பாட்டு ராணி எல்.ஆர்.ஈஸ்வரி!

இப்பத்திய குத்துபாட்டு போன்ற துள்ளல் பாடல்களுக்கு ஆரம்ப காலத்தில் பேர்போனவர் பழம் பெரும் பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி. ‘நல்ல இடத்து சம்மதம்’ என்ற படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமான இவர், 1961ஆம் ஆண்டில் வெளியான ‘பாச மலர்’ படத்தில் பாடிய “வாரயென் தோழி..” என்ற பாடலின் மூலம் பட்டி தொட்டியெல்லாம் பிரபலமடைந்தார். துள்ளல் பாடலுக்கு பேர் போனவராக இருந்தாலும், காதோடுதான் நான் பேசுவேன் என்ற மெல்லிசை பாடல்களையும் பாடி அசத்திய இவர் பாடிய மற்றொரு பாடலான “பட்டத்து ராணி..” என்ற பாடலை இந்தியில் பாடகி லத்தா மங்கேஸ்கர், “பாட கடினமாக இருக்கிறது இதை அவர் பாடியது போல என்னால் பாட முடியாது” என்று கூறினாராம்.

“முத்துக்குளிக்க வாரீகளா…”,
“புத்தி சிகாமணி பெற்ற பிள்ளை…”,
“ஆடவரரெல்லாம் ஆட வரலாம்…”,
“மலரென்ற முகம் என்று..” உள்ளிட்ட பல
பாடல்கள் இன்றும், என்றும் இசைப் பிரியர்களின் மனதில் என்றென்றும் நிற்கும். அத்தகைய அற்புத இசையினை அளித்த எல்.ஆர்.ஈஸ்வரி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என்று 30000 பாடல்களை பாடியிருக்கிறார். சினிமா பாடல்கள் மட்டுமின்றி பக்திப் பாடல்கள் உலகிலும் தனக்கென்று தனி இடத்தை பிடித்த இவரது, “செல்லாத்தா எங்க மாரியாத்தா” என்ற பாடல் கேற்காத பகுதிகளே தமிழகத்தில் இருக்க முடியாது.

கலைமாமணி, நந்தி விருது, பாரத கான பூஷனி, ஆஷா போன்ஸ்லேயின் வாழ்நாள் சாதனையாளர் விருது, பிலிம் பேர் விருது போன்ற பல விருதுகளைப் பெற்ற இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் சிறந்த பாடகிக்கான விருதினை ஒன்பது முறை பெற்றிருக்கிறார்.

இப்படி தனது இசையால் அனைத்து தரப்பு மக்களையும் ஈர்த்த எல்.ஆர்.ஈஸ்வரி பிறந்த நாளை யொட்டி சினிமா பிரஸ் கிளப் இணையத்துக்காக ஸ்பெஷல் டெஸ்க்மேன் கட்டிங் கண்ணையா அனுப்பிய சிறப்புச் செய்தி இதோ

* உங்க இயற்பெயர் என்ன?

லூர்து மேரி ராஜேஸ்வரி

* பாடிய முதல் பக்திப்பாடல்?

குன்னக்குடி இசையில் “உலகாளும் உமையவளே!’

* உங்களுடைய முதல் பாடல் ரேடியோவில் எந்த நிலையத்தில் ஒலிபரப்பப்பட்டது? அதைக் கேட்கும்போது உங்களுக்கு எப்படி இருந்தது?

நான் பாடிய முதல் பாடல் ரேடியோவில் ஒலிபரப்பப்பட்ட போது என்னிடம் ரேடியோவே இல்லை. பக்கத்து வீடுகளில் ரேடியோ வைக்கும்போது, அதை உரக்க வைக்கச் சொல்லிக் கேட்பேன். எப்போதாவது என் பாட்டை ஒலிபரப்புவார்கள்.அதைக் கேட்டுச் சந்தோஷத்தில் நான் துள்ளிக் குதிப்பேன்.பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் ரேடியோ வாங்கக்கூடிய வசதி எனக்கு ஏற்பட்டது. நான் மிகவும் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவள். இன்று என் சொந்தப் பங்களாவில் ஓரளவிற்கு வசதியாக வாழ்கிறேன் என்றால், அதற்கு என் தெய்வம் திரு. கே.வி. மகாதேவன் அவர்கள்தான் காரணம். நல்ல இடத்து சம்பந்தம் படத்தில் என் திறமையை நம்பி நான்கு பாடல்கள் பாடும் சந்தர்ப்பத்தைத் தந்தார் அவர். அதுதான் என் முதல் படம்.

*எத்தனை மொழிகளில் பாடியிருக்கிறீர்கள்?

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, துளு, கொங்கணி ஆகிய மொழிகளில் பல பாடல்கள் பாடியிருக்கிறேன். நன்ன கண்ட எல்லி (என் கணவன் எங்கே) என்ற கன்னடப் படத்தில் ஒரே பாடலில் 14 மொழிகளில் பாடியிருக்கிறேன்.

*உங்கள் மேடைக்கச்சேரிகளில் நேயர்களால் அதிகமாகக் கேட்கப்படும் விருப்பப்பாடல்?

பெரும்பாலும் பக்திபாடல்கள்தான்! திரை இசைன்னா, எலந்தப்பழமும் “கலா சலா கலசலா’வும்!

* ஜெயலலிதாவுக்குப் பாடிய முதல் பாடல்?

நீ என்பதென்ன… நான் என்பதென்ன? (வெண்ணிற ஆடை)

* இஷ்டதெய்வம்?

வேளாங்கன்னி மாதா

* பிடித்த ராகம்?

சண்முகப்ரியா, “வாராய் என் தோழி’ அமைத்தது அதில்தான்.

* பிடித்த உணவு?

மீன் வகையில் எல்லாமே!

 

எல்.ஆர்.ஈஸ்வரி பிறந்த நாள் பதிவு