஆகவே, ராஜா இருக்கும் வரை, இசை இருக்கும் வரை… நம் மனதுக்குள் ‘அன்னக்கிளி’யும் பறந்துகொண்டே இருக்கும்.
ஆக 1976-ம் ஆண்டு மே 14-ம் தேதி ‘அன்னக்கிளி’ வெளியான நாள். இளையராஜா நமக்குக் கிடைத்து இன்றுடன் 47 ஆண்டுகளாகின்றன.