சமந்தாவுக்கும் நாக சைதன்யாவுக்கு கல்யாண வைபோக கோலாகலம்!

நடிகர் நாக சைதன்யாவுக்கும், நடிகை சமந்தாவுக்கும் இன்று இந்து முறைப்படி கோவாவில் திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமண விழாவில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் திரையுலக நண்பர்கள் என 150 பேருக்கு மட்டுமே அழைப்பு கொடுக்கப் பட்டுள்ளது. கோவாவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று இந்து முறைப்படியும், நாளை கிறிஸ்துவ முறைப்படியும் இவர்களது திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமணத்திற்கு சுமார் ரூ.10 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த திருமண விழாவைத் தொடர்ந்து வரும் 10ம் தேதி ஹைதராபாத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர்.நாகார்ஜூனாவின் மகனான நாகசைதன்யா இந்து மதத்தை சேர்ந்தவர். தமிழ் நடிகையான சமந்தா கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்வதில் தீவிரமாக இருந்தனர். இதையடுத்து, இரு குடும்பத்தினரும் இந்த திருமணத்துக்கு ஒப்புக் கொண்டனர். இந்து, கிறிஸ்தவ முறைப்படி இந்த திருமணத்தை கோவாவில் நடத்துவது என்றும், அதில் இரண்டு குடும்பத்தினர் மட்டும் பங்கேற்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

கோவாவில் உள்ள டபிள்யூ தங்கம் விடுதியில் சமந்தா – நாகசைதன்யா திருமணம் நடைபெறுகிறது. இன்று இந்து முறைப்படி திருமணம் நடக்கிறது. நாளை கிறிஸ்தவ முறைப்படி இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். இதற்காக கடந்த ஒருவாரமாக கோவாவில் திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. திருமண செலவு முழுவதையும் நாக சைதன்யா குடும்பத்தினர் ஏற்றுக் கொண்டுள்ளனர். வீடியோ, புகைப்படம் எடுக்கும் பொறுப்பை சமந்தா குடும்பத்தினர் கவனிக்கிறார்கள். திருமணத்தையொட்டி, சமந்தா, நாகசைதன்யா இருவரும் 3 நாட்களுக்கு முன்பே கோவா சென்று விட்டனர். அங்குள்ள டபிள்யூ தங்கும் விடுதியில் நடைபெறும் திருமண ஏற்பாடுகளை நேரில் கண்காணித்து வருகிறார்கள். கோவா கடற்கரைக்கு இருவரும் சென்று புகைப்படங்கள் எடுத்துள்ளனர்.

இன்று நடைபெறும் இந்த திருமணத்தில் நாக சைதன்யாவின் தாயார், தந்தை நாகார்ஜூனாவின் உறவினர்கள் ராணா, வெங்கடேஷ், சுரேஷ்பாபு, நாக சைதன்யாவின் தாத்தா ராமா நாயுடுவின் மனைவி, நாகார்ஜூனாவின் மனைவி அமலா, இவர்களுடைய மகன் அகில் மற்றும் சமந்தா குடும்பத்தினர் உள்ளிட்ட உறவினர்கள் 183 பேர் மட்டுமே பங்கேற்கிறார்கள். சமந்தா திருமண புடவையாக, நாக சைதன்யாவின் பாட்டியின் திருமண சேலையை கட்டுகிறார். இது மும்பையில் நவீன முறைப்படி டிசைன் செய்து மெருகேற்றப்பட்டுள்ளது.

திருமணத்துக்காக சமந்தாவுக்கு விலை உயர்ந்த நெக்லஸ் வாங்கப்பட்டுள்ளது. இந்த நகை அணிந்த புகைப்படத்தை சமந்தா இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இதற்கு அவரது ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது. திருமணம் சிறப்பாக நடைபெறுவது குறித்து சமந்தா, நாகசைதன்யா இருவரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.